“இளம் இசையாசிரியையான ஆதிரை சிவபாலன் ரொசான் அவர்கள் பாரம்பரிய இசைக்குடும்பத்தின் பெருமைக்குரிய வாரிசாகத் திகழ்கின்றார்”
Share
இசைச் செல்வி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் வயலின் வித்துவான் மூர்த்தி அவர்கள் புகழாரம்
‘இன்றைய அரங்கேற்றச் செல்வி அபினா அவர்களின் அரங்கேற்றம் ஒரு முழு நீள வயலின் கச்சேரி போன்று எனக்கு இனித்தது. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டையும் அதனைத் தொடர்ந்து வயலின் இசையையும் கற்றுத் தேர்ந்த அபினா அவர்கள் இந்த அற்புதமான இசைக்கருவியின் நுணுக்கங்களை சிறப்புற உணர்ந்து கற்று தனது குருவான ஶ்ரீமதி ஆதிரை சிவபாலன் ரொசான் அவர்களுக்கு பெருமையைத் தேடித் தந்துள்ளார். இதற்கு காரணம் இளம் இசையாசிரியையான ஆதிரை சிவபாலன் ரொசான் அவர்கள் பாரம்பரிய இசைக்குடும்பத்தின் பெருமைக்குரிய வாரிசாகத் திகழ்கின்றார்.
அவரது பேரனார் இராசலிங்கம் மாஸ்டர் அவர்கள் இலங்கையில் ஒரு புகழ்பெற்ற இசை ஆசிரியராகவும் இலங்கை வானொலியின் வித்துவானாகவும் திகழ்ந்தவர்கள். அவரது தாயார் தனது தந்தையாரிடம் கர்நாடக இசையை முழுமையாகக் கற்று தேர்ந்த ஒரு குரு ஆவார். அத்துடன் அவரது தாய் மாமனாராகிய மிருதங்க வாருதி திரு வாசுதேவன் இராஜலிங்கம் அவர்கள் கனடாவின் ஒரு மதிக்கப்பெறுகின்ற திறமையான மிருதங்க வித்துவானாகத் திகழ்கின்றார். இவர்கள் இங்கு ஒரு கர்நாடக சங்கீர பரம்பரையை உருவாக்க வல்லவர்கள். அவர்களின் மாணவியான அபினா அவர்கள் தனத சாமர்த்தியத்தால் இன்றை அரங்கேற்றத்தில் முத்திரை பதித்துள்ளார்”
இவ்வாறு கடந்த 27ம் திகதி சனிக்கிழமையன்று றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள அழகிய விழா மண்டபத்தில் நடைபெற்ற இசைச் செல்வி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் வயலின் வித்துவான் மூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.
மேற்படி வயலின் அரங்கேற்றத்திற்கு தொகுப்பாளராக த0ிருமதி ஜனன்சி ஜெயரட்ணராஜா சிறப்பாகவும் அழகிய முறையிலும் பணியாற்றினார்.
சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அழைக்கப்பெற்றிருந்தார்.
பக்கவாத்தியக் கலைஞராக மிருதங்க வித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களும், கடம் வாசிப்பில் ரமணன் இந்திரகுமார் அவர்களும், கஞ்சிராக் கலைஞராக ரமணன் கிருஸ்ணராஜக் குருக்கள் அவர்களும் தம்புராக் கலைஞராக செல்வி அமிரா முரளிதரனும் தங்கள் பங்களிப்பை வழங்கி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்றத்தை மேலும் மேன்மையுறச் செய்தனர்.
ஆரம்ப உருப்படியான ‘வர்ணம்’ என்பதோடு தனது இசை ஆளுமையை சபையோருக்கு சமர்ப்பிக்கும் வகையில் ஆரம்பமே சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும் வகையில் அமைந்து அபினாவிற்கு மாத்திரமல்ல பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவருக்கும் கரகோசங்களைப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து வந்த உருப்படிகளை தனது குருவான ஆதிரை சிவபாலன் அவர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்க அபினா சிற்றம்பலம் அவர்கள் ராகம் தானம் பல்லவி வரையும் தனது ஆழமான இசை பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை சபையோருக்கும் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் காட்டினார்
தனது சக மாணவி ஒருவரின் ‘தாளம்’ அவருக்கு மேலும் உதவிக் கரம் நீட்டியது என்றால் அதுவும் மிகையாகாது.
அபினா அவர்களின் வயலின் அரங்கேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த, லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது உரையில் அன்றைய அரங்கேற்றம் பல சிறப்புக்களை பின்னணியாகக் கொண்டது என்றும் அவற்றில் இராஜலிங்கம் மாஸ்டர் அவர்கள் இசைப் பரம்பரை கனாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர் உருவாக்கும் காலம் நெருங்கிவருவதாக தான் உணர்வதாகவும், அந்தத் தொடர்ச்சியில் இசையின் மேன்மையினை நிரூபிக்கும் வகையில் அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்றம் அவரது குருவான ஆதிரை சிவபாலன் ரொசான் அவர்களின் முதலாவது வயலின் அரங்கேற்றம் என்ற பெருமையை நிலை நாட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இறுதியில் பக்கவாத்தியக் கலைஞர் மற்றும் கலைஞர்கள் அனைவரும் அபினா அவர்களின் பெற்றோர் சிற்றம்பலம் தம்பதியினால் கௌரவிக்கப்பெற்றனர்.
–சத்தியன்