LOADING

Type to search

கனடா அரசியல்

ஒன்றாரியோ முதல்வர் தனது அமைச்சரவையில் செய்துள்ள மாற்றங்கள்

Share

குடியிருப்புவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் குடியிருப்புவசதி இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் நியமனம்.

கல்வி அமைச்சராக இருந்த ஸ்டீபன் லெட்சே மின்சார மற்றும் சக்தி துறை அமைச்சராக நியமனம்

ஜூன் 6ஆம் திகதி, வியாழக்கிழமையன்று ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில், குடியிருப்புவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின், குடியிருப்புவசதி இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பதினைந்து மில்லியன் மக்கள் வாழும் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது தமிழ் அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் தொடர்ந்து விளங்குகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் அமைச்சர் போல் கலண்ட்ரா ஆகியோருடன் இணைந்து ஒன்ராறியோ வாழ் மக்களுக்காக பணியாற்றுவதற்கு குடியிருப்புவசதி இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இத்தருணத்தில், என் தொகுதியாகிய ஸ்காபரோ – றூஜ் பார்க்கிலுள்ள மக்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, இவர் ஒன்ராறியோ மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஒன்ராறியோ அரசின் முழுமையான நிதியுதவியில் போக்குவரத்துத் துறையில் கொண்டுவரப்பட்ட ‘ஒற்றைக்கட்டணத்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் மூலம் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பல்வேறுபட்ட போக்குவரத்துச் சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் தலா ஆண்டிற்கு 1600 டொலர்களை ஒருவர் சேமிக்க வழிவகுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விஜய் அவர்கள் நேற்று நான்காவது முறையாக பொய்யாமொழிப் புலவரின் உலகப்பொதுமறையாம் ‘திருக்குறள்’ மீது பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றார். இதேபோல், இவர் கடந்த 2018, 2022 ஆம் ஆண்டுகளில் தனது சட்டமன்றப் பதவிகளை ஏற்கும்போதும், 2023ஆம் ஆண்டில் தனது அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ளும்போதும் திருக்குறள் மீது பதவியேற்பு உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.