LOADING

Type to search

இலங்கை அரசியல்

கார்த்திகைப் பூ தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச்சூழலின் அடையாளம்

Share

பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கார்த்திகைப்பூவை இலங்கை அரசும் அதன் இராணுவமும் அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்தகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள், சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது. சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்குத் தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப்பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் தெரிவு செய்துள்ளது. இலங்கைக்காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை. இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும்தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்ய நேர்ந்தது.

கார்த்திகைப்பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம் அருமருந்துகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப்பூச்செடியால் பலகோடி ரூபாய்கள் அந்நியச்செலாவணியாகக் கிடைத்து வருகிறது. ஆனால், கார்த்திகைப்பூச்செடியின் சிறப்புகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது. இயற்கை அதன் பரிணாமப்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை இலங்கை அரசு நினைவிற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.