LOADING

Type to search

இலங்கை அரசியல்

தாய் மண்ணில் வாழ்ந்தபடி நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து எழுத்தின் வழி தனது மேன்மையான பங்களிப்பை ஆற்றும் தீபச்செல்வனுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

Share

எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் தொடர்பான கனடிய விமர்சகர் ‘அன்பு’ அவர்களின் பார்வை

309 பக்கங்களும் 40 அத்தியாயங்களும் கொண்ட சயனைடு என்ற இந்நூல், இன அழிப்புப்போரால் ஏதோவொரு வகையில் நாளாந்தம் பாதிக்கப்பட்டு தனது பதின்ம வயதில் கண்ணெதிரே தந்தையையும் பறிகொடுத்து தனது மக்களின் விடுதலைக்குப் போராடுவதென்பதே நிரந்தர விடிவைத் தரும் என்பதை முழுமையாக நம்பித் தன்னை அதற்காக அர்ப்பணித்துப் போராடச்செல்லும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை.

அப்படிப் போராடச் செல்கிறவன் ஒரு முனையில் எதிரியினை எதிர்த்துப் போராடுகிறான். மறு முனையில் மக்கள் முன்னேற்றம், சமூக சேவைகள், கல்வி, நலத்திட்டங்கள் போன்றவற்றில் முனைப்போடு செயற்பட்டு சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கிறான். தன் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இருக்கிறான்.

சண்டைக்களங்களிலும் தனது அர்ப்பணிப்பை அயராது செய்கிறான். வீரத்தோடு எதிரியைப் பொருதுகிறான். போர்முனைத் தளபதியாக, அரசியல் பிரிவுப்பொறுப்பாளராக எனப் பல வழிகளிலும் எம் மக்களின் விடிவு ஒன்றே இலட்சியம் என உழைத்து மக்கள் மனங்களில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உயரிய இடத்தைப் பெறுகிறான். இயக்கத்தில் ஒரு முன்னுதாரணமாக, மக்களால், தளபதிகளால், சகபோராளிகளால் எனப் பலராலும் மெச்சப்படுபவனாக வலம் வருகிறான்.

அதே போராளி 2009 இன அழிப்புக்குப் பின்னர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதாகிறான். வதைக்கப்படுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக தோற்றவன் என்ற காரணத்தால் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் இழிவு செய்யப்படுகிறான். தடுப்பில பல ஆண்டுகளைக் கழிக்கிறான். சித்திரவதைகளாலும், மன உளைச்சலாலும உடல்ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறான்.

இந்தப் பின்புலத்தில் சயனைடு என்ற இந்த நூலின் தலைப்பின் வழி ஆசிரியர் சொல்லவருவது எந்த நஞ்சு என்ற கேள்வி இங்கு எழுகின்றது. கதை நாயகன் ஒரு போராளி. அவன் போராளியாகும்போது இயக்க விதிக்கேற்ப கழுத்தில் பெருமையோடு ஏற்று அணிந்தது சயனைடு. களத்தில் போராடியபோது ஒரு நாள் அந்த சயனைடினை கடிக்கும் நிலைக்கும் சென்றுள்ளான். அது அப்போது உயிரை எடுக்காது போயினும். நஞ்சை உமிழ்கிறது. அப்படியாக அது உமிழ்ந்த நஞ்சு குறித்து இந்த நாவல் பேசுகிறதா?,

அல்லது

தடுப்புமுகாமில் நச்சு ஊசி செலுத்தியதால் அவனும் அவன் போன்ற போராளிகளும் உடலளவில் அனுபவிக்கும் உடல் வாதைகள், அதனால் அவர்கள் இரத்தத்தில் தோய்ந்த நஞ்சு குறித்து இந்த நூல் பேசுகிறதா?

குறிப்பாக கீழே சொல்லப்படும் பகுதி கதை நாயகனின் இது குறித்த ஆற்றாமையைப் பதிவு செய்கிறது.

