நம்பிக்கை நிறைந்தது எமது எதிர்காலம் என்கிறார் கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்கள்
Share
நம்பிக்கை நிறைந்தது எமது எதிர்காலம் என்ற தலைப்போடு கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரு கணக்காளராகவும் பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கும் குமார் இரத்தினம் அவர்கள் 1993ம் ஆண்டு கனடாவில் ஆரம்பிக்கப்பெற்று மிகக்குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் செல்வாக்குள்ளதாக விளங்கிய ‘சூரியன்’ வாரப் பத்திரிகையின் வெளியீட்டுக் குழுவில் முக்கிய பங்கு வகித்து அதன் வெற்றிக்கு ஊன்று கோலாகவும் விளங்கினார்.
இவரது தந்தையாரும் கொழும்பில் ஒரு அனுபவம் பெற்றி ஊடகவியலாளராக விளங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். 2009 முதல் நான் பேரவையின் உறுப்பினராகவும் தன்னார்வத் தொண்டராகவும் இருந்து வருவதில் பெருமையடைந்து, எமது சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்திய பல வெற்றிகளுக்கு சாட்சியாகவும் பங்களித்துமிருக்கின்றேன்.
இருப்பினும், எமது பேரவை சமீபத்தில் சில சவால்களை எதிர்கொண்டிருந்தது. செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் வலுவான குரலின் தேவை பற்றிய உங்கள் கருத்துக்களை நான் புரிந்துகொண்டிருக்கின்றேன். வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களால் கட்டமைக்கப்படவுள்ள புதிய நாளையை வழிநடத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.
எமது எதிர்கால குறிக்கோள்கள்:
உங்கள் குரலை அனைவரும் கேட்கச்செய்வது: அதிக செயல்திறனுக்கான குழுச்செயல்பாடுகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம், கனடா, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக மாறுவோம்.
வெளிப்படைத்தன்மையை பேணுதல்: எங்களின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், சமூக ஊடகம் மற்றும் புதிய மின்னஞ்சல் செய்திமடல் மூலம் அனைத்து தகவல்களும் சிறந்த முறையில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். கூடுதலாக, மெய்நிகர் கருத்து பரிமாற்ற சந்திப்புக்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் அனைவரது கருத்துக்களும் கருத்தில் கொள்ளப்படும்.
நிலையான வாய்ப்புகளை உருவாக்குதல்: எங்கள் சமூகத்திற்கான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் முதலீட்டை உறுதிசெய்து, வலுவான ஆதார உத்திகளை உருவாக்க, கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்.
உறுப்பினர்களுடனான தொடர்ச்சியான ஈடுபாடு: உடனுக்குடனான தகவல் பரிமாற்றங்கள் மூலம் அனைத்து பேரவையின் முன்முயற்சிகள், அதன் ஆணைகள் மற்றும் செயற்திட்டங்கள் யாவும் அனைத்து அங்கத்தவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்.
எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்:
இது கனடிய தமிழர் பேரவைக்கான புதிய அத்தியாயம், உங்களின் பங்கேற்பு எங்களுக்குத் தேவை. எங்களுடன் உங்களை இணைத்துக்கொள்ள:
புதுப்பிக்கப்படவுள்ள தகவல் தொடர்பு வழிகள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.
உங்கள் குரலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்: கருத்து மன்றங்கள், இணையத்தள விவாதங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கவும்.
உங்கள் திறமைகளை எமது சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்: எங்கள் சமூக செயற்திட்டங்களில் உற்சாகமான தன்னார்வ வாய்ப்புகளை நாங்கள் வழங்குவுள்ளோம்.
ஒன்றாக இணைந்து, வெளிப்படைத்தன்மையோடு செயற்படும்போது, திறமையான முடிவுகளை வழங்கும் வலுவான, மிகவும் பயனுள்ள பேரவையை உருவாக்க முடியும். கனடிய தமிழர் பேரவையானது தமிழ்ச் சமூகத்திற்காக ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கும் மரபைக் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கும், நாம் சேவை செய்பவர்களுக்காக குரல் கொடுப்பதற்குமான எதிர்காலம் இப்போது நம் கைகளில் உள்ளது.
இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். ஏதேனும் ஐயப்பாடுகள் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பதில்களை பெற்றுக்கொள்ளலாம். நம்பிக்கை நிறைந்தது எதிர்காலம்.
நன்றியுடன்,
குமார் இரத்தினம்
தலைவர், கனடிய தமிழர் பேரவை
.இவ்வாறு மேற்படி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது