LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் கனிமங்கள் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தை அபகரிக்கும் திணைக்களங்கள்

Share

ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது.

அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன,கடலோர பாதுகாப்பு திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம்,சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள்,அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழுமியிருந்த மக்கள் அவர்களுடைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திருப்பி அனுப்பியிருந்தனர்.

கனிய மணல் கூட்டுத்தாபனம் கொக்கிளாய் முகத்துவார பகுதியிலிருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக உள்ள கரைவலைப்பாடுகள் மற்றும் காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுவந்த விளைநிலங்கள்,மானாவரிக் காணிகளை மேற்சொன்ன 44 ஏக்கரை 32 குடும்பங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து முள்கம்பி வேலிகளை அமைத்து அடத்தாக,அதுவும் உறுதிக்காணிகள் (சொந்தக்காணிகள்) கனிய மணல் அகழ்வை செய்துவருகிறார்கள்.

மாகாண சபைக்காலத்தில் இந்த அடத்தான வேலைகளை செய்வதற்கு நாம் கொடுக்கவில்லை.இந்த காணி பறிப்பு நடவடிக்கை ஏற்கனவே இந்த பகுதியில் நிறையவே நடந்திருக்கிறது.இராணுவப்பாதுகாப்போடு ஏற்கனவே 20 ஏக்கர் வரையான பூர்வீக தமிழர்களுடைய உறுதிக்காணிகளில் தற்பொழுது சிங்கள குடியேற்றம் நடைபெற்றிருக்கிறது. அதேபோல்,கொக்கிளாய் முகத்துவாரத்தில் இது தவிர,நான் குறிப்பிட்ட 44 ஏக்கர் கனிய மணல் அகழ்வுக்காக தமிழ் மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.

‘மாற்றுக்காணிகளோ பணமோ எமக்கு வேண்டாம்;எமது முன்னோர்கள் எமக்கு தந்த பூர்வீக காணிகளே எமக்கு வேண்டும்’ என்று பல போராட்டங்களை இப்பிரதேச மக்கள் நடத்திவிட்டார்கள்.

அதேபோல் இப்பிரதேச மக்கள், தங்களுடைய பூர்வீக பரம்பரைக்காணிகளை பறிக்கின்றார்கள் என்றும் கனியமணல் அகழ்வினால் தமது கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் கரையோர வளங்களும் இப்பகுதி கடற்தொழிலும் அழிக்கப்படுகிறது என்றும் பெரும் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் நன்னீர் ஊற்றுக்கள் உவர் நீராக மாறும் நிலை ஏற்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் கடல் நீர் கிராமத்துக்குள் வரலாம் எனவும் அம்மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.இந்த செயற்பாடுகள் காரணமாக காலப்போக்கில் கிராமம் வளமற்று வரட்சி இடமாக மாறலாம் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் எங்கள் வாழ்வாதார நிலத்தையும் கடலையும் பறிக்காதீர்கள் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த 31 ஆம் திகதியும் கனிய மணல் அகழும் நோக்கத்தோடு திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததோடு,நாம் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து அவர்கள் திரும்பி சென்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோ மீட்டர் நீளமானது.கனிய மணல் கூட்டுத்தாபனம் இந்த முயற்சியில் ஈடுபடுவதென்பது கரையோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கும் இருப்புக்கும் கேள்விக்குறியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.இது தவிர,திணைக்களங்கள் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்வதிகாரிகளோடு கூட்டம் நடத்தி வருவது சரியா?என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கிறார்கள்.கடற்தொழில் பிரதிநிதிகள், காணிகளின் உரிமையாளர்கள் எவரையும் அழைத்து பேசாது தங்களுடைய என்னத்துக்கு ஏற்ப செயல்படுவது எந்த நியாயம் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தயவு செய்து வாழவிடுங்கள்…நிலப்பறிப்புகளை செய்யாதீர்கள் என்பதே இப்பிரதேச மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.