LOADING

Type to search

கனடா அரசியல்

வீணைமைந்தன் என்னும் கனடா வாழ் ஈரூடகவாசியின் இரை மீட்டல்

Share

பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின் பிரிவேக்கக் குறிப்புகள்( nostalgia). புலம்பெயரும் போது, தான் விட்டுப் பிரிந்த ஊரின் அதே நினைவுகளோடு முதலாம் தலைமுறைப் புலம் பெயரியான வீணை மைந்தன் நாடு திரும்புகிறார். வடக்கின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்றின் சிறு பகுதியாக்கப்பட்டு, சிதைந்து போய்க் கிடக்கின்றது அவருடைய தாய்ப் பட்டினம், காங்கேசன் துறை.

அவருடைய ஊர் மட்டுமல்ல எல்லாத் தமிழர்களின் ஊர்களும் அப்படித்தான்.மீளக் குடியமர வரும்போது ஊரின் உருவமே மாறியிருக்கும்.போர் கிராமங்களின் புவியியல் அமைப்புகளை மாற்றியமைத்து விட்டது.ஒரு கிராமம் அதன் இயல்பான வளர்ச்சி போக்கில் படிப்படியாகக் கட்டியெழுப்பிய தனியார் கட்டடங்கள் பொதுக் கட்டடங்கள், வேலிகள்,எல்லை மதில்கள்,தெருக்கள், கிணறுகள், வாய்க்கால்கள் அனைத்தையுமே ஒரு படை நடவடிக்கை சிதைத்து விடுகிறது. நிலத்தைக் கைப்பற்றிய படை தனது ராணுவ நோக்கு நிலையில் இருந்து கிராமங்களை ஒரு புதிய ஒழுங்குகள் கொண்டு வருகிறது.

அந்த ஊரில் இயல்பாகத் தோன்றிய வீதிகளும் வேலிகளும் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டு அவை ஒரு பெரிய ராணுவ குடியிருப்பின் பகுதிகளாக மாற்றப்படுகின்றன. ஒரு மிகப்பெரிய ராணுவ வேலிக்குள் விழுங்கப்பட்ட சிறிய கிராமமானது அதன் புவியியல் தனித்துவத்தை, நூதனத்தை, இயல்பை இழந்து விடுகிறது.வீணை மைந்தனின் ஊருக்கும் அதுதான் நடந்தது

எல்லா மீளக் குடியமரிகளுக்கும் அது ஒரு பொதுவான அனுபவம். ஊருக்கு திரும்பும் பொழுது வீடு இருந்த இடத்தில் ஒரு கற்குவியல் இருக்கும்.அல்லது ஒரு படைத் தளபதியின் பணிமனையாக,வசிப்பிடமாக வீடு மாற்றப்பட்டிருக்கும்.அல்லது வீடு இருந்த இடத்தில், ஒரு அகற்றப்பட்ட காவலரணின் மிச்சங்கள் சிதறிக் கிடக்கும்.வேலி அல்லது சுற்றுமதில் இருக்காது. வீதி இருந்த இடத்தில் ஒரு மைதானம் இருக்கும். மைதானம் இருந்த இடத்தில் ஒரு பயிற்சித் தளம் இருக்கும். கிணறு இருந்த இடத்தில் வேறு ஏதோ ஒன்று இருக்கும். கோயில் இருந்த இடத்தில் ஒன்றுமே இராது அல்லது சில சமயம் ஒரு புத்தர் சிலை இருக்கும். சில சமயம் வீடு இருக்காது; ஆனால் இடம்பெயரும் போது வீட்டைப் பூட்டி எடுத்துக் கொண்டு வந்த திறப்பு மட்டும் கையில் இருக்கும்.

சில அல்லது பல ஊர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு; எல்லைகள் மாற்றப்பட்டு; ஒரு பெரிய படைத்தளத்தின் பகுதியாக மாற்றப்பட்டிருக்கும். ஊர்களின் பெயர்ப் பலகைகள் இருந்த இடத்தில், இன்ன படைத்தளத்துக்கு அல்லது இன்ன படைப்பிரிவுக்கு போகும் வழி என்று கூறும் குறிகாட்டிப் பலகை இருக்கும். அதாவது ஊர்களுக்கும் தெருக்களுக்கும் ராணுவப் பெயர்கள் கிடைத்திருக்கும். மிஞ்சிய வேலிகளில் ஜி.பி.எஸ். குறியீடு இருக்கும்.

அப்படித்தான் வீணை மைந்தன் ஊருக்குத் திரும்பியபொழுது அவருடைய கிராமமும் இருந்தது. ஏற்கனவே பிரிவேக்கம் (nostalgia). தாகத்தோடு ஊரைப் பார்க்க வந்தவருக்கு உருமாறிய சிதைந்த ஊர்தான் காணக் கிடைக்கின்றது.

