LOADING

Type to search

இலங்கை அரசியல்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட தமிழ் எம் பி க்கள்

Share

(21-08-2024)

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களைப் போன்று கட்சித் தாவல்களும் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணி யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி, தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய நிலையில், வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ள நிலையில், வேலுகுமாரைப் பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் “பார் குமார்” என்று கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் வட பகுதி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட இந்த ‘பார்’ தொடர்பான விடயங்களில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் நம்பப்படுகின்றது. சில தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்களில் ‘மதுபானக் கடைகள்’ வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிவருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது