LOADING

Type to search

கனடா அரசியல்

கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடா உதயன் ஆசிரிய பீடம் அவரிடத்தில் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது

Share

கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடா உதயன் ஆசிரிய பீடம் அவரிடத்தில் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது

மேற்படி கடிதத்தில் கனடா உதயன் ஆசிரிய பீடம் பின்வருமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது

திரு குமார் இரத்தினம்
தலைவர்
கனடிய தமிழர் பேரவை
கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றமைக்கான எமது வாழ்த்துக்கள்

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு அமைப்பாகவும்,அதற்கு மேலாக தாயகத்தில் உள்ள எமது உறவுகளின் அரசியல் சமூக மற்றும் கல்வி ஆகியவை சார்ந்த விடயங்களில் ஒரு ஆதரவுச் சக்தியாகவும் இயங்கும் வகையில் நிறுவப்பெற்ற கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக ஒரு காலத்தின் தேவையாக தங்கள் நியமனம் இடம்பெற்றிருக்கலாம் என்பதை நாம் உணர்கின்றோம்..

எவ்வாறாயினும் தங்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டிய கடமை எமது கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு உண்டு. அதற்கு காரணம், எமது பத்திரிகையானது கடந்த பல வருடங்களாக கனடிய தமிழர் பேரவைக்கான பரப்புரைகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றை பிரசுரம் செய்து ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது..அவ்வப்போது தங்கள் அமைப்பு நடத்திய நூற்றுக்கணக்கான பொது நிகழ்வுகளிலும் எமது ஆசிரிய பீடத்தின் பிரசன்னம் இருந்துள்ளது.

இவ்வாறிருக்க, கடந்த காலங்களில் கனடியப் பேரவையின் தலைமையும் அதன் நிர்வாகப் பணியாளர்களும் இணைந்து மேற்கொண்ட பல விரும்பத்தகாக செயற்பாடுகள் தொடர்பாக பல செய்திகளையும் ஆசிரிய தலையங்களையும் தீட்டி எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த எமது ஆசிரிய பீடம் தீவிரமான முயற்சிகளையும் எடுத்தது.

இவ்வாறாக, நீண்ட காலமாக கனடியத் தமிழர்களின் பொதுக் கருத்துக்களுக்கும் அவர்களின் விருப்புகளுக்கும் மாறான கனடிய தமிழர் பேரவையின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் தங்கள் அமைப்பிற்கு எதிரான ஒரு எழுச்சியை கனடாவில் மாத்திரமல்ல, தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தின என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

எனவே தங்கள் பதவிக்; காலத்தில் தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு. பின்வரும் வேண்டுகோள்களை எமது ஆசிரிய பீடம் தங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றது.

1. கனடிய தமிழர் பேரவையின் தற்போதைய இயக்குனர் சபையல்லாத நிர்வாகப் பணியாளர்களை இடைநிறுத்தம் செய்து புதியவர்களை தகுந்த நேர்முகப் பரீட்சைகளின் மூலம் தெரிவு செய்து பதவிகளில் இணைத்துக் கொள்ளல்

2. கடந்த பத்து ஆண்டுகளுக்கான கனடிய தமிழர் பேரவையின் கணக்கறிக்கை கனடிய தமிழ் மக்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்படுதல். (இந்த வேண்டுகோளை தாங்கள் ஏற்றுக்கொண்டால் அந்த அறிக்கையை எமது பத்திரிகை இலவசமாக பிரசுரம் செய்யும்)
மேற்படி இரண்டு வேண்டுகோள்களையும் எமது ஆசிரிய பீடத்தின் சார்பாகவும் கனடிய தமிழர் சமூகத்தின் சார்பாகவும் தங்களிடம் சமர்பித்து, தங்கள் மேலான நடவடிக்கைகளுக்காகவும் பதிலுக்காகவும் காத்திருக்கின்றோம்.

நன்றி
இங்ஙனம்
கனடா உதயன்- ஆசிரிய பீடம் – 04-07-2024