LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொது வேட்பாளரும் தமிழரசுக் கட்சியும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

பொது வேட்பாளருக்கு இதுவரை காலமும் பொது எதிரி என்று யாரும் இருக்கவில்லை. ஆனால் சுமந்திரன் தமிழரசு கட்சியை சஜித்தை நோக்கிச் சாய்த்ததோடு பொது வேட்பாளருக்கு ஒரு வில்லன் கிடைத்துவிட்டார்

ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், அரியனேந்திரனை சுமந்திரன் எம்ஜிஆர் ஆக்கிவிட்டார்,இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை.தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன.இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி, தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கு வில்லனுக்கு இடையிலான மோதல். அது அரியனேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்என்று.

ஆனால் அரியநேத்திரனை ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்திய பொதுகட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்தமிழ் மக்களைத் திரட்டுவது; அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது; அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ செய்யப்படும் விடயம் அல்ல என்று. ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஆக்கபூர்வமானது. அது எதிர்மறையானது அல்ல. இந்த இடத்தில் வில்லர்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டத்தை கட்டமைப்பது நிரந்தரமானது அல்ல.சரியானதுமல்ல என்பது தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் அங்கம் வகிக்கும் கருத்துருவாக்கிகளின் நிலைப்பாடாகும்.

ஆனால் தேர்தல் களம் அந்த நிலைபாட்டிற்கு மாறாக கதாநாயகன் வில்லன் துருவ நிலைப்படத்  தொடங்கி விட்டது.அதாவது தமிழ்ப் பொது உளவியலின் பொதுவான வாய்ப்பாட்டுக்குள் அது விழத் தொடங்கிவிட்டது.. இதனால் அரியநேத்திரனை நோக்கி குவியும் வாக்குகளின் தொகை அதிகரிக்கலாம்.

தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் அணியின் இந்த முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்த ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது.

அதை அவர்கள் புத்திபூர்வமாக எப்படி நியாயப்படுத்துவார்களோ தெரியாது. ஆனால் கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல,அரசியலை கணிதமாக, விஞ்ஞானமாக அணுகும் யாருக்கும் அது தெளிவாகத் தெரியும். சஜித்திடம் 13ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் ஒரு புதிய யாப்பை பற்றிச் சிந்திக்கலாம். இந்நிலையில் தமிழரசுக் கட்சி கேட்கும் சமஸ்டித் தீர்வை அவர் தரப்போவதில்லை.

13கூட ஒரு புதிய தீர்வு அல்ல. ஏற்கனவே யாப்பில் இருப்பது. அப்படிப் பார்த்தால் யாப்பை நிறைவேற்றுவேன் என்று கூறும் ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கேட்கின்றதா? இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், ஒரு நாட்டின் அதி உயர் சட்ட ஆவணமாகிய யாப்பை நிறைவேற்றுவது தான் அந்நாட்டின் தலைவர்களுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இலங்கைத் தீவு நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. கடந்த மூன்று தசாப் தங்களுக்கு மேலாக எட்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே யாப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? முப்படைகளையும் கட்டுப்படுத்தும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதிகள் யாப்பை நிறைவேற்றத் தவறியிருக்கிறார்கள் என்பதை தானே காட்டுகிறது! அதாவது இலங்கைத் தீவின் யாப்பை மீறி அவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று பொருள். கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டில் இப்பொழுது ஒரு தலைவர் யாப்பை அமல்படுத்துவேன் என்று கூறுகிறாராம் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமாம்.

சுமந்திரன் அணியின் இந்த முடிவு தமிழரசு கட்சிக்குள் மேலும் பிளவுகளை அதிகப்படுத்துமா? ஏற்கனவே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. பொது வேட்பாளர் விடயம் தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் தலைமைத்துவ போட்டியை மேலும் ஆழப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலையொன்று எழத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், சுமந்திரன் அணியின் முடிவு வந்திருக்கிறது. இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த ஒரு பின்னணியில், ஏனைய மாவட்டக் கிளைகளும் அவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடும் அவ்வாறு சஜித்தை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கை போன்ற நாடுகளில் தேர்தலுக்கு முதல் வாரம் அல்லது சில நாட்களுக்கு முன்னர்தான் வாக்களிப்பு அலை தோன்றும். தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது பொருந்தும்.

தமிழ் நடுத்தர வர்க்கத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரு பகுதியினர் ரணில் மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். மாற்றத்தை விரும்பும் மற்றொரு பிரிவினர் அனுரமீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். இப்பொழுது தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணியானது சஜித்தை ஆதரிக்குமாறு கேட்டு இருக்கிறது. அதனால் தமிழ் வாக்காளர்கள் நான்கு முனைகளில் சிதறடிக்கப்படுவார்களா?

அவ்வாறு தமிழ் வாக்காளர்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.தமிழ் மக்களைக் கோர்த்துக் கட்டுவது, கூட்டிக்கட்டுவதுதான் என்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முதன்மைக் காரணம் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது. தமிழ்க் கூட்டு உளவியலை பலப்படுத்துவது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

அதாவது அவர்கள் தமிழ் வாக்காளர்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள்.ஆனால் சுமந்திரனும் அவருடைய அணியும் தமிழ் வாக்காளர்களைச் சிதறடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் நம்பக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு முடிவெடுத்த தருணங்களில் கட்சியையோ சின்னதையோ தலைவர்களையோ பொருட்படுத்தவில்லை என்பதற்கு கடந்த நூற்றாண்டு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு.

ஜி ஜி பொன்னம்பலம் மகாதேவாவை தோற்கடித்தார். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடாஎன்று கூறித் தோற்கடித்தார். ராமநாதன் குடும்பத்தில் வந்த உயர் குழாத்தைச் சேர்ந்த மகாதேவாவை ஜி.ஜி தோற்கடித்தார. செல்வநாயகம் ஜிஜியை இலட்சியத்தின் பெயரால் தோற்கடித்தார். அதன் பின் இந்தியா அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், கடந்த பொதுத் தேர்தலில்,முன்பின் அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். வேட்பாளர்களின் முகமே தெரியாத ஒரு போர் சூழலில், தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வெளிச்ச வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 13 ஆசனங்களை ஈரோஸ் இயக்கத்துக்குக கொடுத்தார்கள்.

தேர்தலில் ஈரோஸ் இயக்கத்தின் பிரமுகராகிய பராவை இந்திய அமைதி காக்கும் படை கைது செய்து முகாமில் அடைத்து வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது கைதியாக இருந்த பராவைநீங்கள் இப்பொழுது எம்பி ஆகிவிட்டீர்கள் வெளியே போகலாம்என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

அத்தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகிய பொழுது உதயசூரியன் சின்னத்தை தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள். உதய சூரியன் சின்னமானது ஒரு காலம் வெற்றியின் சின்னமாக இருந்தது. ஐக்கியத்தின் சின்னமாக இருந்தது.

உதயசூரியன் சின்னத்தை தோற்கடித்த ஒரு மக்கள் கூட்டம், முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து சுயேட்சையை வெல்ல வைத்த ஒரு மக்கள் கூட்டம், கூட்டுணர்வோடு முடிவெடுக்கும் பொழுது, சின்னமும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல