LOADING

Type to search

கனடா அரசியல்

தமிழர்கள் மீதான இன அழிப்பு மற்றும் படுகொலை: ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட கையேடு சுவிஸ்ஸில் வெளியீடு

Share

(‘கனடா உதயனு’க்கான சிறப்புக் கட்டுரை)

சுவிஸ்ஸிலிருந்து சிவா பரமேஸ்வரன்..

தாட்சாயணி பாராட்டுக்குரியவர். அவரது அயராத பணியும் ஈடுபாடும் அளப்பரியது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவரது அசாத்தியமான ஈடுபாடு வியக்க வைக்கிறது.

இந்த கையேடு சுவிஸ்ஸில் வெளியீடாவதற்கு அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் சிவா (சிவராசா) கனகசபை அவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்ததை காண முடிந்தது.

தாட்சாயணி இந்த ஆவணப்படுத்தலை கையாண்ட விதம் புதுமையான முயற்சி மட்டுமல்ல தொலைநோக்கு பார்வையும் கொண்டது.

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ரத்தக்களறியில் முடிவடைந்த கொடூரமான யுத்தம் இன்றளவும் விடையளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவ்வகையில் கேள்விகள் ஓராயிரம். ஆனால், பதில் என்னவோ ஒன்றுகூட இன்றுவரை இல்லை.

அந்த ஒற்றை பதிலாவது இதய சுத்தியுடன் என்று வெளியாகிறதோ அன்று தான் பாதிக்கப்பட்டவர்களுகான நீதி வழங்கலின் முதல் படி எடுத்து வைக்கப்படும். அந்த முதல் அடி எடுத்துவைக்கப்படும் போது தான் தமிழ்ச் சமூகத்திற்கு நீதிபரிபாலன வழிமுறைகளில் நம்பிக்கை ஏற்படக்கூடும்.

இலங்கை அரச தரப்பு பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு வேலையைச் செய்கிறது. காலத்தை இழுத்தடிப்பதால் இடம்பெற்ற கொடூரங்களை மூடி மறைத்துவிடலாம் என்ற ஒரு எண்ணப்பாடு கொழும்பில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்த பிரச்சனையை அடுத்தவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்கிற மோசமான சிந்தனையில் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கேட்கப்படும் கேள்வி என்னவோ மிகவும் எளிமையானது. ”இந்த இனவழிப்பு மற்றும் இனப்படுகொலைகளுக்கு யார் காரணம். உண்மைகள் ஏன் மூடி மறைக்கப்படுகின்றன. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது?” இதற்கான பதிலை அளிப்பதற்கு ராஜபக்ச, மைத்திரி, ரணில் ஆகியோர் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும் அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறவரும் தயாராக இல்லை என்பது கசப்பான உண்மை.

இலங்கையின் போர் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு இன்றளவும் நீதி கிடைக்காத நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாங்கள் வசிக்கும் புலம்பெயர்ந்த தேசங்களில் இலங்கையில் இடம்பெற்றது “இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை” என்பதை ஆவணப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அது முறையாக ஆவணப்படுத்தப்படும் போது உண்மையை மறைப்பது சாத்தியப்படாது. அவ்வகையில் உண்மைகள் பல ஆண்டுகளாக, பல தளங்களில் வெளியாகியிருந்தாலும், அவற்றை ஒருங்கிணைத்து எக்காலத்திற்கும் எளிதில் கிடைக்கும் வகையிலான தேவையை தனியொரு யுவதி செய்திருக்கிறார்.

