தமிழ் மக்களை பழிவாங்கியது ரணிலா … சுமந்திரனா…?
Share
”ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதன் எதிர்வினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பது சுமந்திரன் எம்.பி.க்கு நன்கு தெரிந்தே தனது தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இரு நாள் முன்பு சஜித் ஆதரவை அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவை சூடாக்கி அதன்மூலம் தனது தனிநபர் பிரேரணையை தானே தடுக்க வைத்து ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை பழிவாங்கி விட்டார். அவர் ஒரு மோசமான இனவாதி. எனவே நாம் சஜித்தை ஆதரிக்க எடுத்த முடிவு சரியானது என்ற பிரசாரத்தை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக தொடங்கியுள்ளார்”
கே.பாலா
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கி இருப்பார். இது பலரின் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகின்றதோ இல்லையோ தற்போதைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரனுக்கு இப்பாடல் நன்றாகவே பொருந்துகின்றது. அது ஏன் என்று பார்ப்போம்.
மாகாண சபைகளுக்கான காலம் முடிவடைந்தும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையால் மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. புதிதாக எல்லைகளை நிர்ணயம் செய்து புதிய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சித்த நிலையிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.இவ்வாறான நிலையிலேயே 25-04-2023 அன்று பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் சபையில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது. சுமந்திரன் எம்.பி. சமர்ப்பித்த இந்த தனிநபர் பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் ஆதரித்து வழிமொழிந்திருந்தார். இந்த மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக முன்வைக்கப்பட்ட நிலையில் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைப்பதற்காக சுமந்திரன் எம்.பி.சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக எடுக்கப்பட்டு விவாதம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் செய்துள்ள பரிந்துரைகளைச் சட்டமூலத்தில் திருத்தங்களாகச் செய்வதற்காக அது பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கான நிலையியற் குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலையியற் குழுவின் திருத்தங்களோடு கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
சுமந்திரன் எம்.பி.யின் இந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூல தனிநபர் பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளித்திருந்ததுடன் அதனை சட்டமாக நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இதற்கிடையில் ஜனாதிபதித்தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டு அதற்கான பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் ,முஸ்லிம் கட்சிகளை ஆதரவைக் கோரினர்.
இதில் பல தமிழ் ,முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க ,சஜித் பிரேமதாச ஆகியோருக்கு தமது ஆதரவு அறிவிப்புக்களை வெளியிட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் யாருக்கும் ஆதரவளிக்காது இருந்தது. அக்கட்சியின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன். நாம் தேர்தலுக்கு முதல் நாள் எமது ஆதரவு யாருக்கு என அறிவித்தாலும் தமிழ் மக்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பார்கள் என அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைப்பதற்காக சுமந்திரன் எம்.பி.சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை செப்டம்பர் 3 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்க இணக்கம் காணப்பட்டிருந்தது. இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு சுமந்திரன் எம்.பி.யின் மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைப்பதற்கான தனிநபர் பிரேரணை சட்டமாவதற்கான காலம் கனிந்து வந்த நிலையில்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைமை ஏற்பட்டுள்ளது .அதாவது செப்டம்பர் 3 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்க இணக்கம் காணப்பட்டிருந்த சுமந்திரனின் தனிநபர் பிரேரணை அன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய நிலையில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி. யான எம்.ஏ.சுமந்திரன்,
”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகார பகிர்வு விவகாரம் குறித்து எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்கமைய 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வகட்சி மாநாட்டை நடத்தினார். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சர்வகட்சி கூட்டத்தின் 5 சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டோம்.75 ஆவது சுதந்திரத்துக்கு முன்னர் அதிகார பகிர்வு உள்ளிட்ட அடிப்படை விடயங்களுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.ஆனால் ஏதும் நடக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்றை நான் கடந்த காலங்களில் முன்வைத்திருந்தேன்.
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சட்ட நிலையியல் குழுவில் அவதானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று (செப்டம்பர் 3) மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய தின (செப்டம்பர் 3) பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் அது சேர்க்கப்படவில்லை. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் வெளியக அழுத்தத்தினால் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) வவுனியாவில் கூடியது. சுமார் ஐந்து மணித்தியாலங்கள் கலந்துரையாடி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை திட்டவட்டமாக எடுத்தோம். எமது மக்களையும். தேசியத்தையும் கருத்திற் கொண்டு இந்த துணிச்சலான தீர்மானத்தை எடுத்தோம்.
இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்தோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எமது மக்களுக்கு குறிப்பிடும் பொறுப்பு எமக்கு உண்டு.இவ்வாறான பின்னணியில் தான் இன்று (செப்டம்பர் 3) மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் தடுக்கப்பட்டுள்ளது. இதனையே அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டும். இந்த ஒரு செயற்பாட்டின் ஊடாக தான் யார் என்பதை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துள்ளார். வாய் சொல்லால் பல வாக்குறுதிகளை வழங்குவதும், அதை நடத்துவதை போன்று காண்பிப்பதும், இறுதி தருவாயில் வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தாமல் இருப்பதும் ரணில் விக்கிரமசிங்கவின் சுபாவம் என்பதை இந்த தருணத்திலும் காண்பித்துள்ளார்.
