சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கிடைக்காது விட்டால் வைத்தியசாலைக்கு முன் தொடர் போராட்டம்…
Share
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் எச்சரிக்கை.
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(13-08-2024)
சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, அவர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
சிந்துஜாவின் மரணம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் 13-08-2024 அன்று காலை இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்றைய தினம் செவ்வாய்(13-08-2024 ) சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்தோம்.
சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்ததில் இருந்து நாங்கள் வைத்தியசாலையுடன் தொடர்ந்து உரிய அதிகாரிகளுடனும்,சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்,மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலருடன் கதைத்து அவர்களுடன் சந்திப்புக்களை முன்னெடுத்து ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன் னெடுத்தோம்.
எனினும் ஏமாற்றுகின்ற,அல்லது மூடி மறைக்கின்ற சம்பவங்களாக தொடர்ந்தும் அவர்களின் நிர்வாக நடவடிக்கை கள் தொடர்வதன் காரணமாகவே நாங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குற்றமிழைத்தவர்கள் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு,அவர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
அவற்றை முன்னெடுப்பார்கள் என நம்புகின்றோம்.இல்லை என்றால் நாங்கள் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தை முன்னெடுப்போம்.என அவர் மேலும் தெரிவித்தார்.