அவ்வகையில் ஜெர்மனில் வசிக்கும் தாட்சாயிணியின் விடாமுயற்சியும், தீவிரமான ஈடுபாடும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒரு கையேடு வெளியாக வழிவகுத்துள்ளது. அதுவும் ஒரு மொழியில் மட்டுமல்ல, நான்கு மொழிகளில் “தமிழின படுகொலைக் கையேடு” பகுதி 1 & 2 ஸ்விஸ் நாட்டின் பெர்ண் நகரிலுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மார்ச் 24 அன்று வெளியிடப்பட்டது.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த புத்தகம் எடையில் மட்டுமல்ல மனதளவிலும் கனமாக இருக்கிறது. சீரான வகையில் காலக்கிரமத்தில் ஆண்டு, மாதம் மற்றும் திகதி வாரியாக இலங்கை அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு தொடர்பான தகவல்கள் எப்படி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு தாட்சாயிணியின் ஆவணக் கையேடு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. இந்த கையேடு அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளான இனங்கள் தமது நாடுகளில் இடம்பெற்ற பாரிய மனித உரிமைகள் மீறல்களை ஆவணப்படுத்த ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு மொழிகளில்- தாக்குதல்கள் எந்த இடத்தில் இடம்பெற்றன, எப்படியான தாக்குதல், எவ்வழியான தாக்குதல், ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், அழிவுகள் ஆகியவை உரிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்திலும் சிறப்பாக- ஒவ்வொரு பக்கத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அணுக ஏதுவாக அந்த தாக்குதல் குறித்த செய்திகளை மேலதிகமாக அறிந்துகொள்ள கியூ ஆர் கோட் (QR Code) ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இது நவீனமானதொரு உத்தி. இப்படி டிஜிட்டல் முறையில் தரவுகள் மற்றும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படும் போது, அவை எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும். அந்த தொலைநோக்குப் பார்வையுடன் தொகுப்பாளர் தாட்சாயணி செயற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

உதாரணமாக, பக்கம் 236இல் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதிய படுகொலைகளை ஆவணப்படுத்துகிறது. அம்பாறை மாவட்டம் திராயக்கேணிப் பகுதியில் ’’முஸ்லிம் ஆயுதக் குழுவினர் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து 90க்கும் மேற்பட்ட தமிழர்களை வெட்டியும், சுட்டும், எரித்தும், படுகொலை செய்தனர். 350 க்கும் மேற்பட்ட வீடுகள் எரியூட்டப்பட்டன. பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர்.” என்ற தகவலுடன் மனதை உருக்கும் புகைப்படமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்கான மூலாதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பக்கம் 283இல் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி (யாழ்ப்பாணம்) நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் உணவு இடைவேளையின் போது விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது இலங்கை வான் படையினர் நடத்திய தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 தமிழர்கள் கொல்லப்பட்டதும், 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மாணவர்களின் படங்களை பார்க்கும் வல்லமை பலவீனமானவர்களுக்கு இருக்காது.

இதற்கு இரண்டு பக்கங்கள் முன்னர் 281ஆவது பக்கத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது 20.09.1992 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாட்சா இந்த படுகொலையை ஆவணப்படுத்தியுள்ளார். “மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினர் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால்: சவுக்கடி, தளவாய், மயிலெம்பாவெளி, ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 47 தமிழர்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்” என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் போது பக்கசார்பற்ற நிலையை தொகுப்பாளர் தாட்சா கையாண்டுள்ளதையும் கவனிக்க முடிகிறது.

“படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள்” என்கிற இரண்டாம் பகுதியில் அவர் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற படுகொலையையும் ஆவணப்படுத்த தவறவில்லை. இது தொகுப்பாளரின் நேர்மைக்கு ஒரு உரைகல்லாக இருக்கிறது என்று கூற முடியும். அந்த இரண்டாம் பகுதியின் பக்கம் 112 இல் அவர் காத்தான்குடி படுகொலையை ஆவணப்படுத்தியுள்ளார்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்திருந்த பள்ளிவாசல்களில் தொழுகையிலீடுபட்டிருந்த 147 தமிழ் இசுலாமியர்களை ஆயுதமேந்திய தமிழ்க்குழுவொன்று படுகொலை செய்தமையானது இசுலாமியத் தமிழர்களுக்கும், இசுலாத்தைப் பின்பற்றாத தமிழர்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது. 03.08.1990 அன்று நடந்த இனப்படுகொலையை நடத்தியது விடுதலைப் புலிகளெனக் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், அது இலங்கை அரசிற்கு ஆதரவான வேறோர் தமிழ்க் குழுவாக இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. விடுதலைப் புலிகள் இப்படுகொலையைத் தாம் செய்யவில்லை என மறுத்திருந்தனர். இக்கொடூரப் படுகொலை தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இசுலாத்தைப் பின்பற்றாத தமிழர்களுக்கும், இசுலாத்தைப் பின்பற்றும் தமிழர்களுக்கும் இடையே ஒற்றுமையைக் குலைக்கும் இலங்கை அரசியின் வியூகத்திற்கு பயனளித்தது என்பது தெளிவாகிறது”.

