2019 ஜனாதிபதித் தேர்தலில் ”கற்றுக்கொண்ட பாடம்”
Share
2019 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களிடம் முன்வைக்கவென யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் தயாரிக்கப்பட்டு 5 தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்டு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளித்த பொது உடன்பாட்டு ஆவணத்தை ஏறெடுத்தும்பார்க்காத ”கோத்தபாய ராஜபக்ச வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 2,77,019 வாக்குகளையும், இதனை நிராகரித்த சஜித் பிரேமதாச 12,45,456 வாக்குகளையும் இந்த பொதுஉடன்பாட்டு ஆவணத்தை திறந்துகூட பார்க்க மாட்டேன் எனக்கூறிய அநுர குமார திசாநாயக்க 13,494 வாக்குகளையும் பெற்ற நிலையில் பொது உடன்பாட்டு ஆவணத்தை ஏற்றுக்கொண்ட,தமிழ் வேட்பாளராக சுயேச்சையாக களமிறங்கிய சிவாஜிலிங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்றுக்கொண்ட வாக்குகளோ 9,798 மட்டுமே”
கே .பாலா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ,அநுரகுமார திசாநாயக்க, விஜேதாஸ ராஜபக்ச ஆகியோரில் ஒருவரை நிபந்தனைகளுடன் ஆதரிப்பதா அல்லது தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடவைத்து சிங்கள வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழர் சார்ந்த விடயங்களை சாதிப்பதா என்பதில் தமிழ் தேசிய கட்சிகள் ”திரிசங்கு ”நிலையிலிருந்து இன்னும் வெளிவராத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பு கற்றுக்கொண்ட பாடம் ஒன்றை நினைவு படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கடந்த 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்ற குழப்ப நிலையில் இருந்த பிரதான தமிழ்தேசிய கட்சிகள், ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கவென யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தில் அந்த தமிழ் தேசியக்கட்சிகள் கைச்சாத்திட்டன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணம் மேலோட்டமாகப் பார்க்கையில் சிறந்ததொரு முயற்சியாகவே காணப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட போதும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசா,பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோத்தபாய ராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய அநுர குமார திசாநாயக்க ஆகியோரே பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாகஇருந்தனர் . இந்த மூவருடன்தான் பிரதான தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தை நிபந்தனையாக முன் வைத்து பேச்சுக்களை நடத்தி யார் அதனை ஏற்கின்றார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பதென்ற முடிவை எடுத்தன.
இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் விக்னேஸ்வரன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் , புளொட் சார்பில் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய 5 தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர்.பிரதான 5 தமிழ் கட்சிகள் இணங்கி கைச்சாத்திட்டுள்ள இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் இருந்த முக்கிய விடயங்களை பார்ப்போம்.
* புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
* இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
* பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.*
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.
* வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல்வேண்டும்.
* வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
* வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.
* அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும். சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்.
* தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
* போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.
* வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.
* வடக்கு – கிழக்கை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல் வேண்டும்.மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல்வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய 5 தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணங்கி கைச்சாத்திட்ட இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் உள்ள விடயங்களில் ஒன்றைக்கூட சஜித் பிரேமதாசா, கோத்தபாய ராஜபக்ச, அநுர குமார திசாநாயக்க ஆகிய மூவரில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்பது நன்கு தெரிந்தே இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் தேசியக்கட்சிகள் கைச்சாத்திட்டன
இங்குதான் சிக்கல் ஆரம்பமானது . பொது உடன்பாட்டு ஆவணத்தில் உள்ள விடயங்களை பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் இந்த ஜனாதிபதித்தேர்தலை குறிப்பிட்ட 5 பிரதான தமிழ் கட்சிகளும் புறக்கணித்திருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான எமது கோரிக்கைகளை ஏற்காத இந்த மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது .எனவே இந்த் ஜனாதிபதித்தேர்தலை பகிஷ்கரியுங்கள் என இந்த 5 பிரதான தமிழ் கட்சிகளும் இணைந்து பகிரங்கமாக தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். இது தான் அவர்கள் செய்திருக்க வேண்டியது. ஆனால் நடந்தது என்ன ?
