LOADING

Type to search

இலங்கை அரசியல்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடித் தடை!

Share

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடைவித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர் சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிசில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவும் உத்தரவிட்டார்.

தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அர்ச்சுனா நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்கா விட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இ.அர்ச்சுனா அண்மையில் சில களேபரங்களில் ஈடுபட்டு சமூக ஊடகங்களில் பிரபலமாகியிருந்தார். வைத்தியத்துறை மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியினால், அர்ச்சுனாவின் களேபரங்களின் வழி மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாவகச்சேரி பொலிசார் இது குறித்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தனர். அது தொடர்பான 5 முறைப்பாடுகளில் இன்று (16) மருத்துவர் இ.அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையில், முறைப்பாடளித்த வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இ.அர்ச்சுனா தனக்கு சட்டத்தரணிகளை நியமிக்கவில்லை.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டுக்காக, அர்ச்சுனா அந்த வைத்தியசாலையின் நிர்வாகத்தில் தலையிட, வைத்தியசாலைக்குள் நுழைய நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார். வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டது.

அத்துடன், சமூக ஊடகங்கள் வழியாக சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களுடன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவும் உத்தரவிடப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை அர்ச்சுனா முன்வைக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ, நேரலை வெளியிடவோ நீதிமன்றம் தடைவிதித்தது, அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.