‘நஞ்சூறிய அவன் உடல் வியர்த்தது. எங்களுக்குத் தந்தது புனர்வாழ்வா அல்லது படிப்படியான மரணமா?’

‘இந்த அரசு ஒரு இனத்தையும் அதின்ர போராட்டத்தையும் அழிச்சுத் துடைக்க எங்களுக்கு நஞ்சுச் சோறு தந்திச்சுது. நஞ்சு ஊசியளை ஏத்திச்சுது’.

ஆக இந்த புனர்வாழ்வு என்ற பெயரில் இந்த ஆட்சி அமைப்பு தந்த படிப்படியான மரணத்தினை ஏற்படுத்தவல்ல நஞ்சு குறித்து இந்த நூல் பேசுகிறதா?

அல்லது

ஒரு பெரிய பொறுப்பில் பலர் போற்றப்படும் நிலையில் முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்காகச் செயற்பட்ட அவனை போரின் பின்னரான காலம் – உடல் உள அளவில் உருக்குலைக்க, குடும்பமும் சமூகமும் தூர வைக்க,

எழுத்தாளரின் வார்த்தைகளில் கதைநாயகனின் மனக்குமுறலாக சொல்வதானால்,

‘நான் இப்ப இயக்கம் இல்லைத்தானே. செல்லாக்காசாப் போனேன்’

இந்த வரிகளில் புறக்கணிப்பு என்னும் நஞ்சு சொல்லப்படுகிறது. ஆக சயனைடு என்ற தலைப்பு இந்த புறக்கணிப்பு என்னும் நஞ்சை சொல்கிறதா?

அல்லது இறுதியாக

ஆக்கிரமிப்பு இராணுவம் வெற்றி பெற்ற மமதை நோயால் தொடர்ந்து தோல்வி அடைந்தவனை இழிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே துரத்தி துரத்தி துன்புறுத்துகிறது. தனது கடின முயற்சியால் உழைப்பால் மீண்டு விட முடியாமல் இது அவனை வாட்டுகிறது. அவனது மனதிடத்தைக் குறைத்திடும் நஞ்சாகிறது. ஆக இந்த நாவல் குறிப்பிடும் சயனைடு அந்த மனதிடத்தைக் குறைத்திடும் நஞ்சா?

இவற்றுள் – இந்த நாவல் பேசும் நஞ்சு எது? என்ற தெரிவினை வாசகர் முடிவுக்கே விட்டுவிடுகிறார் நூலாசிரியர்.

நூலின் உள்ளடக்கத்தைப் பார்த்தோமானால் இந்த நாவல், ஒரு போராளியின் அர்ப்பணிப்பையும் அதன் பொருட்டு அவர்கள் அடையும் குடும்ப, சமூக இழப்புகளையும் விவரிக்கிறது. கதை நாயகன், தனது மக்களின் விடுதலைக்காக தன்னலம் மறந்து போராடியவர்.

பின் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாமில் தள்ளப்பட்டவர். அவரது காலம் நான்கு சுவர்களுக்குள் அடக்கப்படும்போது சிறைக்கு வெளியே காலம் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அவர் வெளியே வரும் போது, உலகம் மாறி விட்டிருக்கிறது.

போராட்ட இயக்கம் முற்றிலும் மறைந்து விட்டது, ஆயுதப் போராட்டம் மௌனித்துவிட்டது. சிலர் ஆட்சி அமைப்புடன் ஒத்துழைக்கின்றனர்.

தமிழீழ அரச நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்த இடங்கள் எல்லாம் இராணுவ மையமாக இருந்தது. எழுத்தாளரின் வார்த்தைகளில் சொல்வதானால்

‘சூரியன் ஒளிர்ந்த அடிவானில் இப்போது இருள் அடர்ந்திருந்தது’.

