LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன்று கோலாகலமாக ஆரம்பம்!

Share

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ இன்று வெள்ளிக்கிழமை (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக்கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது.

யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், வெளியீட்டகங்கள், புத்தகங்கள் சார் அமைப்புக்கள் பங்குபற்றுகின்றன. இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் வெளிவரும் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளன.

எமது சமூகத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், எழுத்தாளர்களை வெளிக்கொண்டுவரும் வகையிலும், எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்புக்கான களமொன்றை உருவாக்கும் வகையிலும் யாழ்ப்பாண புத்தகத் திருவிழா 2024 இனை யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றம் ஒழுங்குசெய்துள்ளது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா இனி ஒவ்வொருவருடமும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் முதியோர் என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.