தமிழ் தேசிய கட்சிகளின் ”நவக்கிரக”அரசியல்
Share
”தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன்,இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் 3 விதமான அறிவிப்புக்களும் தமிழ் தேசிய கட்சிகளின் ”நவக்கிரக”அரசியலுக்கு போதுமான உதாரணங்கள்”
கே.பாலா
இலங்கையில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்ற குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென்ற ”கோஷம்”தமிழ் தேசியக்கட்சிகள் மத்தியில் மீண்டும் ”நவக்கிரக”அரசியலை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் எப்போதெல்லாம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுகின்றதோ அப்போதெல்லாம் அந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பதில் தொடங்கி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும், அந்த பொது வேட்பாளர் யார்?ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதா இல்லையா, என்பது வரை இந்த தமிழ் தேசியக்கட்சிகள் தாமும் குழம்பி மக்களையும் குழப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளன.
அந்த வகையில்தான் இம்முறையும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென்ற ”கோஷம்’முன்வைக்கப்படட நிலையில் தமிழ் தேசியக்கட்சிகள் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி தமிழர் அரசியலின் பலவீனத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோஷத்தை , முதலில் ஈ.பி.ஆர்.எல் .எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன் வைத்ததைத் தொடர்ந்து அவர் பங்காளியாகவுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டணி அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற 5கட்சிகளின் கூட்டணியின் தீர்மானத்தினால் தமிழர்அரசியலில் பரபரப்பும் தென்னிலங்கை அரசியலில் பதற்ற நிலையும் உருவான நிலையில் இவற்றை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்தார் .
தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் அதன் மூலம் தமிழர்களின் உரிமைகளுக்கு பேரம் பேசுவதற்கும் தமிழ் பொது வேட்பாளர் அவசியம் என்ற ”கோஷம் ” முன்னிலைப்படுத்தப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல்கள், ஆதரவு திரட்டல்கள் ஆரம்பித்து ”தமிழ் பொது வேட்பாளர் மூலம் நாம் எதையாவது சாதிக்க முடியுமா என தமிழ் மக்களும் சிந்திக்கத் தொடங்கிய நிலையில் வழக்கம் போலவே தமிழ் தேசிய கட்சிகளின் ”நவக்கிரக”அரசியல் ஆட்டமும் ஆரம்பித்தது.
இதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிள்ளையார் சுழி போட்டார். ”தமிழ் பொது வேட்பாளர்” கருக்கட்டிய நிலையிலேயே அதனை கருக்கலைப்பு செய்யும் வகையில் ”தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் ” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. அது இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றன. குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தானாகவே தனது பெயரை முன்மொழிந்திருக்கின்றார்.முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பின் தலைவர் மற்றும் இன்னுமொரு அணி மனோ கணேசனை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.
முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்களத் தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.
அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம். தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமயப் படுத்துகின்ற வேலைத் திட்டங்களாக இருக்கலாம். இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது. எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் ,தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான் என்பதே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு.
சுரேஷ் பிரேமச்சந்திரனினால் முன்மொழியப்பட்ட ”தமிழ் பொது வேட்பாளர்”தொடர்பில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் எதிரும் புதிருமான கருத்துக்களினால் இவ்விடயம் சில நாட்களாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் திகதிகள் தொடர்பான எதிர்வு கூறல்கள் வெளிவரத்தொடங்கிய நிலையில் மீண்டும் ”தமிழ் பொது வேட்பாளர்”கோஷம் கேட்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அடுத்த ஆப்பை இறக்கியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது. அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்காக ஆணை வழங்கி வந்துள்ளார்கள். அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.
அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம். எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரி வருகின்றார்கள்.அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்று இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
”தமிழ் பொது வேட்பாளர்” தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் ”நான் பொது வேட்பாளராக களமிறங்கத் தயார்” என்ற அறிவிப்பும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் ”ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை ஆதரிக்கமுடியாது” என்ற அறிவிப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ”ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும்”என்ற அறிவிப்பும் என 3 விதமான அறிவிப்புக்களும் தமிழ் தேசிய கட்சிகளின் ”நவக்கிரக”அரசியலுக்கு போதுமான உதாரணங்கள்.
சிங்கள வேட்பாளர்களை அச்சுறுத்த, அடிபணிய வைக்க , அவர்களுடன் பேரம் பேச முன்வைக்கப்பட்ட ”தமிழ் பொது வேட்பாளர்” என்ற கோஷத்தினால் சிங்கள வேட்பாளர்கள் எந்தக் குழப்பமோ பதற்றமோ அடைய வில்லை ,மாறாக தமிழ் தேசியக் கட்சிகளே குழப்பமும் பதற்றமும் அடைந்து தமிழ் மக்களையும் குழப்பி விட்டுள்ளதுடன் தமிழ் தேசிய கட்சிகளின் ஆளுக்கொருபக்க அரசியலைப் பார்த்து சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் கைகொட்டி சிரிக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகளில்கூட தமிழ் தேசியக் கட்சிகளிடையே உள்ள ”நவக்கிரக” நிலையே தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சிங்கள அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணமாகவுள்ளது. ஒரே கருத்து கொண்டுள்ள கட்சிகள், தேர்தல்களிலும் போராட்டங்களிலும் கூட நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் நிற்கின்றன.அதிர்ஷ்டவசமாக வடக்கு, கிழக்கு ஹர்த்தால், ”பொத்துவில் முதல் பொலிகண்டி வரை”யான போராட்டம் ஆகியவற்றில் இந்த தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்ததால் இவை பெரு வெற்றியைப்பெற்றன. அந்த ஒற்றுமை தொடர வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிலையிலேயே தற்போது ஜனாதிபதி தேர்தலில் ”தமிழ் பொது வேட்பாளர்” என்ற கோஷத்தில் மீண்டும் பிளவு படத் தொடங்கியுள்ளனர்.