இந்த 5 பிரதான தமிழ் அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியவில்லை.அதனால் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் இந்த தமிழ் தேசியக்கட்சிகள் மௌனமாக இருந்ததுடன் தேர்தலில் தமக்கு விருப்பமானவர்களுக்கும் வாக்களித்தனர் , தமிழ் மக்களும் தமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்தனர்,
இதில் தமிழ்மக்களின் பரம விரோதியான , தமிழினப் படுகொலையாளியான கோத்தபாய ராஜபக்ச 69,24,255 வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாச 55,64,239 வாக்குகளைப்பெற்ற அதேவேளை அநுரகுமார திசா நாயக்க 4,18,553 வாக்குகளைப்பெற்றார்.35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் தமிழ் வேட்பாளராக சுயேச்சையாக களமிறங்கிய எம்.கே. சிவாஜிலிங்கம் 11 ஆவது இடத்தைப்பெற்று 12,256 வாக்குகளைப்பெற்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தை ஏற்றுக்கொண்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளராக சிவாஜிலிங்கம் மட்டுமே இருந்தார்.
அதுமட்டுமல்ல தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச 1,35,058 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 2,59,673 வாக்குகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச 38,460 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 2,38,649 வாக்குகளையும் திருகோணமலை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச 54,135 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 3,12,722 வாக்குகளையும் பெற்றனர்
அதேபோன்று வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச 23,261 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 2,59,673 வாக்குகளையும் வவுனியா, முல்லைத்தீவு. மன்னார் , கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச 26,105 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 1,74,739 வாக்குகளையும் பெற்றனர். ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் கோத்தபாய ராஜபக்ச 2,27,653 வாக்குகளும் வடக்கு மாகாணத்தில் 49,366 வாக்குகளுமென 2,77019 வாக்குகளை பெற்றார்.சஜித் பிரேமதாச ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 8,11,044 வாக்குகளும் வடக்கு மாகாணத்தில் 4,34,412வாக்குகளுமென 12,45,456 வாக்குகளையும் பெற்றார்.
இந்த பொதுஉடன்பாட்டு ஆவணத்தை திறந்துகூட பார்க்க மாட்டேன் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய அநுர குமார திசாநாயக்க வடக்கில் யாழ் மாவட்டத்தில் 1375 வாக்குகளும் வன்னிமாவட்டத்தில் 1156 வாக்குகளுமென 2531 வாக்குகளையும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2304 வாக்குகளும் அம்பாறை மாவட்டத்தில் 7460 வாக்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் 3730 வாக்குளையுமென 13494 வாக்குகளையும் பெற்று தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 13494 வாக்குகளைப்பெற்றார்.
இதில் இந்த பொது உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட சுயேச்சையாக களமிறங்கிய தமிழ் ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கம் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 6,845 வாக்குகளையும் வன்னிமாவட்டத்தில் 1,295 வாக்குகளையும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 369 வாக்குகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 800 வாக்குகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 489 வாக்களையும் மட்டுமே பெற்றிருந்தார். அதாவது கிழக்கு மாகாணத்தில் 1,658 வாக்குகளும் வடக்கு மாகாணத்தில் 8,140 வாக்குகளுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 9,798 வாக்குகளையும் மிகுதி 2,458 வாக்குகளை ஏனைய மாகாணங்களிலும் பெற்றார்.
பொது உடன்பாட்டில் உள்ள விடயங்களை இந்த 3 பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் நிராகரித்த நிலையில் இவர்களுக்கு தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தளவு வாக்குகள் எவ்வாறு கிடைத்தன? தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இவ்வாறு தமிழ் மக்களும் தமிழ் தேசிய கட்சிகளும் வாக்களித்ததால் இந்த பொது உடன்பாட்டை எட்டியதன் பலன் என்ன? தம்மால் பல சுற்று பேச்சுக்கள் நடத்தி இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் அதனை நிராகரித்த அந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததை விட இந்த பொது உடன்பாட்டை முன்வைக்காமலேயே அவர்களுக்கு ஆதரவளித்திருக்க முடியுமல்லவா?
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசியக்கட்சிகள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்,குழப்பங்கள்,ஒற்றுமையீனங்களுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டால் 2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளராக சுயேட்சையாக களமிறங்கிய சிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்ட கதிதான் இந்த தமிழ் பொது வேட்பாளருக்கும் ஏற்படும் இதன் மூலம் தமிழனின் இடுப்பில் எஞ்சியிருந்த கோவணமும் அவிழ்ந்துவிடும் . தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய பின்னர் ஏனைய சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரும் ஒருவருக்கு இந்த தமிழ் தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ ஆதரவளிப்பார்களேயானால்,வாக்களிப்பார்களேயானால் அதனைவிட வேறு அவமானம் ,அடிமைத்தனம் இருக்க முடியாது.