பிரதான தமிழ் கட்சி தனக்கு ஆதரவு வழங்காமல் இருக்க எடுத்த தீர்மானத்தால் தமிழ் மக்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை தீர்வாகவுள்ள மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு மிக மோசமான நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார்.ஜனாதிபதியின் இந்த செயற்பாடு நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுத்த தீர்மானம் சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த செயலால் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் முன்னாலும் நாட்டு மக்கள் முன்னாலும் இனவாதியாக காட்டப்படுவார். நான் செய்ய இருந்த விடயம் என்றும் அதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறிவிட்டு கடைசி நேரத்தில் எங்கள் மீது காட்டும் வெறுப்பாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கான வெளிப்பாடே இது. தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ராஜபக்ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும் ”என்று கூறியிருந்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூல தனது தனிநபர் பிரேரணையை நிறைவேற்றவிடாது தடுத்து தமிழ் மக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பழிவாங்கிவிட்டார் .அவர் ஒரு மோசமான இனவாதி என சுமந்திரன் குற்றம்சாட்டுகின்றார்.ஆனால் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூல தனது தனிநபர் பிரேரணையை செப்டம்பர் 3 ஆம் திகதி ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்து அதனை சுமந்திரனுக்கும் தெரிவித்திருந்த நிலையில் அவசரம் அவசரமாக செப்டம்பர் 1 ஆம்திகதியே கட்சியின் தலைவருக்கு கூட தெரியாமல் இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றதென சுமந்திரன் அறிவித்ததன் பின்னணி என்ன?
தேர்தலுக்கு முதல் நாள் நாம் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவென அறிவித்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்திருந்த சுமந்திரன் எம்.பி, இரு நாட்களுக்குள் தனது தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் எடுக்கப்படவிருந்தது தெரிந்தும் 20 நாட்களுக்கு முன்னரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம் என அறிவித்தது ஏன் ?
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசுக்கட்சி ஆதரிப்பதன் எதிர்வினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பது சுமந்திரன் எம்.பி.க்கு நன்கு தெரிந்தே தனது தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இரு நாள் முன்பு சஜித் ஆதரவை அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவை சூடாக்கி அதன்மூலம் தனது தனிநபர் பிரேரணையை தானே தடுக்க வைத்து ரணில்விக்கிரமசிங்க தமிழ் மக்களை பழிவாங்கி விட்டார். அவர் ஒரு மோசமான இனவாதி என்ற பிரசாரத்தை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக தொடங்கியுள்ளார்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிகும் இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை ஒரு சில தினங்கள் தாமதித்து அறிவித்திருந்தால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது. ஆனால் சுமந்திரன் நன்கு திட்டமிட்டே தனது தனி நபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இரு நாட்கள் முன்னர் தமிழரசுக்கட்சியின் சஜித் ஆதரவு முடிவை அறிவித்துள்ளார். கட்சியில் உள்ள சிலர் கூட இந்த முடிவை முதலில் அறிவிப்பதனால் உங்களின் தனிநபர் பிரேரணைக்கு ஆபத்து வரலாம் என சுட்டிக்காட்டியதாக கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
ஆகவே சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு காரணத்தை உருவாக்கவும் ரணிலை எதிர்ப்பதற்கான தனது முடிவை நியாயப்படுத்தவுமே சுமந்திரன் எம்.பி. தனது தனிநபர் பிரேரணைக்கு எதிராக தானே குழிபறித்து ரணில் விக்கிரமசிங்க தமிழர்களை பழிவாங்கிவிட்டார் எனக்கூறி தமிழ் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றார் .பிரதான தமிழ் கட்சி தனக்கு ஆதரவு வழங்காமல் இருக்க எடுத்த தீர்மானத்தால் தமிழ் மக்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை தீர்வாகவுள்ள மாகாண தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு மிக மோசமான நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார்.ஜனாதிபதியின் இந்த செயற்பாடு நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுத்த தீர்மானம் சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று தமது தமிழர் விரோத முடிவையும் நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்.
ஆகவே, தனது மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூல தனிநபர் பிரேரணை செப்டம்பர் 3 ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு சுமந்திரன் எம்.பி.யே காரணம். தனது சஜித் பிரேமதாச ஆதரவுக்காக தமிழ் மக்களை பழிவாங்கியவர் ரணில் விக்கிரசிங்கவல்ல. தனது சஜித் ஆதரவு முடிவை நியாயப்படுத்த சுமந்திரன் எம்.பி.யே தமிழ் மக்களை பழிவாங்கியுள்ளார்.