LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆயுதப் படைகளை ‘அனைத்து அம்சங்களிலும்’ மேம்படுத்துவதற்கு திட்டம்

Share

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பல ‘வழக்கத்திற்கு மாறான’ அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர், முப்படைகள் தொழில் ரீதியாக தரமுயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

“நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த கடமையை செய்வதற்கு அவசியமான காரணங்கள் அனைத்தையும் நாம் கண்டறிந்துள்ளோம். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம். ஆகவே என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற்படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன. அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.”

பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த வார இறுதியில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்கொந்தாவிடம், ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படுவதாக தெரிவித்திருந்தார்.

“இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு.”

கடந்த காலங்களில், இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மிக உயர்ந்த தொழில்முறை மட்டத்தில் இருப்பதாக அரசாங்கத்தின் அதிகாரிகளும் இராணுவத்தினரும் அடிக்கடி வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.