ஆசிரியர் நியமன அநீதிக்கு எதிராகப் போர்க்கொடி!
Share
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக 25ம் திகதி வியாழக்கிழமையன்று
வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் போராட்டம்!
வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் 25ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் 23ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் இந்தத் தீர்மானத்தைப் பகிரங்கமாக வெளியிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அண்மையில் வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புக்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு நடைமுறைகளில் தகுதியான பட்டதாரிகளுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதி மற்றும் முறைகேடுகள் தொடர்பாகத் தற்போதைய அரசின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது வடக்கு மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு வெற்றிடங்கள் நீடிக்கும் நிலையிலும், பட்டதாரிகளை அவற்றுக்கு உள்ளீர்க்க அதிகாரிகள் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அத்துடன், அரசால் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களிலும் தகுதியான பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
எங்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடும் எதிர்வரும் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் பாரிய கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்தப் போராட்டத்தின் ஊடாக எமக்கான தகுந்த தீர்வுகள் வடக்கு மாகாண அதிகாரிகளாலோ அல்லது மத்திய அரசாலோ வழங்கப்படாமல் விடின், எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஏனைய மாவட்ட அமைப்புகளுடன் இணைந்து இறுதித் தீர்மானம் எடுப்போம்.” – என்றார்.
