சிறைக்குச் செல்லும் போது குழந்தையாக இருந்த மகள், வளர்ந்து விட்டாள். அவளால் அவரை அடையாளம் காண முடியவில்லை.

‘யார் இந்த மாமா? என்று அவள் கேட்ட தருணம், மீண்டும் எழுத்தாளரின் வார்த்தைகளில் சொல்வதானால்

‘பெருமலை உயரத்திலிருந்து விழுந்த மண்குடமாய் நொறுங்கியது அவன் மனம்’.

அதேசமயம், அவள் கேட்கும் “இயக்கம் என்றால் என்ன?’ என்ற கேள்வி அவரது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது.

கதை நாயகன் போன்ற போராளிகள் சிந்திய குருதி, வீரம், தியாகம், கொல்லப்பட்ட உயிர்கள், அனைத்தும் மறக்கப்பட்ட கதையாகிவிட்டது என்பதை இந்த உரையாடல் உணர்த்துகிறது.

இது வெறும் ஒரு குடும்பத்தின் உரையாடல் அல்ல. இது ஒரு சமூகம், காலச்சுழற்சியில் தங்கள் போராளிகளை, தியாகங்களை, வரலாற்றை மறந்துவிடும் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாய் அமைகிறது. இங்கு அந்த மகள் கேட்ட கேள்வி ஒரு சமூகவியல் தாக்கம்.

ஒரு சமூகத்தின் நினைவில், போராட்டத் தியாகங்கள் எவ்வளவு காலம் வாழும்? ஒரு தலைமுறை மறந்துவிட்டால், அந்த விடுதலை இயக்கத்துக்கு, போராட்டத்துக்கு பெறுமானமுண்டா? இதுபோன்ற ஆழமான கேள்வியை எழுப்புகிறது இவ்வுரையாடல்.

இந்த தந்தை–மகள் சந்திப்பு, காலத்தின் சீரழிவு, வரலாற்றின் பரிதவிப்பு. நாவலின் மிக வலுவான தருணமாக இது அமைந்திருந்தது.

‘பொறுப்பாளரின்ர காதலி, தளபதியின்ர மனுசி எண்டு சொல்லுறது எனக்குப் பெருமைதானே?’ ‘உங்களுக்காக எத்தனை யுகமும் நான் காத்திருப்பேன்‘

என்று ஒரு பொழுதில் சொன்ன துணைவி கதைநாயகன் தடுப்பில் இருந்து மீண்டபோது ‘நீங்கள் எனக்கு வேணாம், என்னை விட்டுவிடுங்கோ’ என்று சொல்கிறாள்.

‘நான் இப்ப இயக்கம் இல்லைத்தானே. செல்லாக்காசாப் போனேன்’ என்று கதைநாயகன் சொல்வதில் காலச்சுழற்சியின் வேதனை, இனத்தின் சமூகத்தின் தோல்வி கொப்பளிக்கிறது.

இந்நூலாசிரியர் அடிப்படையில் ஒரு கவிஞர். கவிஞருக்கே உரிய விவரிப்புகளும் படிமங்களும் நூலின் பல இடங்களிலும் விரிந்து கிடந்தன. அதுவும் தாய் நிலத்துக்கே உரிய பெருமையோடு, போர்ச் சூழலுக்கே உரிய தனித்துவத்தோடு இருந்தன.

எடுத்துக்காட்டுகளாக,

‘தரையிலவன் சிறகு முளைத்த வான்புலியைப் போலப் பறக்கத் தொடங்கினான். அவன் ட்ரக் கடலில் கடற்புலிப் படகுபோல விரைந்தது’.

‘கூந்தலில் கடலைச்சூடியிருந்தாள். விளக்கொளியில் தாய்நிலமென அவளது முகம் ஒளிர்ந்தது’

‘மனம் கனத்தாலும் பார்வையோ கந்தகக் காயத்தில் மருந்தெனப் படர்ந்தது’.

