“கனடாவில் தன்னை ஒரு கலை இலக்கியவாதியாக தொடர்ச்சியாக காட்சிப்படுத்திக் கொண்டிருப்பவர் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா ஆவார்”
Share
திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் புகழாரம்
1990ம் ஆண்டு முன்னர் கனடாவில் பல்வேறு காரணங்களால் குடியேறிய ஈழத்தமிழர்கள் மொன்றியால் மாநகரில் தான் வந்திறங்கினார்கள். அங்கு அவர்கள் ஒற்றுமையாக தங்கள் புலம்பெயர் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் த ங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் அவர்கள் கால்களைப் பதிக்கத் தவறவில்லை. நான் எனக்கு பிடித்தமான வானொலி மற்றும் நடிப்புத்துரையில் ஈடுபாடு காட்டினேன். நண்பர் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களோ தனக்கு பிடித்தமான துறையாக இருந்த எழுத்து மற்றும் கவிதை சினிமா இலக்கியம் ஆகியவற்றில் தனது கவனத்தைச் செலுத்தினார். அந்த பாதையில் கடந்த 35 வருடங்களாக கனடாவில் தன்னை ஒரு கலை இலக்கியவாதியாக தொடர்ச்சியாக காட்சிப்படுத்திக் கொண்டிருப்பவர் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா ஆவார். எனவே அவரை நாங்கள் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும்’
இவ்வாறு ஸ்காபுறோவில் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் எழுதிய ‘திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் ரொறன்ரோ ஈஸ்ட்எப்எம் வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் புகழாரம் சூட்டினார்.
ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ‘திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவினை நன்கு அறியப்பெற்ற தொகுப்பாளர் சாந்தினி சிவகுமார் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அன்றைய தினம் பிற்பகல் 1.30 தொடக்கம் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழா எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடகதுறை சார்ந்த நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு சசிறப்புரைகளை ஆற்றினார்கள்.
அங்கு முதலில் ஆறுமுகம் ராஜேந்திரம் விழாநாயகர் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். அவரும் எழுத்தாளர் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களோடு மொன்றியாலில் கொண்டிருந்து தொடர்பினால் பல சமூக செயற்பாடுகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபடடு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அடுத்து சிறப்புரை வழங்கிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நா. லோகேந்திரலிங்கம். தனது உரையில் கவிஞரும் எழுத்தாளருமான ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள்
கலை இலக்கியம் தொடர்பான பல பிரிவுகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்றும் மொன்றியால் வாழ் எழுத்தாளர் வீணைமைந்தனுடன் இணைந்து பல விழாக்களை நடத்தியும் தமிழ்த் திரைப்படங்களில் உள்ளேயிருக்கும் இலக்கியத்தையும் அதன் செழுமையையும் வெளியில் கொண்டுவரும் அரிய முயற்சிகளின் இருவரும் ஒன்றாக செயற்பட்டு வருபவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலில் அடங்கியுள்ள விடயங்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோரின் அபாரத் திறமையினால் எமக்கு கிடைத்த பொக்கிசங்களாக விளங்கும் பாடல்களின் சிறப்புக்களை எடுத்தியம்புகின்றன என்றும் லோகேந்திரலிங்கம் தனது உரையில் தெரிவித்தார்
தொடர்ந்து விழா நாயகரின் சகோதரரும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக விளங்கியவரும் சிறந்த சமயப் பற்றாளருமான ஆ. பாஸ்கரதாஸ் மற்றும் எழுத்தாளர் மொன்றியால் மூர்த்தி. ரவீந்திரமூர்த்தி ம்றறும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
மேலும் தனக்கு பிடித்தமான திரைப்படப் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை திறமையும் உள்ளுர்ப் பாடக பாடகிகள் மூலம் பாடவைத்தார் ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள். மேற்படி பாடல்களைப் பாடியவர்கள் திரு தம்பிப்பிள்ளை. சுரேன் சிவகுமார். ஆதிரை சிவகுமார்க. சிவா சிவகுமார் மற்றும் ஜனார்த்தனன் ஶ்ரீ;ஸ்கந்தராஜா காவியா மற்றும் யாதவி கணீஷ்வரன் ஆகியோர் தங்கள் குரல் வளத்தால் சபையோரை மகிழ்வித்தனர்.
தொடர்ந்து நூல் பிரதிகள் சபையோருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கப்பெற்றன. அதனைத் தொடர்ந்து நூலாசிரியரும் விழா நாயகருமான ஆ. ஶ்ரீஸ்கந்தராஜா பதிலுரையும் விளக்கவுரையும் ஆற்றினார். அவரது உரை இலக்கியத்தின் மேன்மையையும் தமிழ்த் திரைப்பாடல்களில் அழியாத பொக்கிசங்களாக விளங்கும் தமிழ் இலக்கியமும் மனித நேரமும் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன என்பதை விபரமாக எடுத்துரைத்தார்.