LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையர்களை ”13”படுத்தும் பாடு

Share

”நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இந்த ”13” படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள அரசியல்வாதிகள் வெறுக்கும் எண்ணாக ”13”இருந்தாலும் அவர்கள் விட முயற்சித்தாலும் விட முடியாத ,ஒழிக்க நினைத்தாலும் ஒழிக்க முடியாத ,பேசக்கூடாதென நினைத்தாலும் பேசாமல் இருக்க முடியாத ,வாக்குறுதி கொடுக்கக் கூடாதென நினைத்தாலும் கொடுக்க வேண்டியிருக்கின்ற வகையில் அவர்களை ”13” மிரட்டிக்கொண்டிருக்கின்றது”

கே .பாலா

எண் 13 என்று சொன்னாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். எண் 13 பேய், ஆவி, கெட்ட சக்தி என்று அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான பல விஷயங்களுடன் தொடர்புடையது.நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறையும் அல்லது கட்டிடத்தில் 13 ஆவது மாடியும் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம்.

13 என்ற எண்ணைப் பற்றி பல விஷயங்கள் பரவலாக கூறப்படுகின்றன. உலகில் அதிலும் பெரும்பாலும் மேலை நாடுகளில் 13 என்ற எண்ணைக் கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம்.மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண் 13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருந்தாலும் அந்த ”13” என்ற எண் இலங்கையையும் ஆட்சியாளர்களையும் சிங்களவர்களையும் படாதபாடு படுத்தி வருகின்றது.

இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட உடன்படிக்கையே கடந்த 37 வருடங்களாக ”13” என்ற வடிவில் இலங்கை அரசியலை புரட்டி எடுத்து வருவதுடன் இந்த எண்ணை குறிப்பிட்டாலே சிங்களவர்கள் அலறித்துடிக்கும் அவலமும் நீடித்து வருகின்றது.

இந்த ”13” ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்ததுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த ”13”ஆவது அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டிருந்ததே சிங்களவர்களுக்கு ”13”என்ற எண் கெட்ட எண்ணாக,துரதிர்ஷ்ட எண்ணாக,அபசகுன எண்ணாக,வெறுப்புக்குரிய எண்ணாக மாறி விட்டது.

இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முதல் குழந்தையாக 1988ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாண சபையானது பதினாறு மாதங்கள் மட்டுமே செயற்பட முடிந்தது.இது நடந்து 17 ஆண்டுகளின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டில் வட,கிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பின், தேர்தல் நடத்தப்பட்டு 2008இல் கிழக்கு மாகாணசபை உருவானது. இதன் மூலம் தமிழர்களுக்கும் இந்த ”13” துரதிர்ஷ்ட எண்ணாகவே உள்ளது.

இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கூட இந்த ”13”கெட்ட ,துரதிர்ஷ்ட எண்ணாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலோ ,பாராளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாணசபைகளுக்கான தேர்தலோ வந்தால் வேட்பாளர்களின், கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் எண்ணாகவும் இந்த ”13” இருப்பதையும் மறுத்து விட முடியாது. அந்தளவுக்கு இந்த துரதிர்ஷ்ட எண்ணான , வெறுக்கப்படும் எண்ணான ”13”தான் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் ”வெற்றி” எண்ணாகவும் உள்ளது.

