ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்ததுவப் பண்புகளைக் கொண்ட ஒரு தலைவரோ அன்றி ஒரு தலைமையோ இல்லாதது கவலைக்குரியதே!
Share
யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டு மே18க்கு பின்னரான சூழலில் இருந்து இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சிந்தனைகள் எதுவும் மற்ற மந்தைக் கூட்டங்களாகவே மாறி விட்டார்கள். அதற்கு காரணம் அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்ததுவப் பண்புகளைக் கொண்டு வழி நடத்தக் கூடிய ஒரு தலைவரோ அல்லது ஒரு தலைமையோ இல்லாததே இதற்கு முழுக் காரணம்.
எமது தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரைப் பார்த்து இன்னொருவர். அவரைப் பார்த்து மற்றவர்… என அனைவருமு ஓரே நோக்கமும் சுயநலமும் கொண்டவர்களாக மாறிவிட்டார். அவர்களில் சிலர் அரசாங்கம் மற்றும் இந்தியா .அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சன்மானமாக பணத்தையும் சொத்துக்களையும் பெறுகின்றவர்களாக மாறிவிட்டார்கள். இதனால் அவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தம்மைப் பற்றியும் தமது குடும்பங்களைப் பற்றியே சிந்திப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
இவ்வாறிருக்கையில். தகுந்த தலைவர்கள் இல்லாத நிலையில். ‘பெற்றோர் இல்லா பிள்ளைகள் எவ்வாறு அனாதைகளாக கணிக்கப்படுகின்றார்களோ, அதைப்போன்று. இலங்கையில் என்றும் இல்லாதவாறு மதவாதம் புத்த பகவானின் பெயரால் கொடி கட்டிப் பறக்கின்றது. இதற்கு தக்க சான்று அண்மைய காலங்களில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்கு நாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மதவாதம் சார்ந்த சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் அடக்கு முறைகளை கூறி விடலாம்.
உண்மையில் வடக்கு – கிழக்கில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மதம் சார்ந்த சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் அடக்கு முறைகளை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுக்க வில்லை.
இதற்கு உதாரணம் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அண்மையில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் மதவாத அடக்கு முறைக்கு எதிராக நல்லூர்க் கந்தன் ஆலயச் சூழலில் அறவழிப் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். அதற்கு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக அரிதாகவே இருந்துள்ளது என்பதை கண்கூடாகக் காணக் கூடியதாக இருந்தது.
யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டு மே18க்கு பின்னரான சூழலில் இருந்து இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் பெரும் சிந்தனைகள் எதுவும் மற்ற மந்தைக் கூட்டங்களாகவே மாறி விட்டார்கள். அதற்கு காரணம் அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்ததுவப் பண்புகளைக் கொண்டு வழி நடத்தக் கூடிய ஒரு தலைவரோ அல்லது ஒரு தலைமையோ இல்லாததே இதற்கு முழுக் காரணம்.
ஈழத் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அரசியல் கட்சிகளினுடைய தலைமைகள் மக்களை அரசியல் ரீதியிலான ஒரு தெளிவான கொதி நிலையில் வைத்திருக்கத் தவறியமை எதிர்காலத்தில் பல அறவழிப் போராட்டங்களை ஈழத் தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்தாலும் மண்ணை கவ்வும் நிலைக்குத் தள்ளப்படும் என ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
ஈழத் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான பொறுப்பற்ற விவாதங்களும் கருத்து முரண்பாடுகளும் ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைக்கான தீர்வை காலம் கடந்தும் இன்னும் தாமதமாக்கும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் முதலில் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கு இடையிலான குடும்பிப்பிடி சண்டைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மாறி மாறி ஆட்சிக்கு வரும் பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரம் இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு ஈழத் தமிழர்களை இனவாத மற்றும் மதவாத ரீதியாக ஒடுக்குவதை இன்னும் தீவிரப்படுத்தும் என்பதை எளிதில் எவரும் மறுத்து விட இயலாது.
ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கோணத்திலும் ஈழத் தமிழ் மக்கள் இன்னொரு கோணத்திலும் செயற்ப்பட்டால் காலபோக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் எமது வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை நாம் இனவாதம் என்ற பெயரிலும் மதவாதம் என்ற பெயரிலும் பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்திடம் படிப்படியாக இழக்கும் சூழலே ஏற்படும்.
தமிழரசுக் கட்சி தந்தை செல்வாவுக்கு பின் சிறந்த தலைமைத்துவமான ஒரு தலைவரை இன்று வரை கொண்டிருக்க வில்லை. இது தமிழர்களின் அரசியல் ரீதியான எதிர்கால விமோசனத்துக்கு பெரும் தடைக் கல்லாகும். குரல் கொடுப்பவன் தலைவனல்ல. மக்களுக்காக தன்னை அர்பணித்து களத்தில் செயற்படுபவனே சிறந்த தலைவன் என்பது உலகின் தலை சிறந்த அரசியல் தத்துவமாகும்.
பின் கதவால் பௌத்த சிங்கள பேரினவாத அரசிடம் பெட்டிகளை வாங்கி தங்கள் கஜானாக்களை நிரம்பும் தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை ஈழம் கார் இருளில் மூழ்குவதை படைத்தவனாலும் தடுக்க முடியாது என்பதை ஈழத் தமிழர்கள் தங்கள் கேலிக்கைககளையும் களியாட்டங்களையும் விடுத்து சிறிதளவாவது சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரசியல் தலைவர்களையும் தலைமைகளையும் தன் தீர்க்க தரிசனத்தின் மூலம் முன்னரே உணர்ந்துதான் தந்தை செல்வா தனது செயற்பாடுகளை குறைத்துக்கொண்டு சாகும் வரை மௌனமாக இருந்தார் என்பதே உண்மை.
சாம் – ரமேஸ்குமார்