LOADING

Type to search

கதிரோட்டடம்

சாந்தனின் உடலை கடல் தாண்டி வந்து கையளித்த சட்டவாதி புகழேந்தி நேற்று மூன்று உயிர்களைக் கடல் தாண்டிக் காவி வந்தார்

Share

 ‘கதிரோட்டம்’ 05-04-2024

”கடந்த 33 வருடங்கள் தினமும் நாங்கள் அனுபவித்ததெல்லாம் கொடிய துன்பங்கள் தான்” என்று அவர்கள் மூவரும் சொல்லிய வசனத்தை நாம் ‘சத்திய வசனங்களாக’ ஏற்று அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இன்றிலிருந்து 33 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இந்தியாவின் கொடிய சிறைகளுக்குள் தள்ளப்பட்டவர்கள். தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும். தொடர்ந்து தமிழ் அதிகாரிகளின் பார்வையில் இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.

அங்கிருந்த சாந்தன் என்னும் நம்மவர் தாயகம் சென்று தன் தாயின் மடியில் தலைவைத்து துயில் கொள்ளும் நாளுக்காய் காத்திருந்தார்.

ஆமாம்! தன் இறுதி நாட்களை தன்னை ஈன்ற அன்னையோடு இணைந்து வாழ்ந்து அவரைத் தேற்ற வேண்டும் என்ற கனவோடு தமிழகம் என்ற தமிழ் மண்ணிலிருந்த சாந்தனை அங்குள்ளவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

நேற்று தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் மூன்று உயிர்களைக் காவி வந்தார் ஒரு சட்டப்போராளி. அவர்தான் சட்டவாதி புகழேந்தி. அவரது பெயருக்கேற்ப அவரது புகழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் ‘மிகுந்த’ உச்சத்திற்குச் சென்று விட்டது.

அந்தப் புகழேந்தியின் வாடிய முகத்தை ஒரு தடவை பாருங்கள். எவ்வளவு சோகம் அவரிடத்தில் அடைக்கலம் அடைந்திருக்கின்றது. சிரிப்பையே காண முடியவில்லை. ஆனால் நன்கு சிந்தித்து செயற்பட்ட காரணத்தால் சாந்தனின் உடலை மாத்திரம் கடல் தாண்டி வந்து அவரது தாயாரிடம் கையளித்த சட்டவாதி புகழேந்தி அவர்கள் நேற்று முன்தினம் எம் தமிழ் மண்ணில் உள்ள அவர்களின் உறவுகளிடம் ஒப்படைக்க மூன்று உயிர்களைக் கடல்தாண்டி காவி வந்துள்ளார். அவரை நம் தமிழர்கள் கடவுளை வணங்குவது போன்று பூசிக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் இப்படி ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ‘மக்கள் அபிமானி’ இருக்கின்றாரே என்று எம்மை ஆச்சரியப்பட செய்துள்ள அவர் இப்போது எம் மண்ணில் தங்கியிருந்த தான் கொண்டு வந்த உயிருக்கு உயிரான மூவரின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் தாயகம் செல்லவுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இவ்வாரத்திற்குரிய எமது ‘கதிரோட்டம்’ சட்டவாதி புகழேந்தி அவர்களுக்காகப் படைக்கப்படுகின்றது.

இந்த பக்கத்தின் முடிவாக புகழேந்தி அவர்களுக்கு ‘முடிசூடுவதைப் போன்ற’ வார்த்தைகளை அவருக்காய் தனது முகநூல்ப் பதிவில் படைத்திட்ட தோழர் பாலன் அவர்களது வார்த்தைகளை மரியாதையுடன் இங்கே பதி செய்கின்றோம்.

“தோழர் புகழேந்தி. இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுக்கும் உணர்வாளரும்கூட.

அதனால்தான் சாந்தன் உடலை கொண்டு வந்து தாயாரிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவரை சந்தித்து அழுத முருகனின் தாயாரிடம் “உங்கள் மகனை கொண்டு வந்து ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார்.

உறுதியளித்தபடி முருகனை அழைத்துவந்து தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார்.
அதன்மூலம் ஒரு தாயின் 33 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.”

இந்த வரிகளோடு சட்டத்தரணி புகழேந்தி அவர்களின் பணியும் சேவைகளும் . முருகன் றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் போன்று இந்திய சட்டத்துறையின் ஓட்டைகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட ‘அப்பாவிகளுக்கு’ கிட்ட வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!