LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்ப் பொது வேட்பாளர்: தமிழரசியலில் உத்வேகத்தைப் பெறுகின்றதா?

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

கடந்த வாரம் நினைவு கூர்தலின் பின்னணியில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு மின்னூடகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. நோர்வேயின் அனுசரணையோடு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பின் போது வெளியிடப்பட்ட ஒஸ்லோ ஆவணம் ஒன்றினைப் பற்றியது அந்த செய்தியாகும். தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகிய சம்பந்தர் அந்த ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்ப்  பொது வேட்பாளருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்று அந்த செய்தி கூறுகிறது.சம்மந்தர் அப்படியெல்லாம் கருத்துக் கூறக்கூடிய ஆரோக்கியத்தோடு காணப்படுகிறாரா என்பது தமிழ் அரசியல் சூழலில் தொடர்ந்தும் சந்தேகமாகவே உள்ளது.அதைவிட முக்கியமாக கடந்த 15 ஆண்டுகளாக அவர் சமாதான முயற்சிகளின்போது தொட்டுக்கூடப் பார்க்காத அந்த ஆவணத்தை எதற்காக இப்பொழுது தூக்கி எடுத்து முதன்மைப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது.

முதலாவதாக, அந்த ஒஸ்லோ ஆவணம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…. “உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக  இரு சாராரும் ஆராய ஒப்புக்கொள்கின்றோம் .” அதாவது உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது.

அதன்படி இனி வரும் காலங்களில் பேச்சுவார்த்தை மேசைகளில் அது போன்ற ஒரு தீர்வை குறித்து ஆராய விரும்புகிறோம் என்றும் வியாக்கியானம் செய்யலாம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை மேசைகளில் அந்த ஆவணத்தைப் பற்றி யாரும் உரையாடியதாக ஞாபகம் இல்லை.

குறிப்பாக, ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அதிகளவு தீர்வு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரையிலுமான காலகட்டத்தைக் கூறலாம். இதில் 2015 இல் தொடங்கி 2018 வரையிலும் ரணில்மைத்திரி அரசாங்கம் யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் ஈடுபட்ட போது, தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகளும் பல்வேறு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்தன. அதன் பின் கோத்தாபய ஜனாதிபதியாக வந்ததும், ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். அந்த நிபுணர் குழுவின் முன்பும் தமிழ்க் கட்சிகள் தீர்வு முன் மொழிவுகளை, யோசனைகளை முன் வைத்தன.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் நிலை மாறுகால நீதிக்கான ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் அடிப்படையில், கட்டமைப்பு சார் மாற்றங்களை அரசாங்கம் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி யாப்பை மாற்றி ஒரு புதிய யாப்பை கொண்டு வர வேண்டியிருந்தது. அதற்காக நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஒரு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் பல உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் இணைந்து செயல்பட்டு ஓர் இடைக்கால வரைபை முன் கொண்டு வந்தன. அந்த இடைக்கால வரைபு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மைத்திரிபால சிறிசேன அதைக் குழப்பியடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவர் அதனைக் காட்டிக் கொடுத்தார். அதன் பின் அந்த இடைக்கால வரைபு முன்நகரவில்லை.

அந்த இடைக்கால வரைபானது சிங்கள மக்கள் மத்தியிலும் சந்தேகங்களை எழுப்பியது;தமிழ் மக்கள் மத்தியிலும் சந்தேகங்களை எழுப்பியது.அந்த இடைக்கால வரைபில் கூறப்பட்ட தீர்வுக்குஎக்கிய ராஜ்யஎன்று பெயர் வைக்கப்பட்டது. சிங்கள மக்களுக்கு அது ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.குறிப்பாகஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத; பிரிக்கப்பட்ட முடியாத; இலங்கைக்குள்என்ற வார்த்தைகளை சம்பந்தர் திரும்பத் திரும்ப கூறி வந்தார்.

அதே சமயம் தமிழ் மக்களுக்கு கூறும்போது அது சமஷ்ரிப் பண்புடையது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.எனினும் அதையுங்கூட முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.அன்றைக்கு அந்த யாப்புருவாக்க முயற்சியின் பெற்றோரில் ஒருவராகிய ரணில் விக்கிரமசிங்க இன்றைக்கு ஜனாதிபதியாக இருக்கிறார். அதுவும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி. ஆனால் அவர் என்ன கூறுகிறார்? முதலாவதாக,அவர் இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகச் சுருக்குகிறார்.இரண்டாவதாக,இப்பொழுது தேவையாக இருப்பது பொருளாதார மீட்சி என்று கூறுகிறார். மூன்றாவதாக, அவர் 13 பிளஸ் கூடத் தரத் தயாரில்லை. போலீஸ் அதிகாரம் இல்லாத 13 மைனஸைத் தரலாம் என்று கூறுகிறார்.இப்படியாக நிலைமாறுகால நீதியின் பெற்றோர்களில் மற்றவரும் தலைகீழாகி விட்டார்.

அவர்தான் இப்பொழுது ஜனாதிபதி. அவருக்கு வாக்களிக்க வேண்டாம் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று முப்பதற்கும் குறையாத சிவில் சமூகங்கள் கேட்கின்றன. ஆனால் அந்த சிவில் சமூகங்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் முன்வைக்கப்படுகின்றதா? அந்த ஆவணத்துக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ கேட்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றதா? ஆயின் கடந்த 15ஆண்டுகளாக அந்த ஆவணம் ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை? நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால வரைபு அந்த ஆவணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டதா?

