ருவாண்டா(1994)… இலங்கை(2009)… காசா(2024)…
Share
சிவா பரமேஸ்வரன்
மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்)
பகுதி-1
ஏப்ரல் 7…… இனப்படுகொலை தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு நாள்… ஆம்….. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் ஒரு நாளாக ஐ நா அங்கீகரித்துள்ளது. இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு தொடர்பில் ருவாண்டாவில் இடம்பெற்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது வரலாற்று உண்மை
அவ்வகையில் இந்த ஆண்டு ருவாண்டா இனப்படுகொலைகளின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ருவாண்டா இனப்படுகொலைகள் தொடர்பில் உலக நாடுகள் எப்படியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன, அப்போது நடைபெற்றது என்ன அதை இந்த 30 ஆண்டுகளுடன் பொருத்திப்பார்ப்பது காலத்தின் தேவை என கருதுகிறேன்……
1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி தொடங்கிய கட்டுக்கடங்காத வன்செயல்களும் இனவெறியாட்டமும் அடுத்த நூறு நாட்கள் நீடித்தன. உலகம் அதுவரை கண்டிறாத வகையில் படுகொலைகள் இடம்பெற்றன. அந்த மாதம் 6 ஆம் திகதி மாலை அப்போது ருவாண்டாவின் அதிபர் யுவெனெல் ஹப்யாரிமானா மற்றும் அவருடன் அண்டை நாடான புருண்டியின் அதிபர் சைப்ரியேன் ந்டாயமிரா பயணித்த விமானம், ருவாண்டா நாட்டின் தலைநகர் கிகாலியிலுள்ள விமான நிலையத்தில் தரையிரங்கவிருந்த நிலையில், தரையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்படும் ஏவுகணை ஒன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த இருநாட்டு தலைவர்களும் ஹூட்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள். அந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியவர்கள் டூட்ஸி இனத்தவரின் ருவாண்டாவின் தேசப்பற்று முன்னணி அல்லது அந்த இரு இனக்குழுவிற்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையை எதிர்த்த ”ஹூட்டு பவர்” என்ற அரசு சார்பு அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீண்டகாலமாக இருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் இதர ஆதாரங்களின்படி இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு டூட்ஸி இனக்குழுவினரே காரணம் என்கிற வலுவான வாதமும் இன்றளவும் உள்ளது.
ஆக மொத்தம், ஒரே கண்டம், ஒரே இனத்தவர் (ஆப்ரிக்கர்கள்) ஒரே மாதிரியான சமூகச் சூழலில் வாழ்ந்தவர்கள், ஒரே மாதிரியான பொருளாதார சூழலை எதிர்கொண்டவர்கள், காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தவர்கள் இந்த இரண்டு இன குழுவை சேர்ந்தவர்கள். எனினும் ருவாண்டா, புரூண்டி ஆகிய இரண்டு நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஹூட்டு மற்றும் டூட்சி இனக்குழுவினரிடையே தொடர்ந்த, தொடரும் இனமோதல்கள் இரு நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், தமது இனக்குழுவைச் சாந்த தமது இருநாடுகளின் அதிபர்களும் படுகொலை செய்யப்பட்டது ஹூட்டு இனக்குழுவினரை கோபம், ஆவேசம் மற்றும் உணர்ச்சிகளின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது. அதன் விளைவு டூட்ஸி இன மக்களின் மீதான இனப்படுகொலை வெறியாட்டமாக மாறியது.
இந்த படுகொலை மற்றும் இனவெறியாட்டத்தின் பின்புலம் என்பது அங்கு 1990ஆம் ஆண்டில் தொடங்கிய உள்நாட்டு யுத்தமாகும். அது பெருங்கதை. இலங்கையில் நிலவிய இனப் பாகுபாடுகள், புறக்கணிப்புகள், பழிவாங்கல்கள் போன்ற பல விஷயங்கள் ருவாண்டாவிலும் இடம்பெற்றன. அதை மற்றொரு கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.
சுருங்கக் கூறுவதனால், ஆட்சியில் இருந்த ஹூட்டு மக்களின் அரசிற்கும் அவர்களுக்கு எதிராக பல அம்சங்களை மையப்படுத்தி மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக வெடித்திருந்தன. ஹூட்டு தலைமையிலான ஆட்சியை அகற்ற ருவாண்டாவின் தேசப்பற்று முன்னணி எடுத்த முயற்சி தோல்வியடைந்தாலும், அவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றினர்.
