LOADING

Type to search

கனடா அரசியல்

“ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன்”

Share

ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள்-ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி. தனது தன்னிலை விளக்கத்தில் தெரிவிப்பு

ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும் கருத்து கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் எமது வேண்டுகோள்களை சரியாக விளங்கிக் கொள்ள முன்வராதவர்களாகிய ஒரு குழுவினர் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்தவர்களை இந்த உயரிய அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து எம்மை விலக்கி வைக்க முடிவெடுத்துள்ளார்கள். அதன் விளைவே, நான் உட்பட பல வேட்பாளர்களின் தேர்தல் மனுக்கள் அந்தக் குழுவினரால் நிராகரிக்கப்பட்டுள்ளன”

இவ்வாறு தெரிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் தீவிர பற்றுக் கொண்டவரும் கனடாவில் இந்த கட்டமைப்பின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவருமான நிமால் விநாயமூர்ததி தெரிவித்தார்.

ஸ்காபுறோவில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஜேசிஎஸ் மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்கள்-ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நிமால் விநாயகமூர்த்தி. தனது தன்னிலை விளக்கத்தில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்விற்கு ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் பிரதம ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கல்வியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சந்திப்பு நிகழ்வு முடியும் வரை காத்திருந்து கருத்துக்களைப் பகிர்ந்து சென்றார்கள்.

மேலும் அங்கு சமூகமளித்திருந்த அனைத்து ரொறன்ரோ பெரும்பாகத்தில் இயங்கும் ஊடகங்களின் பிரதிநிதிகளும் பிரதம ஆசிரியர்களும் செய்தியாளர்களும் கூட்டாக எழுந்து நின்று எதிர்வரும் 5ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய தேர்தல் ஆணையம் வாக்களிப்பு இடம்பெறவுள்ள தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்றும் அத்துடன் நியாயமான காரணங்களை தெரிவிக்காமல் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் அனைவரையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுத்தார்கள்.

மேற்படி சந்திப்பில் திரு நிமால் விநாயகமூர்த்தியோடு பிரதான மேசையில் நியாயமான காரணங்களை தெரிவிக்காமல் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலர் இருபக்கமும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய சந்திப்பில் எமது தமிழர் சமூகத்தில் பல ஆண்டு காலமாக மக்கள் சேவையாற்றி வருகின்ற பலரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது

மேற்படி பொதுமக்கள் சந்திப்பில் தனது சார்பிலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பெற்ற வேட்பாளர்கள் சார்பிலும் விளக்கமளிக்கும் வகையில் உரையாற்றிய நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் பின்வருமாறு தெரிவித்தார்

“அன்பானவர்களே..

தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், இவ்வாறானதொரு ஊடக சந்திப்பை மேற்கொள்ள வேண்டி இருப்பது தொடர்பில் – நான், உண்மையிலேயே பெரும் கவலை அடைகிறேன். ஆனாலும் எங்களுடைய மௌனம் தமிழினத்துக்கு மேலும் பேராபத்தை ஏற்படுத்திவிடலாம் என்னும் உந்துதலின் காரணமாக உண்மைகளை உரைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவ்வாறானதொரு ஊடக சந்திப்பை நாம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது உண்மையிலேயே வருந்தத்தக்கது. எனினும் பல்வேறு நீண்ட சிந்தனைப் பரிமாற்றங்களின் பின்னர் இன்று நாம் உங்களைச் சந்திக்கும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

2009இல், எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது, உலகெங்கும் சிதறிக்கிடந்த தமிழினம் நிலை குலைந்து போனது. பெருந் துயரொன்று தமிழனத்தை ஆட்கொண்டது.

அதுவரையில் வெளிச்சத்தை மட்டுமே கர்வத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருந்த நாம், ஒரே நாளில் இருள் வெளி ஒன்றுக்குள் தள்ளப்பட்டு விட்டதான உணர்வுக்கு ஆளானோம். அடுத்து என்ன செய்வது என்னும் கேள்வியே எங்கள் அனைவரையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
அவ்வாறானதொரு சூழலில் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்களுடைய புதிய நம்பிக்கையானது.

தாயகத்தில் நமது கனவுகளை முன்கொண்டு செல்லுவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டாலும் கூட, புலம்பெயர் தேசங்களில் ஒரு தமிழீழ அரசை நிறுவி, அதன் மூலம் ஜனநாயக நெறி முறையின் கீழ், புதிய அரசியல் பயணமொன்றை மேற்கொள்ள முடியும் என்று நம்பினோம். அதற்காக எங்களை அர்பணிக்க உறுதி பூண்டோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு நிராசையானது.

