LOADING

Type to search

இலங்கை அரசியல்

பானி விஜேசிறிவர்தன – யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பிருந்து பேசுகின்றார்

Share

“நான் இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலின் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன.

இன்று 16-09-2024 .நான் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்து உரையாற்றுகிறேன். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, அப்போது இலங்கையை ஆண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின், அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் குழு, யாழ்ப்பாண நகருக்கு வந்து இந்த நூலகத்தை முற்றாக எரித்தது.

இந்த நூலகத்தில் உலகில் எங்கும் கிடைக்காத பல்லாயிரக்கணக்கான அரிய நூல்கள் இருந்தன. அந்த தீ மூட்டலினால் ஒட்டுமொத்த மனித சமுதாயமும், குறிப்பாக தமிழ் மக்களும், தங்களது கடந்த கால கலாச்சார பாரம்பரியத்தின் மிகவும் மதிப்புமிக்க பகுதியை இழந்தனர். இந்த நூலகத்தை எரித்த பின்னர், இந்த கும்பல் நகரத்தில் தாக்குதல் நடத்தியதுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தையும் எரித்தது.

அதன்பிறகு நகருக்குள் சுற்றித் திரிந்த குண்டர் கும்பல், தமிழ் மக்களின் கலாச்சாரம் சார்ந்த ஏராளமான நினைவுச் சின்னங்களை அழித்தது. இந்தக் குண்டர் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகளைப் பற்றி நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த தீ மூட்டல் 1981 இல் நடந்தாலும், அதன் வரலாறு பல தசாப்தங்களுக்கு முந்தையதாகும். 1948 ஆம் ஆண்டில், இலங்கை என்ற இந்த முதலாளித்துவ அரசு ஸ்தாபிக்கப்பட்ட போதே, தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டுகின்ற, அவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குகின்ற ஒரு பலாத்கார ஒற்றையாட்சி அரசாகவே நிறுவப்பட்டது.

இலங்கையின் கொழும்பை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த, தமிழர் விரோத இனவாதத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. 1977ல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1978 இல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். 1979ல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற கொடூர சட்டம் கொண்டுவரப்பட்டது.

இவற்றுக்குப் பின்னால் இருந்தது என்ன?

குறிப்பாக ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம், இலங்கையின் பொருளாதாரத்தை உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துடன் இணைக்க விரும்பியது. சுதந்திர சந்தை எனப்படும் கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இந்தக் கொள்கைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்து எழுந்த பாரிய போராட்டமாக, 1980 வேலை நிறுத்தத்தை நாம் கருதலாம். அந்த வேலை நிறுத்தம் தலைதூக்கிய உடன்தான், 1981ல், இந்த நூலகத்திற்கு தீ வைக்க குண்டர் கும்பலை இந்த யாழ்ப்பாண நகருக்கு அனுப்பினர்.

அப்போது நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில், தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து, அவர்களை அச்சுறுத்தி, அந்தத் தேர்தலில் அனுகூலத்தை தமக்குத் தாமே பெற்றுக் கொள்வதற்காகவே குண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், 1981 ஆம் ஆண்டு தீ வைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழர் விரோத இனவாதப் பிரச்சாரம், புதிய வழியில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, 26 வருடங்களாக இலங்கையை மூழ்கடித்த பாரிய அழிவை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தத்தை 1983 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கத்தை முன்நகர்த்தினார்.

இப்போது மீண்டும், முழு உலகப் பொருளாதாரமும் நெருக்கடியில் சிக்கியுள்ள சூழ்நிலையில், இலங்கையின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக, பாரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இந்த நிலையில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைகின்ற சூழ்நிலையில், தமிழர் விரோத இனவாதத்தை கிளரிவிட வேண்டிய தேவை சிங்களப் பேரினவாதிகளுக்கு உள்ளது.

எனவே, உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் இந்த தமிழர் விரோத இனவாதப் பிரச்சாரத்திற்கு எதிராக, சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கமும், அதே போல் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கமும் ஒன்றுபட்டு, யாழ்ப்பாணத்தில், வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் தமிழ் தேசியவாதத்திற்கு எதிராக, அதே போல் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசைக் கட்டியெழுப்ப வேண்டும், என நாம் உழைக்கும் மக்களுக்கு மிகத் தெளிவாக வலியுறுத்துகிறோம். அதை இந்திய துணைக் கண்ட சோசலிச குடியரசுகளின் ஒன்றியமாகவும், உலக சோசலிசக் குடியரசுகளின் ஒரு பகுதியாகவும் ஸ்தாபிப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் வேலைத் திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு அனைத்து பொது மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.