உள்நாட்டு யுத்தம் ஒரு ஸ்தம்பித நிலையை எட்டிய சூழலில், இருதரப்பும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வந்தன. அந்த பேச்சுவார்த்தைகள் 1992ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதையடுத்து அதிகாரப் பகிர்வு தொடர்பில் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘அரூஷா உடன்பாடு’ எட்டப்பட்டது.
அதிகாரப் பகிர்வு என்று கூறும் உடன்படிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படியான ஒரு பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கடும்போக்குவாத ஹூட்டுக்கள் தரப்பு கூறிவிட பேச்சுவார்த்தை அர்த்தமற்று போனாலும் திரைமறைவில் அதை செயற்படுத்த முன்னெடுப்புகள் இடம்பெற்றன.
ஆனால், இருநாட்டு அதிபர்கள் பயணித்த சிறிய ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட அனைத்து பேச்சுவார்த்தை மற்றும் சமாதான திட்டங்களும் தவிடுபொடியாயின. அதன் விளைவாக “நீறு பூத்த நெருப்பாக” இருந்த இன முரண்பாடுகள், வெறுப்புகள் எரிமலையாக வெடித்தன.
ஏப்ரல் 7ஆம் திகதி தொடங்கி ஜூலை 15 வரை நடைபெற்ற இனவெறியாட்டத்தில் ஐந்து லட்சம் தொடங்கி எட்டு லட்சம் வரையிலான டூட்ஸி இன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசின் இராணுவம், பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளில் பெரும்பான்மையாக இருந்த ஹூட்டு பிரிவினர் கண்ணில் கண்ட டூட்ஸி மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்யும் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நூறு நாட்களில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் இடம்பெற்றது. பெண்கள் மீதான பாலியல் வன்செயல் போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சிறார்கள் துடிதுடித்து இறந்தனர்.
எனினும், இந்த இனப்படுகொலையின் தாக்கமும் கோரமும் உலகை உலுக்கினாலும், மிகவும் துரதிஷ்டமான வகையில் இந்த இனப்படுகொலையை வலிந்து தலையிட்டு நிறுத்த உலகின் எந்த நாடும் முன்வரவில்லை.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் போது “சர்வதேச சமூகம் எங்களை காப்பாற்ற தவறியது” என்று ருவாண்டாவின் தற்போதைய ஜனாதிபதியும், ருவாண்டா தேசப்பற்று முன்னணியின் தலைவராகவும் இருந்த பால் ககாமே இந்த ஆண்டின் நினைவுநாள் அஞ்சலிகளின் போது சுட்டிக்காட்டினார்.
“ஒன்று அவமானம் அல்லது கோழைத்தனம் இந்த இரண்டில் ஒரு காரணத்தால் சர்வதேச சமூகம் எம்மை கைவிட்டது. அப்போது கற்றுக்கொண்ட பாடங்கள் எமது தேசத்தின் சரித்திரத்தில் இரத்தத்தால் பொறிக்கப்பட்டுள்ளது”.
ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெற்ற போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் பில் கிளிண்டன். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவும் அந்த இனப்படுகொலையை தடுக்கவில்லை.
“இந்த இனப்படுகொலை எனது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி” என்று பில் கிளிண்டன் பின்னர் கூறியிருந்தார்.
800,000 பேர்வரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஊடகங்கள் அது தொடர்பிலான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டாலும் சர்வதேச சமூகம் ருவாண்டாவில் உடனடியாக தலையிட்டு அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முயலவில்லை. அது சர்வதேச சமூகத்தின் மீதான ஒரு களங்கமாகவே இன்றளவும் உள்ளது.
மிகவும் கோரமான வகையில் ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்று 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவரான மூசா ஃபால்கி மஹமட் அந்த படுகொலைகள் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு சம்பவமாகும் என்று வர்ணித்துள்ளார்.
“ஆப்ரிக்க ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் மட்டுமன்றி,எந்தவொரு நாடும் இந்த படுகொலையிலிருந்து தம்மை குற்றவாளி இல்லை என்று விடுவித்துக்கொள்ள முடியாது” என்று கூறுகிறார் மஹ்மட்.