தாயக நிலத்தில் தனி அரசு அமைக்கும் நமது கனவுகளுக்கான கதவுகள் 2009இல் அடைக்கப்பட்டாலும், புலம்பெயர் தேசங்களில் ஒரு நிழல் அரசை நிறுவி, அதன் மூலம் அரசியல் பயணமொன்றை ஜனநாயக நெறி முறையின் கீழ் மேற்கொள்ள முடியும் என்று தமிழர்கள் நாம் ஒரு சமூகமாகத் தீர்மானித்தோம். மாறிக் கொண்டே வரும் உலக ஒழுங்கிற்கு, தாராளவாத-முற்போக்கு-மரபுசார் ஜனநாயக வழிமுறைகளுக்கும் அமைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிகாரத்துவ கட்டமைப்பினை உலகளாவிய நிலையில் உருவாகிவிட 2009இல் அனைவரும் திடசங்கல்பம் எடுத்துக் கொண்டோம்.

அந்த பயணத்தின் இறுதிக் கட்டம் சுதந்திர தமிழீழ அரசு ஒன்றை தாயக மண்ணில் நிர்மாணிப்பதில் முடியும்!

அந்த நம்பிக்கையின் வழிநின்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற உன்னதமான கட்டமைப்பை உருவாக்க பலரும் மிகக் கடினமாக உழைத்து வந்திருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை கடந்த பதினான்கு வருடங்களாக தொடர்ந்து வரும் எனது பங்களிப்பும் அந்த வகையில் மட்டுமே பார்க்கப்பட முடியும்.

இந்த பின்னணியில், நடக்கவிருக்கும் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு இருந்த எனது வேட்புமனு முறையான காரணங்களின்றி நிராகரிக்கப் பட்டிப்பதை நீங்கள் அறிவீர்கள். சில அபாண்டமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நானும் என்னைப் போலவே சிலர் திட்டமிட்டு தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். இந்த வருத்தமான செய்தியை உத்தியோகபூர்வமாக பகிர்ந்து அதற்கான காரணங்களை விளக்குவதே இன்றைய சந்திப்பின் நோக்கமாகும்.

நாம் நம்பிக்கை வைத்திருந்த அரசாங்கத்தில்; பொறுப்பில் இருக்கும் ஒரு சிறு குழுவினரால், நாம் கட்டியெழுப்ப வரும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக நடத்தப்பட்டிருக்கும் தவறான நடவடிக்கை இது.

நண்பர்களே..

எனக்கு நடத்தப்பட்ட இந்த விதிமீறலுக்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. இது குறித்து தன்னிலை விளக்கமொன்றை அளிக்க விரும்புகிறேன்.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்த வேண்டுமென்று நான் தொடர்ந்து கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும் கருத்து கொண்டவர்களாக இருந்தார்கள்.

நாடு கடந்த அரசாங்கத்தில் மாற்றங்கள் தேவையென்று ஏன் நான் சிந்தித்தேன்?
கடந்த பதினான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடக்கூடிய அளவுக்கு முன் நகர முடியவில்லை. சூழலுக்கு ஏற்ப கருத்துக்களைச் சொல்லவதற்கும் சில மனித உரிமை செயல்பாடுகளுக்கும் அப்பால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இராஜதந்திர ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்தி தனக்கான ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நாடு கடந்த அரசாங்கம் பெரும் மக்கள் ஆதரவு கொண்ட பலம் வாய்ந்த சக்தியாக உருவாக வேண்டும். அதை நானும், என்னைப் போல இம்முறை வெளியேற்றப்பட்டிருக்கும் ஏனைய சகாக்களும் வெளிப்படையாக, ஆனால் கட்டமைப்பிற்கு எந்தவிதமான குந்தகமும் வராத வகையில் உள்ளக விவாதங்களாக முன்வைத்தோம். விவாதங்களை முன்வைத்தாலும், எனது முழு உழைப்பையும், நேரத்தையும் கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்போடு செய்து வந்ததை உங்களில் பலரும் அறிவார்கள்.

ஆனாலும் எமது தொடர்ச்சியான பங்களிப்புக்கள் இருந்தும் கூட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் எந்த முன்னேற்றத்தையும் பெரிதாக ஏற்படுத்த முடியாமல் இருந்தது. அதற்கான முயற்சிகளை மேறகொள்ளுமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தினேன் – ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தேன் – ஆனால் அவை எவையுமே கருத்தில் கொள்ளப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியே ஆகவேண்டுமென்னும் இறுக்கமானதொரு தீர்மானத்திற்கு வரவேண்டியிருந்தது. அதன் அடிப்படையில் தான் அண்மைய ஆண்டுகளில் எனது பல நடவடிக்கைகள் இருந்தன. நிதி அமைச்சராக எனது பங்களிப்பை சிறப்புற வழங்கியது மட்டுமல்லஇ கடந்த முறைபிரதமர் பொறுப்புக்கு நான் போட்டியிட்டதும் அதற்காகவே ஆகும். நான் போட்டியிட்டது பிரதமர் பதவி தேடி அல்ல. மாற்றங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற போட்டியும் ஒரு தேவைதான் என்பதை ஆழ்ந்து உணர்ந்த காரணத்தாலேயே ஆகும்.

