அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
Share
திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவையில் விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசும்போது, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இவ்விபத்தின் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றும், அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 நபர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 நபர்கள் அரசு மருத்துமனையிலும், 27 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 27 நபர்கள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில் துரதிருஷ்டவசமாக 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டறிந்து முதல்-அமைச்சர் மிகவும் வேதனை அடைந்து, அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான செலவினை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளார். இதுதவிர, இவ்விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம், வருங்கால வைப்பு நிதியை உடனடியாக வழங்கிடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, இயக்குநர், பொது சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் – செயலர் அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சட்டப்பேரவை தலைவர் வாயிலாக இந்த அவைக்கு நான் தெரிவித்து கொள்கிறேன்.
