‘வானம் எனப்படுவது தீப்பிழம்பின் முகில்கள் என்றாயிற்று’

‘வானம் பெருங்காயத்துடன் கிடந்தது’.

‘மழையைக் கிழித்தொரு பறவை எழுந்தது’

‘கனவு முட்டிய நெஞ்சு கல்லாய் உறைந்திற்று’

இப்படி பல அழகிய, மெல்லிய வாசகர் ரசிக்கக்கூடிய விவரிப்புகளை நூலெங்கும் காணக்கூடியதாக இருந்தது.

எழுத்தாளர் கதை நாயகன் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை நோக்கியும் சில கேள்விக்கணைகள், கருத்துக்களை வைக்கிறார். இந்நாவல் மொழிபெயர்க்கப்படும் பட்சத்தில் இவ்வரிகள் பெறுமானம் பெறும்.

எடுத்துக்காட்டாக தடுப்பில் இருந்து கதை நாயகன் தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதாக பின்வரும் வரிகள் சொல்லப்படுகிறது.

‘போராட்டம் முடிந்தது எண்டு நினைச்சு இப்படி சித்திரவதை செய்யிறாங்களா? முடியேல எண்டு நினைச்சு சித்திரவதை செய்யிறாங்களா?’

மற்றும் தடுப்பு முகாமில் இருந்து வெளிவந்தபின்னும் தொடரும் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பதில் சொல்வதாக ‘ ‘தமிழீழம் அமையிறதும் அமையாமல் இருப்பதும் இனி உங்கட கையில்’ என்று சொல்வதாக அமைகிறது.

அடுத்து நூலில் அவதானிக்கக் கூடியதாய் இருந்த மற்றொரு விடயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அது – குழந்தைகள் சன்னங்களோடு விளையாடுதல், செல் கோதுகள் சன்னங்களை பொறுக்கி விற்றல், இராணுவம் -புலிகள் விளையாட்டு, இது போன்ற போர்க்காலச் சூழலில் வளர்ந்தவர்களுக்கே தெரிந்து பழகிய தனித்துவமான அவதானிப்புகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது

மற்றும் தமிழ் ஈழ நிழல் அரசின் நிறுவனங்கள், நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டவையாகத் தோன்றினாலும் கதையில் இதனைப் பதிவுசெய்ய எடுத்த முயற்சி வரவேற்கப்படவேண்டியதே.

309 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம் என நான் கருதுவதும் குறைபாடு என நான் கருதுவதும் ஒரு விஷயத்தைத்தான். அதாவது அதுவே பாராட்டப் படவேண்டியதும் அதுவே குறையாகவும் இருந்தது என்று சொல்லலாம்.

அது என்னவென்றால் பல்வேறு கதாபாத்திரங்களைச் சேர்ப்பதற்கான எழுத்தாளரின் முயற்சி. கதாபாத்திரங்களாக வரும் பலரும் வரலாற்றில் உண்மையில் வாழ்ந்தவர்கள். பெயர் வேறுபட்டிருந்தாலும் அவர்களது வாழ்க்கையும் வீரச் செயல்களும் உண்மையிலேயே நடைபெற்றவைதான்.

அந்த வரலாற்றுப் பாத்திரங்களின் தியாகங்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரித்து, அவற்றை மறக்காமல் நினைவுகூரச் செய்வது போற்றக்கூடியதுதான். பல வரலாற்று தகவல்களும் நபர்களும் சேர்க்கப்படுவது என்பது கதையின் நம்பகத்தன்மையையும் ஆழத்தையும் அதிகரித்து வாசகர்களுக்கு வரலாற்றுப் பின்னணியை விரிவாக புரிந்து கொள்ளவும் துணை புரிகிறது.

ஆனால் அதே வேளை இது கதையின் மையக்கருத்தை மங்கவைக்கும் வகையிலும் செயல்படுகிறது. தொடர்ச்சியாக புதுப் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது – அதில் பலர் கதையின் மையக்கருவுக்கு முக்கியமில்லாதவர்கள் என்பது வாசகர்களை கதை மேலான உணர்வுப் பிணைப்பைத் தடுக்கிறது.

