‘பயங்கரவாதி’யாகப் பார்க்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி
Share
”வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்கள்,அடாவடிகளை மேற்கொள்ள முஸ்லிம் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்கள் துணைபோகின்றன. வடக்கு,கிழக்கு மாகாண நீதிமன்றங்களில் தமிழ் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை இருப்பதைப் பயன்படுத்தி அந்த இடங்களுக்கு முஸ்லிம் நீதிபதிகளை நியமித்து தமிழ் மக்களின் மாவீரர் நாள், தியாக தீபம் திலீபன் நினைவு நாள் , முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடைகளை விதித்து தமிழ், முஸ்லிம் பகைமையை, வெறுப்பை ,குரோதத்தை வளர்க்க பேரினவாத ஆட்சியாளர்கள் நன்கு திட்டமிட்டு செயற்படுகின்றனர்”
கே.பாலா
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் ”மே 18” தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட உணவுத்தடையாலும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடந்தார்கள், குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள். பட்டினி சாவுகளும் நிகழத்தொடங்கின.
அக்காலகட்டத்திலேயே அந்த மக்களுக்கு கஞ்சியே உயிர்காக்கும் உணவானது.அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு மக்கள் பசியை ஆற்றினார்கள். யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இந்த யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் ”கஞ்சி”.பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப் பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் பொது இடங்கள், ஆலயங்களில் மக்களுக்கு கஞ்சி வழங்குவது வழமை .
இம்முறையும் முள்ளிவாய்க்கால் ”மே 18” நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிங்கள பேரினவாதமும் சிங்களவர்களுக்கு ஒரு நீதியையும் தமிழருக்கு ஒரு நீதியையும் வழங்கு நீதித்துறையும் இனவாத பொலிஸ்துறையும் இணைந்து இந்த கஞ்சியைக்கூட பயங்கரவாத செயலாக்கி கஞ்சி வழங்கும் நிகழ்வுகளை இனவாத வெறியோடு தடைசெய்தும் தடுத்தும் வருகின்றன. ஆண் பெண் வேறுபாடின்றி கைது செய்து சிறைகளிலும் தள்ளுகின்றன.
இவ்வாறான அராஜகம் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் மூதூர் நீதிமன்றத்தினாலும் சம்பூர் பொலிஸாரினாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் அது தற்போது கிழக்கு மாகாணமெங்கும் அரங்கேற்றப்பட்டு வருகிறது
சேனையூர் பகுதியில் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக்காட்டி அச்சுறுத்தி தடுக்க முற்பட்டுள்ளனர். இதன்போது நாங்கள் வேறு யாரையும் நினைவு கூரவில்லை .உயிரிழந்த எமது உறவுகளுக்கும் பொது மக்களுக்காகவுமே இதனை செய்கின்றோம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மூதூர் நீதிமன்ற தடை உத்தரவை வாங்க மறுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவு கூர்ந்தனர்.
இதனையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் நள்ளிரவு வீடுபுகுந்து சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40)என்ற 2 பெண்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) என்பவரையும் இதன்போது பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), என்பவரையும் உடுத்த உடையுடன் கதறக்கதறக் கைது செய்து இழுத்துச் சென்ற சம்பவம் தமிழர் தாயகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் தொடராக கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க நீதிமன்றங்களினால் தடைஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன் பொலிஸாரினால் பலர் கைது செய்யப்படும் மிரட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த விடயத்தில் இலங்கையின் நீதிமன்றங்களும் பொலிஸாரும் இன ,மதவாத ரீதியில் தடை யுத்தரவுகளை பிறப்பித்தும் கைதுகளை மேற்கொண்டும் வருகின்றன
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்ச மூதூர் நீதிவான் நீதிமன்ற முஸ்லிம் நீதிபதியே தடையுத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தடைஉத்தரவை கோரிய பொலிஸார் அதற்கு கூறிய காரணங்கள்தான் விசித்திரமானவை. பொலிஸார் கோரிய தடை உத்தரவில் ”பொது இடங்களான பாடசாலை ,கோவில் போன்ற இங்களில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயற்படுதல், சட்டவிரோதமாக மக்களை ஒன்று கூட்டுதல்,மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வகையில் உணவு, கஞ்சி ,குடிபானம் வாழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டுதல் ,சுகாதாரப்பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ”என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற முஸ்லிம் நீதிபதியும் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி வழங்கியது மட்டுமன்றி திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் கடந்த 13 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்றே கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசடியம்மன் ஆலய முன்றிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க சென்ற அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேர் சங்கத்தின் தலைவி உட்பட குழுவினரை கஞ்சி வழங்கவிடாது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விரட்டியடித்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளருக்கு நீதிமன்ற தடை உத்தரவையும் வழங்கினர் . இந்த தடை உத்தரவை கல்முனை நீதவான் நீதிமன்ற முஸ்லிம் நீதிபதியே வழங்கியுள்ளார்.