உலகின் பல நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நெருக்கடியை அளித்தன என்பதையும் இரண்டாம் பாகத்தின் 05/06 ஆம் பகுதியில் தொகுப்பாளர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, இந்த கையேடு வெளியிடப்பட்ட சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் எப்படியான அழுத்தங்களுக்கு உள்ளானர்கள் என்பதையும் அவர் அதில் விவரித்துள்ளார்.

ஒரு எடுத்துக்காட்டாக, இந்த கையேடு வெளியிடப்பட்ட நாடான சுவிட்சர்லாந்து தமிழர்கள் மீதான பார்வையை எப்படிக் கொண்டிருந்தது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்-சுருக்கமாக:

”ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அழுத்தம் காரணமாக சுவிஸ்சும் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. இதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு பெரியளவிற்கு நிதியாதாரமாக இருந்து அதில் பங்குவகித்த 40,000 சுவிஸ் தமிழர்கள் அந்த அமைப்பிற்கு நிதி அளிப்பதை தடுத்தது. இந்த தடையை மீறி விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்த தமிழர்களை சுவிஸ் பொலிசாரின் சிறப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து கைது செய்தது” என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்

இந்தியாவின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடும் போது, இராணுவ ரீதியாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளித்தது என்றும், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது என்று கூறும் தொகுப்பாளர், போர் நிறுத்த காலத்தில், இந்தியா இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர்களுக்கு சிறப்பு ராடார்களையும், இலவசமாக இரண்டு இந்திரா ராடர்களையும் வழங்கின, 13 மிக் 29 விமானங்கள் , நூற்றுக்கணக்கான பாதுகாப்பு உடைகள , 5 தாக்குதல் ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் வழங்கின என்று தாட்சாயணி சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த கையேடு சுவிஸ்ஸில் வெளியீடாவதற்கு அங்கு 40 ஆண்டுகளுக்கும்

பல வகைகளில் இந்த கையேடு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்று கருதலாம். பன்னாட்டு அளவில் இலங்கை மீது தீர்மானங்களை கொண்டுவரும் நாடுகள், அமைப்புகளுக்கு மேலும் புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கலாம். அது மாத்திரமின்றி போர்க் குற்றங்கள், இன அழிப்புகள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கும் இது பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த கையேடு வெளியீட்டு விழாவில் பங்கேற்க தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சிங்கள ஊடகவியலாளரும் ஜே டி எஸ் ஊடகத்தை நிர்வகித்து நடத்துபவருமான பாஷன அபேவர்த்தன மற்றும் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கு ஐ பி சி ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிராஜ் டேவிட் ஆகியோருடன் இந்த எழுத்தாளரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர் விராஜ் மெண்டிஸ் உடல்நலக் குறைப்பாடு காரணமாக வர இயலவில்லை. அதே போன்று மக்கள் தீர்பாயத்தை முன்னெடுத்தவரும், அயர்லாந்திலுள்ள டப்ளின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருக்கும் ஜூட் லால் பெர்ணாண்டோவும் கலந்துகொள்ளவிருந்தாலும், அவரால் வர இயலவில்லை. எனினும், தனது கருத்துக்களை ஒரு கானொளிப் பதிவாக அவர் அனுப்பியிருந்தார்.

நூலை தொகுப்பாளர் வெளியிட அதைப் பெற்றுக்கொண்ட பெர்ண் ஞானலிங்கேஸ்வரர் ஆலையத்தின் பிரதமகுரு தர்மலிங்கம் சதீஸ், இந்த ஆவணப்படுத்தலில் முக்கியத்துவத்தை எடுத்துரைதார். மேலும் அந்த ஆலயத்தில், ”உலகளவில் முதல் முறையாக தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த ஆவணக்காப்பகம்” அமைக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், அது முடிவடையும் போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் போன்றவை, அதை ஏற்படுத்தும் தமிழ் களறி அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் போர் சரித்திரம், தமிழர்கள் மீது கட்டவிழித்துவிடப்பட்ட வன்செயல்கள், திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் படுகொலைகள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இந்த கையேடு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இந்த கையேட்டின் வெளியீட்டு நிகழ்வில், இனப்படுகொலையை காட்சி ரீதியாக ஆவணப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நோ ஃபயர் சோன்’ என்ற ஆவணப்படத்தின் தமிழ் வடிவம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.