கதையின் போக்கில் கதாபாத்திரங்கள் வகிக்கப்போகும் பங்கு என்பதற்கமைய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அந்த அறிமுகங்களிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

பல உண்மைச்சம்பவங்களை வரலாற்று வீரர்களை அவர்கள் குறித்த சம்பவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற தவிப்பில் பல கதாபாத்திரங்கள் சடுதியாக திணிக்கப்பட்டுள்ளது கதையின் போக்கில் இருந்து தள்ளிப்போவதாகத் தோன்றியது.

மேலும், வரலாற்று விவரங்களை அடிக்கடி சேர்ப்பது, இயல்பாக கதையில் பின்னிப் பொருந்தாமல், கதையின் முக்கியக் கருவிலிருந்து கவனத்தை விலக்குகிறது. இன்னும் சொல்லப்போனால் கதையின் ஓட்டத்தைக் குறைக்கிறது.

எழுத்தாளர் சற்றே கட்டுப்பாட்டுடன் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்து, கருப்பொருளை நெருக்கமாக வைத்து, ஒரு சில முக்கியமான பாத்திரங்களை வரலாற்றுப் பின்புலத்துடன் கதைச் சூழலுடன் இணைத்திருந்தால், கதையின் மையமான செய்தி மேலும் தெளிவாக வெளிப்பட்டிருக்கலாம்.

அதே சமயம் வரலாற்றுத் தகவல்களை இயல்பாகக் கதையில் பின்னி அமைத்திருக்கலாம் என்பது எனது கருத்து.

இந்த நாவல் இரட்டை காலக் கட்டமைப்பை (dual timeline structure) பயன்படுத்துகிறது, இக்கட்டமைப்பில் ஒரு அத்தியாயம் நிகழ்காலத்தில் இடம்பெறுகிறது, அதற்கடுத்த அத்தியாயம் இறந்தகாலத்தில் அமைகிறது. இந்த மாதிரியான அமைப்பு, சரியாக கட்டமைக்கப்படும்போது கதைக்குப் பெரும் ஆழத்தையும் பிணைப்பையும் வழங்கக்கூடியது.

இரகசியங்களை மெல்லவெல்ல வெளிப்படுத்தவும், கடந்த கால நிகழ்வுகள் நிகழ்காலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதைக் காண்பிக்கவும் பொதுவாக இரட்டை காலக் கட்டமைப்பு பயன்படுத்தப்படும்.

ஆனால் இந்நூலில் நிறைய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாலும் கதையின் கரு, முக்கிய கதாபாத்திரங்களில் இருந்து அடிக்கடி பல இடங்களுக்கும் பல சம்பவங்களுக்கும், பல விவரிப்புகளுக்கும் தாவுவதாலும் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களின் கதைகள் சிதறலாகவே, இடையிடையே வரும் அத்தியாயங்களில் மட்டும் வெளியாவதால், அவர்களை ஒப்புணர்த்திக் கொள்ளவும், எந்த காலக் கட்டத்தில் அந்தச் சம்பவங்கள் நடந்தன என்பதை உணரவும் வாசகர் சிரமப்பட வேண்டி இருந்தது. கதையோட்டத்தில் கவனத்தைச் செலுத்த முடியவில்லை.

இது முக்கியமான பாத்திரங்களுடனான உணர்வுபூர்வமான பிணைப்பைக் குறைத்து, படிக்கும் அனுபவத்தைக் கெடுப்பதாக இருந்தது.

