LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு, கிழக்கில் பறிபோகப் போகும் ”தமிழ் தேசிய” பாராளுமன்ற ஆசனங்கள்

Share

”வடக்கு ,கிழக்கில் 28 பாராளுமன்ற ஆசனங்கள் உள்ள நிலையில் 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்கள் ,2010 ஆம் ஆண்டு 14 ஆசனங்கள், 2015 ஆம் ஆண்டு 16 ஆசனங்கள் எனக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கட்சிகளின் அணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2020 ஆம் ஆண்டு 10 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி பெரு வீழ்ச்சியை சந்தித்தது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்து தனித்தனியாக களமிறங்கவுள்ள நிலையிலும் யாழ் மாவட்டத்திற்கான ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடக்கவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் இன்னும் குறைவான ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசிய அரசியலை மேலும் பலவீனப்படுத்தும் அரசியல் கள சூழலே உள்ளது”

கே.பாலா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஜனாதிபதியாக ஜே .வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ” மக்கள் புரட்சி”மூலம் தெரிவு செய்யப்பட்டநிலையில் நாட்டின் 9 ஆவது பாராளுமன்றம் கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டதுடன் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்தப்படுமென புதிய ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள 9 ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பி.க்கள்,முன்னாள் எம்.பி.க்கள் , மற்றும் தாமும் ஒரு எம்.பி.யாகி விட வேண்டுமென விரும்புவோரும் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகி வருகின்றனர்.

இந்த தேர்தலை எதிர்கொள்ள சிங்கள, முஸ்லிம் ,மலையகக் கட்சிகள் தம்மைத் தயார்படுத்தி வருவதுடன் தமது வெற்றி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான ,அதிக ஆசனங்களை பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து , பரந்துபட்ட கூட்டணிகளையும் அமைத்து வருகின்றன. பாராளுமன்றத்தேர்தலில் தமது மக்களின் பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக்கொள்ள, மாவட்ட ஆசனங்களை கைப்பற்ற வேண்டுமென்பதில் ஒவ்வொரு கட்சியும் ”தீயாய்”வேலை செய்து கொண்டிருக்கையில் தமிழ் தேசியக்கட்சிகள் வழக்கம் போலவே பிளவுபட்டுப்போய் ”நீயா நானா ”போட்டியிலுள்ள நிலையில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டம் ஒரு ஆசனத்தை இழப்பதாக தேர்தல் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது.

இலங்கையில் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த தமிழர்கள் தேசிய இனமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் வாழ்கின்றனர் .இதில் அம்பாறை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களும் என 16 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உள்ளன

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு வவுனியா மற்றும் மன்னார் அடங்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களும் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் அடங்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 6 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களுமாக 12 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உள்ளன .ஒட்டு மொத்தமாக வடக்கு,கிழக்கு மாகாணத்தில் 28 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உள்ளன.

இலங்கை பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியாக ”தமிழ் தேசியக்கூட்டமைப்பு”என்ற பெயரில் களமிறங்கிய முதல் தேர்தலான 2004 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 633,654 வாக்குகளைப் பெற்று நேரடி பாராளுமன்ற ஆசனங்களாக 20 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் ஆசனங்களாக 2 ஆசனங்களையும் பெற்று 22 ஆசனங்களுடன் பலமான அணியாக ”தமிழ் தேசியக்கூட்டமைப்பு” என்ற ஒற்றுமையுடன் தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் சென்றன.

இதில் வடக்கில் யாழ் மாவட்டத்தில் இருந்த 9 ஆசனங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 8 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன ,வன்னி மாவட்டத்தில் இருந்த 6 ஆசனங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐ.தே .க .ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் இருந்த 15 ஆசனங்களில் 13 ஆசனங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த 5 ஆசனங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் திகாமடுல்ல அதாவது அம்பாறை மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 1 ஆசனத்தை யும் கைப்பற்றியது .திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 4 ஆசனங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2 ஆசனங்களை கைப்பற்றியது. இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்த 16 ஆசனங்களில் 7 ஆசனங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. இவ்விரு மாகாணங்களிலும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்ததால் மொத்தமாக 22 பாராளுமன்ற ஆசனகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

இதற்கு பின்னர் நடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 13 நேரடி ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமுமாக 14 ஆசனங்களைப் பெற்று வீழ்ச்சியை சந்தித்தது. . இதில் யாழ்மாவட்டத்தில் இருந்த 9 ஆசனங்களில் 5 ஆசனங்களையும் வன்னிமாவட்டத்தில் இருந்த 6 ஆசனங்களில் 3 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த 5 ஆசனங்களில் 3 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் 1ஆசனத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 4 ஆசனங்களில் 1ஆசனத்தையும் கைப்பற்றியது.

இதற்கு பின்னர் நடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 14 நேரடி ஆசனங்களும் 2 தேசியப்பட்டியல் ஆசனங்களுமாக 16 ஆசனங்களைப் பெற்றது. இதில் யாழ்மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் 5 ஆசனங்களையும் வன்னிமாவட்டத்தில் இருந்த 6 ஆசனங்களில் 4 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த 5 ஆசனங்களில் 3 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் 1ஆசனத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 4 ஆசனங்களில் 1ஆசனத்தையும் கைப்பற்றியது.

