LOADING

Type to search

இலங்கை அரசியல்

நல்லூர்க் கந்தன் ஆலய இவ்வருட உற்சவத்தில் தொடரும் கொள்ளைகள்

Share

நடராசா லோகதயாளன்

நல்லூர் ஆலய ரதோற்சவ தினத்தில் மட்டும் 51 தங்கப் பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நல்லைக் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று ஒரே நாளில் இந்தளவிற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உற்சவகால பணிமணையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கதையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உற்சவ காலப்பகுதியில் கந்தனை தரிசிக்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் நிலையில், களவுகளும் இடம்பெறுகின்றன.

2024-09-01 அன்று இடம்பெற்ற தேர் உற்சவ தினத்தில் 20 பேரின் 51 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாகவே இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு தங்க நகைகளை களவு கொடுத்தவர்களின் நகைகள் எவையும் இதுவரை கிட்டியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் இடம்பெறும் வருடாந்த உற்சவத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும்போது பக்தர்களோடு பக்தர்களாக சில திருடர்களும் உட்புகுந்து தமது கை வரிசையை காட்டி வருவதனால் ஆலயத்திற்கு வரும்போது தங்க நகைகளை அணிந்து வர வேண்டாம் என தொடர்ச்சியாக அறிவித்தல் விடுக்கப்படுகின்றபோதும் பெண்கள் இதனை செவி சாய்க்காது நடப்பதன் விளைவு ஆண்டுதோறும் இவ்வளவு நகைகள் களவாடப்படுகின்றது என்று ஆலயம் மற்றும் மாநகர சபையின் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேநேரம் சப்பறத் திருவிழா அன்று ஒரு தாயாரின் கழுத்தில் கை வைத்த இளைஞன் தப்பி ஓடிவிட்டதும் நடந்துள்ளது. அந்த தாயார் அவலக் குரல் எழுப்பிய போதிலும் அவர் மீது கை வைத்த இளைஞன் சங்கிலியை அறுத்துக்கொண்டுதான் ஓடுகின்றானா அல்லது அறுக்காமல் ஓடுகின்றானா என்பதனை அந்த தாயாரால் உறுதியாக கூறமுடியாது திணறுகின்றார்.

”ஏனெனில் தன்னிடம் 5 சங்கிலிகள் இருப்பதாகவும் தற்போது கழுத்தில் 3 சங்கிலிகள் உள்ளதனால் இரண்டை அறுத்துச் சென்றுவிட்டானா அல்லது மறந்துபோய் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளேனா என்பதனை மகளிடம் கேட்டால்தான் உறுதி செய்ய முடியும, மகளும் ஆலய சூழலில் நின்றமையினால் அதிக சத்தம் காரணமாக தொலைபேசி அழைப்பு உடன் கிடைக்கவில்லை.எனப் பதற்றத்துடன் கூறினார்”

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வருபவர்களே அதிகமான நகைகளை அணிந்து வருகின்றனர் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே உற்சவ காலத்தில், ஆலயத்திற்கு வரும் போது நகைகளை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அதை யாரும் கேட்பதில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.