இந்த நேரத்தில்தான் அடுத்த அரசவைக்கு தேர்தல் அழைப்பு வெளியானது. இந்தத் தேர்தலில் போட்டியிட எனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். ஆனாலும் வலுவான காரணங்கள் இல்லாமல் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை எனது வெற்றி பிரகாசமாக இருந்த நிலையில் என்னை இந்த இலட்சியத்திலிருந்து வெளியேற்றும் ஒரு இரகசிய உத்தியாகவே, எனது வேட்புமனு நிராகரிக்கப் பட்டிருப்பதை நோக்குகிறேன்.

ஆம். நாடு கடந்த அரசாங்கத்தை சீர் செய்து, அதன் மூலம் தனிநாட்டை அடையும் எமது இலட்சியத்தை விரைவாக்கும் எமது உன்னதமான முயற்சி, இன்று சிலர் சதியால் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. உண்மையில் எங்களை வெளியேற்றுவதாக எண்ணிக் கொண்டு, தமிழினத்தின் இலட்சியத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். எங்களை வெளியேற்றியதால் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை – வெளியேற்றப்பட்டதால் நாங்கள் தோல்வியடைந்ததாக நாம் கருதுவதுமில்லை.

நாம் எமது தாயக மக்களின் விடுதலைக்காக ஆற்ற உள்ள பணிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது மட்டும் உண்மை. நாம் தொடர்ந்து எமது மக்களின் இலட்சிய தாகத்திற்காக பணியாற்றுவோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இம்முறை தேர்தல் நியமன விடயத்தில் கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் சுயாதீனமாக இயங்கவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக தேர்தல் ஆணையகம் அமைச்சரவை அல்லது பிரதமர் பணிமனையால் இயக்கப்படுகின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

ஆகவே கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையாளரை நியமித்து, மீண்டும் கனடாவுக்கான தேர்தலை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேர்மையை காப்பதுடன், எனக்கும் என்போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியையும் பெற்றுத் தந்தது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக பண்பான பெறுமானத்தையும் காக்கும் பொறுப்பு மக்கள் அனைவருடையதும் ஆகும். இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி உள்ளேன்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கு நடத்தப்பட்ட இந்த விதிமீறல் நடவடிக்கை எனது தோல்வியல்ல. இது ஒரு சில தனி நபர்களின் வெற்றி தோல்வி தொடர்பான பிரச்சினை கூட அல்ல. மாறாக இது, புலம்பெயர் சூழலில் ஒரு பலமான தமிழீழ அமைப்பொன்றை, ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று கனவு கண்ட, உங்கள் அனைவரதும் தோல்வியாகும்.

மேற்குலக நாடுகளில், செழுமையான ஜனநாயக அரசியல் சூழலுக்குள் வாழ்கின்ற போதிலும் கூட, எங்களால் ஜனநாயக ரீதியில் சிந்திக்க முடியவில்லை என்பதையே இது காண்பிக்கிறது.
நானும், என்னோடு இணைந்து குரல் கொடுக்கும் எனது சகாக்களும இந்த இடத்தில் ஒன்றை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். தங்களின் உறவுகளை தொலைத்துவிட்டு, எங்களுக்கு நீதி கிடைக்காதா என்னும் ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். தொடர்ந்து அசமந்தப் போக்குடன் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்க கூடாது.

எமக்கென்று ஒரு அரசாங்கம் நம் தாயகத்தில் அமைவது என்பது நம் அனைவருக்குள்ளும் உறைந்திருக்கும் இலட்சிய தாகம் ஆகும் என்பதை மட்டும் இந்த இடத்தில் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். அதற்கு முட்டுக்கட்டை போடும் எவரையும் வரலாறு தோற்கடித்து விடும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துயர் நிறைந்த மே மாதத்தின் முதலாவது நாள் இன்று.

உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள். எமது மாவீரர்கள் தியாகத்தை நினைவில் ஏந்தி, இலட்சிய உறுதிப்பாட்டுடன், எம் இனத்தின் பூரண விடுதலைக்காக எம்மால் முடியுமான வரையில் உழைப்பதற்கான உறுதிப்பாட்டுடன் நாம் இருக்கிறோம்;. நாம் தோற்கவில்லை – தோற்கப் போவதுமில்லை. ஏனெனில், தமிழீழ இலட்சியத்தில் எவரும், எவரையும் தோற்கடிக்க முடியாது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!”