LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் சேவையிலிருந்து விலகும் இராணுவத்தினர் ரஸ்சிய இராணுவத்தோடு இணைந்து உக்ரேனுக்கு எதிராக போரிடுகின்றார்களா?

Share

(கனடா உதயனுக்கான சிறப்பு செய்திப்பார்வை)

என்.புவியரசன்

மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் உள்ளது என்பதே யதார்த்தம். அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக “வெள்ளை யானையாக” இருக்கும் அரச படைகள் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

ஆனால், போர் முடிந்த பிறகு அந்த “வெள்ளை யானை” இராணுவத்திற்கு தீனி போட இலங்கை அரசால் முடியவில்லை. அது மட்டுமின்றி அவர்களுக்கு போதிய வேலையும் இல்லை. எனவே ஏராளமானவர்கள் முகாம்களிற்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் தொடருவதற்கும் இதுவொரு முக்கிய காரணாமாக உள்ளது.

இந்நிலையில் இனியும் இவ்வளவு பெரிய படைகளின் கட்டமைப்பை வைத்து சமாளிக்க முடியாது என்கிற உண்மை இலங்கை அரசுக்கு இப்போது புலப்படத் தொடங்கியுள்ளது போலத் தோன்றுகிறது. அவ்வகையில் வேறு வழியின்றி படைக்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் படையிலிருந்து விலகியவர்கள் ரஸ்யாவுக்கு சென்று உக்ரைனுடன் தொடரும் யுத்தத்தில் போராடி வருவதையும் காண முடிகிறது.

இதேவேளை இலங்கையின் கட்டளைப் படைத்தளபதிகளின் அமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதும் 12 கட்டளைத் தளபதிகளின் கீழ் இருந்த அமைப்பு பின்னர் 8 ஆக மாற்றப்பட்ட நிலையில், அந்த படைக் கட்டமைப்பு தற்போது 5 கட்டளைத் தளபதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல், படைக்குறைப்பு மட்டுமல்லாமல், படைப்பிரிவுகள், கட்டளை அமைப்புகள் ஆகியவற்றையும் அரசு குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள்ப்பட்டுள்ளது.

அவ்வகையில் மாதம் ஒன்றிற்கு 3 லட்சம் ரூபாவிற்கும் அதிகமாக மேலதிக செலவை ஒரு கட்டளைத் தளபதிக்கு ஏற்படுத்திய கட்டமைப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை படையில் இருந்து 5 வருட, 12 வருட மற்றும் 20 வருட பணிக்கால நிறைவிற்கு பின்னர் நிபந்தனைகளுடன் விலகுவோர் தொகை அதிகரிப்பதாகவே படைத்துறைத் தகவல்களும் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டதன் பின்னர் மிக வேகமாக அதிகரிப்பதால் கடந்த 2020 முதல் 2024 இடைப்பட்ட நான்கு ஆண்டுகளிற்குள் 36 ஆயிரம் பேர் வரையில் படையை விட்டு வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 55 மற்றும் 60 வயதுகளுடன் ஓய்வில் செல்வது இயல்பானதாக இருப்பினும் இவற்றினைவிட மேலும் 3 விதிமுறைகளின் கீழேயும் பணியில் இருந்து வெளியேற முடியும்.

இதற்கமைய 5 வருடம் கடமையாற்றிய ஒருவர் முன் அறிவித்தலுடன் அனுமதி பெளியேறலாம். அவ்வாறு விலகுபவருக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்பட மாட்டாது. இரண்டாவதாக படையில் 12 வருடக் கடமை நிறைவு செய்து வெளியேற விரும்பும் ஒருவரும் அதை நிறைவேற்றியுள்ளதை உறுதி செய்து வெளியேற முடியும். இருப்பினும் 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவராகவே காண்படுவதோடு அவர் இறுதியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படை சம்பளத் தொகையின் 24 மடங்கு கொடுப்பனவு வழங்கப்படும். அதாவது 12 ஆண்டுகள் படைகளில் பணியாற்றி வெளியேறினால், அவருக்கு இரண்டு வருத ஊதியம் கொடுப்பனவாக அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட இரண்டு வகையில் படைகளில் இருந்து வெளியேறுவதற்கு அப்பாற்பட்டு மூன்றாவதாக ஒரு வழியும் உள்ளது. அதாவது அந்த விதிமுறையின்படி, படையில் 22 வருடம் கடமையாற்றிய ஒருவர் எந்த வயதிலும் ஓய்விற்கு விண்ணப்பிக்க முடியும்.

அவ்வாறு விண்ணப்பிப்பவர் 20 வயதில் படையில் இணைந்து 43 வயதாகினும் ஓய்வூதியத்தினை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் சட்டத்தில் வழியுள்ளது. இந்த 3 கட்ட வழிமுறைகளின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் பல ஆயிரம்பேர் படையில் இருந்து விலகியுள்ளதாகவும் மேலும் ஆயிரக் கணக்காணோர் ஓய்வு பெறும் வயதினை எட்டியுள்ள சுமர் 36 ஆயிரம் படையினர் வரையில் வெளியேறியுள்ளனர்.

இதன்காரணமாக படைக் கட்டுமானத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிர்வாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி என்பன ஒரு கட்டளைத் தளபதியின் கீழும், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 3 மாவட்டங்களும் ஒரு கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் ஒரே கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையின் வடக்கு கிழக்கில் 3 கட்டளைத் தளபதிகள் உள்ள அதேவேளை இலங்கையின் ஏனைய பகுதிகள் அணைத்தும் இரு கட்டளைத் தளபதிகளின் கீழான நிர்வாக கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் படையினருக்கு உணவும் இந்த 8 மாவட்டங்களிற்கு வெளியே பணியாற்றுபவர்களிற்கு உணவிற்கான கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இதில் நாள் ஒன்றிற்கான உணவிற்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். வடக்கு கிழக்கில் பணியாற்றும் படையினர் விடுமுறையில் செல்லும் 10 நாள்களிற்கு தலா 10 ஆயிரம் மாதக் கொடுப்பனவுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.
இவ்வாறெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாத செலவுகளுடன் நிர்வகிக்கப்பட்டு வந்த இராணுவ கட்டளைப் பிரிவுகளின் செலவுகள் இப்போது குறைக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு அப்பாற்பட்டு, ரஸ்ய இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பும் முன்னாள் படை வீரர்களுக்கு உள்ளது என்கிற ஆசை வார்த்தையும் காட்டப்படுகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஸ்ய படைகளுடன் இணைந்து போரிட்டால், கணிசமான தொகை ஊதியமாகவும், போரில் உயிரிழந்தால் குடும்பத்தாருக்கு நிரந்திர ஓய்வூதியம் மற்றும் வீடும் ரஸ்ய அரசால் வழங்கப்படுவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகள் ரஸ்ய படைகளில் இருந்தால், குடியுரிமை மற்றும் இலவச வீடு ஆகியவற்றிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இலங்கையிலிருந்து ரஸ்ய படைகளில் இணைந்து போரிட முன்னாள் படை வீரர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு இலங்கை இராணுவத்தில் இருந்து விலகியவர்களில் நூறு வரையிலானோர் ரஸ்யப் படைகளில் இணைந்து பணியாற்றுவதாகவும் அதில் இருவர் உயிரிழந்த செய்தி அண்மையில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவின் மூலம் மேலும் தமது படைகளில் இணைந்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட தூண்டில் வீசப்படுகிறது என்றும் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.