இதற்கு பின்னர் நடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 9நேரடி ஆசனங்களும் 1தேசியப்பட்டியல் ஆசனமுமாக 10 ஆசனங்களைப் பெற்று பெரு வீழ்ச்சியை சந்தித்தது. . இதில் யாழ்மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றன. வன்னிமாவட்டத்தில் இருந்த 6 ஆசனங்களில் 3 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த 5 ஆசனங்களில் 2 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இருந்த 7 ஆசனங்களில் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 4 ஆசனங்களில் 1ஆசனத்தையும் கைப்பற்றியது.

யாழ் மாவட்டம் முன்னர் 11 பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்தது.ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததால் அது பின்னர் 9 ஆனது.அதன் பின்னர் 7 ஆனது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளமை தமிழ் கட்சிகளையும் வேட்பாளர்களையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதுடன் ஒரு வேட்பாளர் வெற்றிபெற பெற்றுக்கொள்ள வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்து விட்டுள்ளது. இதனால் தமிழ் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள மிகப்பெரும் பிரசாரங்களையும் பிரயத்தனங்களையும் செய்ய வேண்டியுள்ளதுடன் தமிழ் கட்சிகளுக்கிடையிலும் கடும் போட்டிகளும் ஏற்பட்டுள்ளன.

வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்ததால் வடக்கில் யாழ் தேர்தல் மாவட்டம் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்துள்ள நிலையில் கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவம் குதிரைக் கொம்பாகவேயுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை தமிழர் பிரதிநிதித்துவ ஆசனம் கிடைக்கவில்லை. திருகோணமலையில் இரா.சம்பந்தன் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்து வந்த நிலையில் அவரின் மரணத்தினால் அந்த ஆசனமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு வடக்கு,கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவ ஆசனங்கள் குறைவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அதனைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறையோ கவலையோ ,அதன் விளைவாக ஏற்படப்போகும் ஆபத்துக்களை அறிந்து கொள்ளும் அறிவோ இன்றி வழக்கம் போலவே ஒற்றுமை விடயத்தில் ”சபிக்கப்பட்ட”, கழுத்தறுப்பு அரசியல், குழிபறிப்பு அரசியலில் யாருமே நிகராக நிற்க முடியாத ” தமிழ் தேசியக் கட்சிகள்” நீயா,நானா” தலைக்கனப் போட்டியிலும் ,வீடா,குத்துவிளக்கா,சங்கா என்ற தேர்தல் சின்ன கயிறுழுப்புக்களிலும் ஈடுபட்டு தமக்குள் முட்டி மோதி தமிழர் அரசியலை பலவீனப்படுத்தி வருகின்றன.

அது மட்டுமன்றி தமிழ் தேசியக்கட்சிகளின் தாய்க்கட்சி என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ”தாழம்பூ நாகம்”போன்று இருக்கும் ஒரு சில படித்த மேதாவிகள் அந்தக்கட்சியை அழித்தே தீருவோம் எனக் கங்கணம் கட்டி தமது அல்லக்கைகளையும் செம்புதூக்கிகளையும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்காக கட்சிக்குள் தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படுவோரை,தமது தலைவர் பதவிக் கனவுக்கு தடையாக இருப்போரை கட்சியை விட்டு வெளியேற்றும் ”உள்வீட்டு ”சதியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மறுபுறமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் , தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் த ங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் பெயரிலும் அதன் சின்னமான வீட்டிலும் தான் நாங்கள் கடந்தகாலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிகவிரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்

ஆனால் இந்த அழைப்பை உடனடியாகவே ரெலோ தலைவரான செல்வம் அடைக்கலநாதன் ,புளொட் தலைவரான சித்தார்த்ததன் .ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நிராகரித்துள்ளனர், அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் இயங்கும் இவர்களின் சின்னமாக ”குத்து விளக்கு”இருந்தாலும் அண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனின் தேர்தல் சின்னமான ”சங்கு ”தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் அந்த சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தனித்தனியே களமிறங்கவுள்ளதாலும் அதேபோன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, டக்ளஸ் தேவனாநந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி,விஜயகலா மகேஸ்வரனை பிரதம வேட்பாளராக கொண்டு ஐ.தே.க.வும் களமிறங்கவுள்ள நிலையில் அங்கஜன் இராமநாதன் ஐக்கிய மக்கள் சக்தியில் களமிறங்க பேச்சுக்கள் இடம் பெற்றுவருகின்றன. அதேவேளை இம்முறை வடக்கில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றும் என எதிர்வு கூறப்படுகின்றது.

எனவே நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான பிளவுகள், யாழ் மாவட்டத்திற்கான ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டமை, அதனால் ஒரு வேட்பாளர் வெற்றி பெற பெற்றுக்கொள்ள வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை , தமிழ் மக்களிடையில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி, பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியமை,வெற்றிபெறக்கூடியவர்களை வெளியேற்றி அல்லக்கைகளை வேட்பாளர்களாக நியமிக்க எடுக்கப்படும் முயற்சிகள்.இரா.சம்பந்தனின் மறைவு போன்ற அரசியல் கள சூழலினால் வடக்கு,கிழக்கில் தமிழ்ப் பாராளுமன்ற ஆசனங்கள் பறிபோய் தமிழ் தேசிய இனம் பலவீனப்பட்டுப் போவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.