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்பட்ட பொழுது சமாதானத்தின் பெற்றோரில் ரணிலும் ஒருவர்.பின்னர் 2015ல் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்தின்போதும் சமாதானத்தின் பெற்றோரில் ரணிலும் ஒருவர். இப்பொழுது அவர்தான் நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி. எனவே,2015ஆம் ஆண்டு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளின்போது அவரிடம் அது வலியுறுத்தப்பட்டதா? இல்லையே? அல்லது எக்கிய ராஜ்ஜிய என்ற இடைக்கால வரைபு ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டதா?

ஆயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நிலைப்பாட்டு ஆவணத்தின் அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வரத் தயாராக இருக்கிறாரா?அல்லது அவரை எதிர்க்கும் சஜித் பிரேமதாச அல்லது அனுர அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தைக்கு தயாரா? ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான ஜனாதிபதி வேட்பாளராவது ஏற்றுக் கொள்வார்களா? அப்படி யாராவது ஏற்றுக் கொண்டால் தமிழ்த் தரப்பு அவரோடு பேசப் போகலாமா?

ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் என்பது மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தத்தோடு உருவாக்கப்பட்டது. இனப் பிரச்சனைக்கு உள்நாட்டில் தீர்வு இல்லை. எல்லா இனப் பிரச்சினைகளும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்து லகத் தீர்வுதான் உண்டு,என்ற அடிப்படை உண்மையை வெளிப்படுத்தும் ஆவணங்களில் திம்புக் கோட்பாட்டைப் போல, ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணமும் ஒன்று. அதாவது இனப்பிரச்சினைக்கு ஒரு உள்நாட்டு தீர்வு இல்லை என்பதை நிரூபிக்கும் ஓர் ஆவணம் அது. இப்பொழுதும் ஐநா தீர்மானங்களிலும் அதுதான் நிறுவப்படுகின்றது.

எனவே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தமிழ்த் தரப்போடு உடன்பாடு ஒன்றுக்கு வருவாராக இருந்தால் அதில் மூன்றாவது தரப்பு ஒன்று சம்பந்தப்பட வேண்டும்.அவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றின்  மேற்பார்வையோடு தமிழ்த் தரப்போடு பகிரங்கமாக உடன்பாட்டுக்கு வர எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளராவது தயாராக இருக்கிறாரா ?

அப்படி யாராவது தயாராக இருந்தால் நிலைமை வேறு.ஆனால் கிளிநொச்சியில் நடந்த மே தினக் கூட்டத்தில் மனோ கணேசன் பேசியது போல, தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரும் ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் மக்கள் மத்தியில் நூறு வாக்குகளைப் பெறுவார் என்றால், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஆயிரம் வாக்குகளை இழப்பார் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தமாக இப்பொழுதும் உள்ளது. அதாவது 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் கள யதார்த்தம்.அந்த யதார்த்தத்தை நன்கு விளங்கி வைத்துக் கொண்டுதான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த உரையாடல் தொடங்கப்பட்டது.

தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் இனவாதத்தைத் தூண்டுபவர் அல்ல. அவர் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை வலியுறுத்தும் ஒருவர். இலங்கை தீவின் இனப் பிரச்சினை எனப்படுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கக் கூறுவது போல வடக்கின் பிரச்சினை அல்ல. அல்லது கோட்டாபய ராஜபக்ஷை கூறியது போல அது பொருளாதாரப் பிரச்சினை அல்ல. மாறாக,அதைவிட ஆழமாக அது இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை சிங்கள பௌத்த அரசாட்சி ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவுதான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர்,இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை பலப்படுத்த வேண்டும் என்று கேட்பார்.. தமிழ் மக்களை சுயநிர்ணய உரிமை கொண்ட ஒரு தேசம் என்று அவர் வரையறுப்பார். எனவே அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதற்கு ஜனாதிபதித்  தேர்தலை ஒரு மறைமுக பொது வாக்கெடுப்பாக நடத்தலாமா என்று அந்த தெரிவை முன்வைத்துச் செயற்படுகின்றவர்கள் கேட்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தமிழ்பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளவில்லை.அதுதொடர்பாக தனது நிலைப்பாட்டை வடமராட்சியில் தெளிவாக முன் வைத்திருக்கிறார்.அது தமிழரசுக் கட்சியின் குறிப்பாக சம்பந்தரின் வழமையான நிலைப்பாடு.அதன்படி தென்னிலங்கையில் உள்ள யாராவது ஒரு பிரதான வேட்பாளரோடு   பேரம் பேசுவது என்பதுதான் அதன் சாராம்சம் எனலாம்.

 இந்த நிலைப்பாடு பொருத்தமற்றது என்று கருதித்தான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று கேட்கப்படுகின்றது.தமிழ் சமூகம் அது தொடர்பாக இப்பொழுது ஆழமாக உரையாடத் தொடங்கியிருக்கின்றது. கொழும்பில் உள்ள ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கூறியது போல தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஓர்  உத்வேகத்தை-momentum-ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டதா