LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் முஸ்லிம் தலைமைகள் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை இல்லாது செய்ய கோரவில்லை என்கிறாரம் அனுரகுமார

Share

இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் வகையில், 2023 ஒக்டோபர் 23ஆம் திகதி நடைபெற்ற மகாசங்க மாநாட்டில் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில், அவர் தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது அவ்வாறான கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 9ஆவது சரத்து, “இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும்” எனக் கூறுகிறது.

2015-19ஆம் ஆண்டில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. இதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கினார். நான் பங்குபற்றினேன், தோழர் பிமல் ரத்நாயக்க பங்குபற்றினார், சம்பந்தன் பங்குபற்றினார். அவர்களின் உண்மைக் கதையைச் சொல்ல வேண்டும். சுமந்திரன் பங்குபற்றினார், ஹக்கீம் பங்குபற்றினார், மனோ கணேசன் கலந்துகொண்டார். அவர்களில் யாரும் அரசியலமைப்பின் 9ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியவில்லை, அதாவது 9ஆவது பிரிவைப் அவ்வாறே பாதுகாத்ததான் புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்பட்டது.”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை அதே வழியில் பாதுகாக்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியை வழிநடத்திச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க, தேசிய பிக்குகள் முன்னணியின் ஏற்பாட்டில், இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தேரர்கள் பங்கேற்ற நிகழ்வில் உறுதியளித்துள்ளார்.

“எனவே, யாரும் 9ஆவது சரத்தை அகற்ற வேண்டுமென கலந்துரையாடலோ, நோக்கமோ இருக்கவில்லை. சிறிய தீவிரவாத குழுக்கள் விரும்பலாம். பொது சமூகத்தில் அப்படி எதுவும் இல்லை. ஆனால், என்ன செய்கிறார்கள்? தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்ததும் 9ஆவது பிரிவை நீக்கிவிடும் என்ற அச்சம் உருவாக்கப்படுகிறது. இல்லை, அது அப்படியே இருக்கும் என்பதை நமது வணக்கத்திற்குரிய தேரர்கள் முன் நான் கூற விரும்புகிறேன். ஏனெனில், அந்த அரசியலமைப்பு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் அதை ஒரு பிரச்சினையாக எழுப்பவில்லை. இதுதான் உண்மையான கதை”

இலங்கை நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கும் போதெல்லாம் சங்கச் சமூகம் முற்போக்கான பாத்திரத்தை வகித்ததாகவும் அனுர குமார திஸாநாயக்க பாராட்டியுள்ளார்.

“நமது சமூகம் ஏதாவது ஒரு நேரத்தில் தடுமாறுகிறதா? அந்தத் தருணத்தில் எல்லாம் நமது தேரர் சமூகம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. நாடு ஏதாவது சந்தர்ப்பத்தில் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்குகிறதா? எமது பௌத்த துறவிகள் முன் வந்து தோல் கொடுத்துள்ளனர்.
எனவே, நமது நாகரீகத்தை உருவாக்குவதில் மாத்திரமல்ல, நமது பிக்குகளின் சமூக நடைமுறை,
சமூகப் பொறுப்பின் பக்கம் பார்க்கையில், முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் இலங்கையில் ஒரு பௌத்த தேரர் இயக்கம், தேரர் சமூகம் உள்ளது.”

வருங்கால அரச தலைவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சங்கச் சமுதாயம் நாட்டில் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.