LOADING

Type to search

இலங்கை அரசியல்

நெடுந்தீவு பகுதியில் இடிந்து வீழ்ந்த நீர்த் தாங்கியை அமைத்தது யார்? மாவட்ட செயலகத்தில் பரபரப்பு

Share

நடராசா லோகதயாளன்

நெடுந்தீவுப் பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த நீர்த் தாங்கியை அமைத்தது யார் எனத் தெரியாத நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியினால் மாவட்டச் செயலகத்தில் நகைப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்ற சமயம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா மையம் தொடர்பில் ஆராய்ந்த சமயமே இவ்விடயம் இடம்பெற்றது.

மண்டைதீவில் ஓர் சுற்றுலா மையம் தடுக்கப்பட்டபோதும் அதிகாரிகள் தாம் நினைத்த விடயத்தை செய்தே தீருவோம் என ஒற்றைகாலில் நின்று நிறைவேற்றினர். ஆனாலும் எத்தனை மாதங்கள் இயங்கின அதனால் பலகோடி ரூபா நாசமாகியது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியபோது அது எத்தனையாம் ஆண்டு இடம்பெற்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கோரினார்.

அது 2019இல் முன்மொழியப்பட்ட திட்டம் என்றபோது அது உங்கள் காலம் அல்லவா என அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை நோக்கி வினாவியபோது அப்போதே இந்த இடம் பொருத்தம்மற்றது அதனால் இங்கே மேற்கொள்ள வேண்டாம் என நான் பல தடவை தடுத்தேன் அதிகாரிகள் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப.பினர் சி.சிறிதரன் பதிலளித்ததோடு நெடுந்தீவில் நீங்கள் ஓர் நீர்த்தாங்கி கட்டிநீர்களே அது என்ன நிலைமை என பதில் வினாத் தொடுத்தார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அது எப்போது யாரால் கட்டப்பட்டது என வினாவியபோது இதற்குப் பதிலளித்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி அது ஒப்பந்தகாரரினால் கட்டப்பட்டது என பதிலளித்தபோது அதிகாரிகளின் பெருமை என மண்டபமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.