அது ஒரு சாதாரண ஊர் அல்ல. ஈழத் தமிழர்களின் அரசியல் பொருளாதார வாழ்வில் அதற்கு மகத்தான இடம் உண்டு. காங்கேசன் துறை. அதற்கு ஓர் ஐதீக முக்கியத்துவம் உண்டு. தவிர வங்கக் கடலில் அருகருகே அமைந்திருந்த காங்கேசன் துறை;மயிலிட்டி;பருத்தித் துறை ஆகிய மூன்று துறைமுகங்களும்,போருக்கு முந்திய காலங்களில்,முழு இலங்கை தீவினதும் மீன் உற்பத்தியில் 45 விகிதமான உற்பத்தியை வழங்கின.ஆனால் இன்று காங்கேசன் துறைப் பட்டினமே பொலிவிழந்து காணப்படுகின்றது.

அத்துறைமுகப் பட்டினத்தில் என்னென்னவெல்லாம் இருந்தன;யார் யாரெல்லாம் பேரோடும் புகழோடும் இருந்தார்கள்;என்றெல்லாம் நினைந்து நினைந்து வீணை மைந்தன் துயருறுகிறார்.அவர் விட்டுப் பிரிந்த ஊர் இப்பொழுது இல்லை.அவர் விட்டுப் பிரியும் போது இருந்த மனிதர்களும் பெரும்பாலும் இப்பொழுது இல்லை.

இப்பொழுது அவர் ஒரு ஈருடக வாசி (Amphibian). பெரும்பாலான முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள் அப்படித்தான். விட்டுப் பிரிந்த தாயகத்துக்கும் குடியேறிய புதிய நாட்டுக்கும் இடையே இரண்டாகக் கிழிபடும் ஒரு தலைமுறை.அந்த பிரிவேக்கந்தான் ஈழப் போரின் நிதி ஊக்கமாகவும் இருந்தது. இப்பொழுதும் தமிழரசியலில் அது நிதியூக்கந்தான்.

வீணை மைந்தனைப் போல பல ஈரூடக வாசிகளான முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகள் கிராமங்களுக்கு திரும்பி வருகிறார்கள். தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தங்கள் உயிரை விட ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்பொழுது நடுத்தர வயதையும் கடந்த முதியவர்கள்.அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்கள் அனுபவிக்கும் மருத்துவ வசதிகளை அவர்கள் இலங்கையில் கற்பனை செய்ய முடியாது. தங்களுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகளிடமிருந்து தங்களைப் பிடுங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பவும் முடியாது.

எனினும் ஊருக்கு வருகிறார்கள்.பழைய நினைவுகளை இரை மீட்கிறார்கள்.குளிர் காலங்களில் புலம்பெயரும் ஈருடகப் பறவைகள் அவர்கள். அப்படி ஒரு ஈருடகப் பறவையின் பிரிவேக்கக் குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.

வீணை மைந்தன் ஊருக்கு திரும்பி, ஒரு புதிய வீட்டைக் கட்டத் தொடங்க, பலாலி விமான நிலையத்தில் மீண்டும் விமானங்கள் பறக்கத் தொடங்கி விட்டன.காங்கேசன் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு ஒரு படகுச் சேவை தொடங்கியது.பின் நிறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் அது மீண்டும் தொடங்கக்கூடும்.

காங்கேசன் துறை எனப்படுவது வட பிராந்திய படைத்துறைக் கட்டமைப்பின் பிரதான துறைமுகங்களில் ஒன்று.வட கட்டளைப் பீடத்தின் இதயத்தில் ஒரு வான் வாசலையும் கடல் வாசலையும் திறப்பது என்பது அதன் விளைவுகளின் அடிப்படையில் கூறின் ராணுவ மயநீக்கந்தான். அப்படிப் பார்த்தால் காங்கேசன் துறையிலிருந்தும் பலாலியிலிருந்தும் இரண்டு பயண வழிகள் தமிழகத்தை நோக்கித் திறக்கப்படுவது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு விருப்பமான ஒன்றாக இருக்குமா?அதிலும் குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் ஒரு பகுதியாக தமிழகப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பின்னணியில், இவ்வாறு இரண்டு வழிகளின் மூலம் வடபகுதியானது தமிழகத்துடன் பிணைக்கப்படுவது, எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

பலாலி விமான நிலையமும் காங்கேசன் துறைமுகமும் யாழ்ப்பாணத்தின் சர்வதேச வாசல்களாக விஸ்த்தரிக்கப்படுமாக இருந்தால், வீணை மைந்தனின் தாய்ப் பட்டினமான காங்கேசன் துறை அது இழந்த செழிப்பை மீண்டும் பெறும்.

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன்

பங்குனி 2024, யாழ்ப்பாணம்.