LOADING

Type to search

இலங்கை அரசியல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்களும் உயிர் துறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறதா?

Share

வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை இந்த அரசு தவிர்த்து வருவதாக யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தலைவர் கே. செல்வகுமார், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் ஏழாவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

“நிலக்கசனின் தாய் அண்மையில் காலமாகியுள்ளார். தன்னுடைய மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அந்த தாய் ஏறாத இடமில்லை. சகல ஜனநாயக வழியிலான போராட்டங்களிலும் பங்கேற்றும் தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென போராடினார். அதேபோலத்தான் தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இறப்பு குறித்து ஒரு விசாரணை கூட நடத்தாமல் இந்த அரசு தட்டிக்கழித்து வருகிறது. காலப்போக்கில் அவர்களின் உறவினர்களும் உயிரிழப்பார்கள் அப்பொழுது இந்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைக்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஆகவே உயிரோடு இருக்கும் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.”

01-08-2024 தினம் (ஓகஸ்ட் 01) யாழ்ப்பாணம் ஊடக மையத்தில், வடக்கின் ஊடகவியலாளர்கள் இணைந்து 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி, படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சனுக்கு மலர் மாலை அணிவித்தும் விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் கொல்லப்பட்டபோது அவருக்கு 22 வயது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (MRTC) ஊடகவியலைக் கற்றுக்கொண்டிருந்ததோடு, யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரபல மாணவர் வெளியீடான ‘சாளரம்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் மேற்கு கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் உள்ள நிலக்சனின் வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

குற்றவாளிகளால் அச்சமடைந்த அவரது நண்பனால் நிலக்சன் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு நிலக்சனின் பெற்றோர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிலக்சன் மற்றும் வடக்கு கிழக்கில் படுகொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவில்லை.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டது. அவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள்.

நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் முதலாவது மனித உரிமைகள் தின நினைவேந்தலின் போது பட்டியலைப் பெற்றுக்கொண்ட அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

ஐயாத்துரை நடேசன், எல்.எம்.பலீல் (நற்பிட்டிமுனை பலீல்), சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சுப்பிரமணியம் ராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜீவமன், இசைவிலி செம்பியன் (சுபாஜினி), பரணிரூபசிங்கம் தேவகுமார், இராசையா ஜெயேந்திரன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மகாலிங்கம் மகேஸ்வரன், மாரியப்பு அந்தோணிகுமார், ஷோபனா தர்மராஜா (இசைப்பிரியா), திருகுலசிங்கம் தவபாலன் மற்றும் சகாதேவன் நிலக்சன் உள்ளிட்டவர்கள், 2004-2010 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.