அந்த வகையில் சிறப்பான உத்திகள், படிமங்கள், உடனே மனதில் பதியும் கதாபாத்திர அறிமுகங்கள், வரலாற்றுப் பின்னணியை இயல்பாகக் கதையோடு இணைத்தல், பிசகாத கதை ஓட்டம் – இவை அனைத்துக்கும் சிறந்த உதாரணமாக அமைந்து சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தந்த எழுத்தாளர் தேவகாந்தன் அவர்கள் எழுதிய கனவுச்சிறை நாவலைக் குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

அடுத்து, நூலில் இடம்பெற்றுள்ள சில உரையாடல்கள் யதார்த்தம் அற்றவையாக இருந்தன.

எடுத்துக்காட்டாக, உதயன் என்கிற ஒரு ஒத்தோடி சொல்வதாக ‘ நான் அங்கு வந்ததே (அதாவது வன்னிக்கு வந்ததே) காட்டிக்கொடுக்கத்தான்’ என்று சொல்லப்படுகிறது. இது யதார்த்தத்தில் நடைபெறாது. ஒரு ஒத்தோடி ‘நான் ஒரு ஒத்தோடி’ என்று சொல்லமாட்டான். அவ்வாறானவற்றை வார்த்தைகளில் சொல்லவேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. இத்தகைய இடங்களில் படிமத்தோடு நிறுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து.

இறுதியாக எழுத்தாளர் கதையின் தொடக்கத்தில் சொல்லி இருக்கிற வரிகளுடனேயே முடிக்கலாம் என நினைக்கிறேன். இது நம் எல்லோருக்கும் பொதுவான உள்ளக்கிடக்கைதான். இந்த வரிகளிலேயே நம் அனைவரதும், போராட்டத்தினதும், போராளிகளதும், இந்த நூலினதும் ஆற்றாமையை, இயலாமையை வெளிப்படுத்தலாம்.

அந்த வரிகள்,

‘காதில் விழுந்தாலும் உண்மை புரிந்தாலும் காலங்களை மறக்க முடியவில்லை. காலத்தை மறந்தால் உன்னையுமல்லவா மறக்கவேண்டியிருக்கும்?’.

இயக்கத்தை, போராட்டத்தை, தமிழ் தேசியத்தை தலைமையை நேசித்த எல்லாருக்கும் இந்த வரிகள் மனதுக்கு நெருக்கமானதாகத்தான் இருக்கும். அந்த ‘உன்னை மறந்தால்’ என்பது ஒரு போராளி நண்பனாக இருக்கலாம், போராளி சகோதர சகோதரியாக உறவாக அல்லது மாவீரராக இருக்கலாம். ஆனால் நம் அனைவரதும் தவிப்பு இந்த வரிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

தீபச்செல்வன் அவர்களது எழுத்துக்கு வலிமை உண்டு, அழகு உண்டு, ஒரு இசை உண்டு, ஈர்ப்பு உண்டு. உயிர்ப்பு உண்டு. கவிமொழி உண்டு. அது ஒரு தனித்திறமை.

அதையே உரைநடைக்கு எடுத்துவரும்போது வேறுபட்ட அணுகுமுறைகள், கட்டமைப்புகள் தேவை. இது சவால்தான். ஆனால் அவரது கவிதைகளில் இருக்கும் இலக்கிய அழகை உரைநடை எழுத்திலும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இருக்க எமது போராட்ட வாழ்வினைப் பிரதிபலிக்கும் அறம்சார்ந்த இலக்கியப் படைப்புகள் நம் மக்கள் கடந்து வந்த அனுபவங்களைப் பற்றிய ஆழமான புரிதலை இளைய தலைமுறையினரிடம் வளர்க்க உதவும் கருவியாகவும் போராட்ட வாழ்வியலின் தாக்கத்தை அனுபவித்தவர்களின் நினைவுகளையும், நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பாதுகாக்கும் பெட்டகமாகவும் விளங்குகிறது.

அந்த வகையில் தாய் மண்ணில் இருந்தபடியே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து எழுத்தின் வழி தனது மேன்மையான பங்களிப்பை ஆற்றி வரும் தீபச்செல்வனுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்.