அதனால் தான் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இந்த ”13” படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள அரசியல்வாதிகள் வெறுக்கும் எண்ணாக ”13”இருந்தாலும் அவர்கள் விட முயற்சித்தாலும் விட முடியாத ,ஒழிக்க நினைத்தாலும் ஒழிக்க முடியாத ,பேசக்கூடாதென நினைத்தாலும் பேசாமல் இருக்க முடியாத ,வாக்குறுதி கொடுக்கக் கூடாதென நினைத்தாலும் கொடுக்க வேண்டியிருக்கின்ற வகையில் அவர்களை ”13” இறுகப் பிடித்து வைத்துள்ளதை அண்மைய நாட்களில் அதிகம் அவதானிக்க முடிகின்றது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் தனது வெற்றியை ”13” தான் தீர்மானிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ”இந்த நாட்டில் அரசியல் முறையில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ அகற்ற முடியாத நிரந்தரமான காரணியாக மாகாணசபை மாறியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு கடினமானதாக அமையலாம்.எனவே முதலில் ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்து நாட்டின் எதிர்காலத்திற்காக 13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த வேட்பாளரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் சென்று” நான் அரசியல் சந்தர்ப்பவாதி அல்ல.நேராகப் பேசும் நபர் என்பதால் 13 ஆவதுஅரசியலமைப்புத் திருத்தத்தை பொலிஸ் ,காணி அதிகாரங்களுடன் நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதி மொழியை உங்களுக்குத் தருகின்றேன் .உயர் சட்டப் புத்தகத்திலுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும். நாட்டின் வடக்கு, கிழக்கு, மேல் என 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்த நான் ஒருபோதும் தயங்கப் போவதில்லை” என உறுதி மொழி வழங்கியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் ”13”ஐப் பார்த்து நடுங்கியவர்களில் ,அதனை வெறுத்து ஒதுக்கியவர்களில் முதன்மையான கட்சியான ஜே .வி. பி. யின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவும் யாழ்ப்பாணம் சென்று ” ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல தரப்பினருடனும் பேசி ஒரு புதிய அணுகுமுறையை கையாள்வதற்கு ஜே .வி.பி. அரசாங்கம் முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பாக பலமான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது .அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் .அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல் படுத்துவதில் மாற்றுக்கருத்தில்லை அதற்குத் நாம் இணங்கியுள்ளோம்”என்று கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச,” 13இன் படி வடக்கு,கிழக்கை ஒருபோதும் இணைக்கமாட்டேன் .அத்துடன் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ ஒரு போதும் வழங்க மாட்டேன்”என அனுராதபுரத்தில் நடத்திய தனது முதலாவது கன்னி பிரசாரக்கூட்டத்தில் சிங்களவர்களுக்கு உறுதி மொழி வழங்கியுள்ளார்.

திலித் ஜயவீர என்ற ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தியுள்ள இனவாதக் கூட்டணியான விமல் வீரவன்ச ,உதயகம்மன்பில தரப்பினர் 13 ஐ ஒழிக்க வேண்டும் ,உண்மைகண்டறியும் ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் என்ற கோஷத்தை பிரசார ஆயுதமாக்கியுள்ளனர் .

இவ்வாறு ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வேட்பாளர்கள் ”13” தொடர்பிலான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒரு புறம் அள்ளி வழங்கி வர மறுபுறம் அவர்களின் கட்சிகளுக்குள்ளேயே அதற்கு எதிரான கலகக்குரல்களும் வெளிக் கிளம்புகின்றன.”13 ஐ தமிழர்களுக்கு தூக்கிக் கொடுக்க அது ஒன்றும் அப்பன் வீட்டு சொத்தல்ல”வென தமது கட்சித்தலைவர்களுக்கு எதிராகவே கட்சி முக்கியஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ”13”ஐ தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளை மஹிந்த ராஜபக்ச குடும்பம் விடுக்குமளவுக்கு தேர்தல் பிரசாரங்களில் ”13”பேயாட்டம் ஆடுகின்றது.

தமிழ் மக்களுக்கு ”13” முழுவதுமாக நிறைவேற்றப்படுமென்ற உறுதிமொழிகள் ஜனாதிபதி வேட்பாளர்களினால் தமிழ் அரசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டுவரும் நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியை சேர்ந்த சுமந்திரன் எம்.பி விளக்கமளிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தக்க தருணம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ,ஜே .வி.பி.தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் அரசியலமைப்பிலுள்ள விடயங்களை முழுமையாக அமுலாக்குவதற்கு முக்கியமாக 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என எம்முடன் நடத்திய பேச்சுக்களில் உறுதியளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் இந்த உறுதிமொழியில் நம்பிக்கை கொள்ளாத இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,”காணி,பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுலாக்க அவர்கள் உடன்பட்டுள்ளார்களா ”என்ற சந்தேகக் கேள்வியை சுமந்திரனிடம் எழுப்பியபோது,ஆம் அவற்றையும் உள்ளடக்கியே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என உறுதியளித்துள்ளனர் .ஆகவே இதுவொரு நல்ல தருணம் என சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுடனும் சுமந்திரன் 13 தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவும் சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.

ஆனால் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்திலுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை கம்மன்பில சமர்ப்பித்த போது இன்னொரு பேரினவாதியான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான மொஹமட் முஸம்மில் அதனை வழிமொழிந்துள்ளார்.

இதற்கமைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு தற்போது பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வேளையிலும் அது விவாதத்திற்கு எடுக்கப்பட்டால் மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தின் பேராதரவு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே இந்த ”13”என்னும் அச்சம்தரும் , துரதிர்ஷ்ட எண்ணை வைத்து சிங்கள ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகளினால் மட்டுமன்றி தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதால் ”13”என்பது தமிழர்களுக்கும் ஒரு துரதிர்ஷ்ட எண்ணாகவே எண்ணாகவே உள்ளது.