ரூவாண்டாவில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பது ஏற்கப்பட வேண்டும் எனவும் ஆப்ரிக்க ஒன்றியத்தின் இப்போதைய தலைவர் வலியுறுத்துகிறார்.
“நடைபெற்ற அந்த இனப்படுகொலை அங்கீகரித்து அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் துணிவும் மனப்பக்குவமும் தேவை. எவ்வளவு காலமானாலும் அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது”.
மெல்ல மெல்ல சர்வதேச நாடுகள் இப்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளன. இப்போது அவர்கள் கூறுவதை 30 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருந்தால், எட்டு லட்சம் உயிர்களில் பாதியளவேனும் காப்பாற்றாப்பட்டிருக்கும்.
ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சு அரசுக்கு இருந்த பங்கை இப்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் இமானுவேல் மெக்ரான் எற்றுக்கொள்கிறார்.
“அந்த இனப்படுகொலையில் பிரான்சின் பங்கை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல மிகப்பெரிய அளவில் அந்த இனப்படுகொலை அவலம் விரிவடையும் என்று வந்த எச்சரிக்கைகளையும் நாங்கள் ஏற்க மறுத்திருந்தோம். இந்த இனவெறியாட்டத்தை மூடிய கதவுகளுக்கு பின்னர் அமர்ந்திருந்த நாங்கள் அவர்களை முற்றாக கைவிட்டோம்” என்று இப்போது விளக்கமளிக்கிறார் பிரான்சின் அதிபர்.
அப்போது ஆட்சியில் இருந்த ஹூட்டு அதிகார அரசை பிரான்ஸ் ஆதரித்திருந்தது என்பது இங்கு நினைவுகூற தக்கது.
ருவாண்டா மற்றும் புரூண்டி அதிபர்கள் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, டூட்ஸி மக்களுக்கு எதிராக தீவிரமான விஷமத்தனமான பிரச்சாரம் அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முன்னெடுக்கப்பட்டது. அது வன்முறையை மேலும் தூண்டியது.
நூறு நாட்கள் அரங்கேறிய வன்செயலில் குறைந்தது 250,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்று ஐ நாவின் தரவுகள் கூறுகின்றன.
அவ்வகையில் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளானவர்கள் இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். அதேவேளை இனியும் இனப்படுகொலைகள் இடம்பெறக் கூடாது என்ற நோக்கில் சில நடவடிக்கைகள் ருவாண்டாவில் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று ருவாண்டாவில் அந்த இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் 200க்கும் மேற்பட்ட நினைவிடங்கள் உள்ளன. மேலும் தொடர்ச்சியாக மனிதப் புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
கடந்த 2002ஆம் ஆண்டு ஆண்டு ரூவாண்டா அரசு “சமூக தீர்ப்பாயங்களை” நியமித்தது. அங்கு இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் வந்து தமது வாக்குமூலங்களை பதிவு செய்தனர். அவற்றை பாதிப்புக்கு உள்ளானவர்கள் நேரடியாகக் கேட்டனர். அதன் மூலம் ஒரு இணக்கப்பாடு ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கை சிறிது துளிர்விட்டது. ஆனால், அதேவேளை அது நீதிபரிபாலன வழிமுறைகளுக்கு பாதகமாகவும் அமைந்தது.
பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்தவர்கர்களும் நேருக்கு நேர் சந்தித்தாலும், அதன் மூலம் பொறுப்புக்கூறல் நீர்த்துபோய்விட்டது என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் எழுந்தன. அதேவேளை, அது மன்னிப்பை கோருவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது என்ற கருத்தும் நிலவியது.
இன்றைக்கு நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிகழ்கால சந்ததியினர் தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை அறிந்துகொள்ளவும், இனியும் அப்படியான ஒரு இனப்படுகொலை அரங்கேறாமல் இருப்பதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து அறிந்துகொள்வதோடு, நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் முயல்கிறார்கள்.
ஆனாலும், அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். எனினும் இதுவரை 28 பேர் மட்டுமே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இனப்படுகொலை புரிந்த குற்றச்சாட்டுக்கு ஆளான சந்தேக நபர்கள் மீது பிரான்ஸ் அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. அவ்வகையில் ஆறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு தண்டனையும் அளிக்கப்பட்டது.
இவையெல்லாம் இடம்பெற்றாலும், ரூவாண்டா இனப்படுகொலைக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.
சரியாக 15 ஆண்டுகள் கழித்து……
தொடரும்…