இதில் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடைஉத்தரவில்” இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக செய்யவுள்ள நிகழ்வினால் பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாலும் அவ்வாறான நிகழ்வு இடம்பெற்றால் பொதுமக்களின் அன்றாட நிலை பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாலும் யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த புலி உறுப்பினர்களை நினைவு கூரும் நிகழ்வு நடைபெறாமல் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் இவ்வாறு இன்னும் பல இடங்களில் நீதிமன்ற தடை உத்தரவுகள் வழங்கப்படலாம் .பல கைதுகள் இடம்பெறலாம். இவ்வாறான அநீதியான பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நீதிபதிகள் துணைபோவதுதான் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. தற்போது வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள அதிகளவான நீதிமன்றங்களில் நீதிபதிகளாக முஸ்லிம் நீதிபதிகளே இருப்பது பேரினவாத ஆட்சியாளர்களுக்கும் இனவாத பொலிஸாருக்கும் தமிழின அடக்கு முறையை கட்டவிழ்த்து விட பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது சுகாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் , தொற்று நோயை பரப்பும் என்பதே இதனை தடை செய்ய பொலிஸார் முன்வைக்கும் காரணங்களில் முதன்மையானதாக இருக்கும் நிலையில் இந்தக் காரணங்கள் உண்மையில் மக்கள் நலன் கருதி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டதாக இருக்குமானால் எதிர்வரும் 23,24 ஆம் திகதிகளில் ”வெசாக் பொசன்”தினத்தை முன்னிட்டு சிங்கள பௌத்தர்களினால் நாடு முழுவதும் வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி அமைக்கப்படும் ”தன்சல்”நிலையங்களுக்கும் (அன்னதானம் வழங்கும் இடங்களுக்கும் )இதே காரணத்தைக் காட்டி நீதிமன்றங்களிடம் பொலிஸாரினால் தடை உத்தவுகளைப் கோர முடியுமா? அல்லது அப்படி தடை உத்தரவு கோரினால்கூட நீதிமன்றங்கள் வழங்கிடத்தான் முடியுமா?அல்லது யாராவது பொதுநலன் கருதி இந்த அன்னதான சாலைகளுக்கு எதிராக சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவுமென வழக்குத் தொடுத்தால் இந்த முஸ்லிம் நீதிபதிகளினால் அவற்றுக்கு தடை உத்தரவு போட முடியுமா?
தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்கள்,அடாவடிகளை மேற்கொள்ள முஸ்லிம் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்கள் துணைபோகின்றன. வடக்கில் கூட சில நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளே உள்ளனர். வடக்கு,கிழக்கு மாகாண நீதிமன்றங்களில் தமிழ் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை இருப்பதைப் பயன்படுத்தி அந்த இடங்களுக்கு சிங்கள நீதிபதிகளை நியமிக்காது இவ்வாறு முஸ்லிம் நீதிபதிகளை நியமித்து தமிழ் மக்களின் மாவீரர் நாள், தியாக தீபம் திலீபன் நினைவு நாள் , முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடைகளை விதித்து தமிழ், முஸ்லிம் பகைமையை, வெறுப்பை ,குரோதத்தை வளர்க்க பேரினவாத ஆட்சியாளர்கள் நன்கு திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
இவ்வாறான தடைகளுக்கு கண்டனங்கள் ,எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் நாம் தலையிட முடியாது.நீதிமன்றங்களின் உத்தரவுப்படியே பொலிஸார் செயற்படுகின்றனர் எனக்கூறி தமிழர் மீதான அடக்குமுறைகளுக்கு நியாயம் கற்பிக்கவே தற்போது ஆட்சியாளர்களினால் வடக்கு,கிழக்கு நீதிமன்ற முஸ்லிம் நீதிபதிகள் பயன்படுத்தப்படுகின்றனர் .இதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை பௌத்த விகாரை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களும் அதற்கு அவர் அடிபணியாததால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலும் அதன் விளைவாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமையும் சிறந்த உதாரணம்.