LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சமஷ்டியை ஏற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

Share

– வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து

ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசாதெரிவித்துள்ளார்.

01-08-2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கின்றோம். உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல்முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டுவரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.

இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத்தினராவோம். எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஷ்டி முறைமையின் மூலம் உறுதிசெய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றோம்.

எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்த செயற்படுவோம். இதற்கு அனைவரும் ஜனநாயக வழிநின்று செயற்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.