LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதித் தேர்தலும் தென்னிலங்கையும்

Share

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு நடைபெறவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் குறிப்பிடப்பட்டு வந்தது. எனினும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது ரணில் விக்கிரமசிங்க மேலும் சில ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு கதைகள் குறிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையின் படி ஜனாதிபதித் தேர்தலானது செப்டெம்பர் – ஒக்டோபர் மாதத்தில் நடைபெறலாம் என்று அறிவித்ததுடன் அதுதொடர்பான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க இதுவரை தான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது அல்லது பொதுவேட்பாளராக போட்டியிடுவதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றானர். அத்துடன் அவர் தற்போது ஜனாதிபதியாக காணப்படுகின்ற போதிலும் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களின் கொள்கைப்படியே செயற்பட்டும் வருகின்றார்.

பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதுடன் ஐக்கிய தேசிய கட்சியில் சிலர் இணைந்தும் சிலர் வேறு கட்சியாக ஆதரவும் தெரிவித்து வருகின்ற போதிலும் சில உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியிலேயே நீடிக்கின்றனர். அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் எனவே தமது கட்சியின் சார்பில் வேறு ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு வந்தனர்.

இந்தநிலையில் அண்மையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளை ஏற்று செயற்படும் கட்சியை சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு போட்டியாக சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸநாயக்க, ஆகியோர் போட்டியிட உள்ளதுடன் தம்மிக்க பெரேராவும் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இவை அனைத்தும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அல்லது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆனால், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சில சம்பவங்கள் அண்மைய நாட்களின் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

அதன்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்~ ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் ஜனாதிபதியின் பதிவிக்காலமானது 6 ஆண்டுகளாக காணப்பட்டது. எனினும் மைத்திரிபால ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பின் பிரகாரம் (அரசியலமைப்புத் திருத்தம்) ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறகை;கப்பட்டது. எனினும் அது சரியான முறையில் சட்டமாக்கப்பட்டுள்ளதா அல்லது அவை தொடர்பான மாற்றங்கள் செய்ய முடியுமா என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கான உத்தி ஒன்றாகவே கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றார்கள். முன்னைய அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதிவிக்காலம் ஆறு ஆண்டுகள் என குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் தேர்தலை நடத்தாது மேலும் ஒரு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக தெரிகின்றது. இதற்கு முன்னரும் ஒருதடவை தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட்டுவிட்டு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவே அல்லது அரச அச்சுத் திணைக்களத்துக்கு செலுத்தாமல் இருந்து தேர்தல் பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில், வழக்குத் தாக்கல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,
மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியும், அதுவரையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் திங்கட்கிழமை ஜூலை 8ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன் நிமித்தம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

விஜித் மலல்கொட, முர்டு பெர்ணான்டோ, ப்ரீதி பத்மன், எஸ்.துரைராஜா ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெறுகின்றனர்.

எனவே, மேற்படி சம்பவங்களை நோக்குமிடத்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பது குறித்து ஊகிக்க முடியாதுள்ளது.
இது தொடர்பில் அனுரகுமார தகருத்துத் தெரிவிக்கையில் 2019 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கக் கோரிய போது, ​​உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியது. இதன்படி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அனுரகுமார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஜனாதிபதி மற்றும் அவரது குழுவின் சதிகள் அல்லது தந்திரோபாயங்களை தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்

சத்தியன்- கனடா