LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைச் சிறைச்சாலைகளில் தொடரும் படுகொலைகள்!

Share

1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, 2020 ,சமீபத்திய 2026 ஆம் ஆண்டு சம்பவங்கள் சிறை நிர்வாகக் குறைபாடுகள், போதைப்பொருள் கும்பல் மோதல்கள் மற்றும் கைதிகளின் கிளர்ச்சிகள் காரணமாக ஏற்பட்டவை . இதில் 68பேர் படுகொலை செய்யப்பட்டனர்

—–கே.பாலா


இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் கைதிகளுக்கிடையில் வெடித்த மோதல் 22 கைதிகளினதும் 8 சிறைக்காவலர்களினதும் உயிர்களைக் குடித்தும் நூற்றுக்கும் மேற்பட் டோரை காயமடையவைத்துமுள்ள நிலையில் முழு நாடுமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.அநுரகுமார அரசாங்கமும் இன்னொரு விமர்சனப் பொறியில்,நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 680.ஆனால், இச்சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு 2,417 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறித்த சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளுக்கும் விளக்கமறியல் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்ததுடன், இதில் கைதிகள் இருவர் உயிரிழந்திருந்தனர். இதன்போது காயமடைந்திருந்த 30க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் மறுநாளான திங்கட்கிழமையும் மோதல் வெடித்த நிலையிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எந்தவொரு நாட்டின் சிறைச்சாலைகளும் குற்றவாளிகளைத் திருத்தி, நல்வழிப்படுத்துவதற்கான ஒரு மறுவாழ்வு மையமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கையின் சிறைச்சாலைகளோ இன்று மரண பயமும், குருதி வாடையும் வீசும் கொலைச்சாலைகளாக உருவெடுத்துள்ளன.”தண்டனை என்பது சுதந்திரத்தை பறிப்பது மாத்திரமே, உயிரை அல்ல” என்ற உன்னத விதி, இலங்கை சிறைச்சாலைகளின் இரும்புச் சுவர்களுக்குப் பின்னால் பல நேரங்களில் தூக்கிலிடப்படுகிறது. இலங்கையில் அரங்கேறும் சிறைச்சாலை மோதல்களும், சிறைச்சாலைப் படுகொலைகளும் வெறும் செய்திகளாகக் கடந்துபோகக் கூடியவை அல்ல.அவை நாட்டின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பின் மீதான பெரும் கேள்விக்குறிகளாகவேயுள்ளன.

ஒரு சமூகத்தின் நாகரிகத்தை அந்த நாட்டுச் சிறைச்சாலைகள் கைதிகளை நடத்தும் விதத்தை வைத்தே மதிப்பிட முடியும் என்றார் நெல்சன் மண்டேலா. அந்த வகையில், இலங்கையின் சிறைச்சாலைகளில் அடிக்கடி நிகழும் மோதல்களும், படுகொலைகளும் நமது சமூகக் கட்டமைப்பின் பலவீனத்தையே அம்பலப்படுத்துகின்றன. அதிகளவிலான கைதிகளினால் இட நெரிசல், போதிய வசதியின்மை மற்றும் கைதிகளுக்கு இடையிலான உட்பகைகள் எனப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், மனித உயிர்களின் இழப்பிற்கு அவை நியாயமாகிவிட முடியாது. சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் இந்தத் தொடர் வன்முறைகள் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அமைப்பிலும் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்தும் ஓர் ஆபத்தான எச்சரிக்கை மணி.

சந்தேக நபர்களாக, குற்றவாளிகளாக சிறைச்சாலைகளுக்கு சென்றவர்கள் பிணமாக மீட்கப்படுவதும், பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்களின் கண் முன்னேஇவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதும் இலங்கையின் சிறைச்சாலைகள் வரலாற்றில் தொடர்கதையாகிவிட்டன. வெலிக்கடை முதல் மஹர வரை நாம் கண்ட வன்முறைகளும், படுகொலைகளும் அரச இனவாதம், மற்றும் பாதாளக்குழுக்களின் திட்டமிடப்பட்ட வன்முறைகள் படுகொலைகளாகவே இருக்கின்றன.இதனை இலங்கை சிறைச்சாலைகளில் இன்றுவரை நடைபெற்ற வன்முறைகள் , படுகொலைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை

தலைநகர் கொழும்பில் 1983 ஜூலை 24 ஆம் திகதி தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டியும் கொத்தியும் சுட்டும் தீயிட்டுக்கொளுத்தியும் அப்போதைய ஆடியளர்களான ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தின் ஆதரவுடன் படுகொலை செய்யப்பட்டனர் . இதன்போது 25 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெலிக்கடை அதியுயர் பாதுகாப்பு சிறையிலிருந்த சிங்களக் கைதிகள், சிறைக்காவலர்களின் துணையோடு தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை நடத்தி தமிழ் மக்களின் போராட்ட இயக்கங்களின் தலைவர்களாகவிருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்ப 53 தமிழர்களை கொடூரமாக கண்களைதோண்டியும் வெட்டியும் குத்தியும் அடித்தும் கொன்றனர் .இதில் படுகொலை செய்யப்பட்ட அனைவரும் தமிழ் அரசியல் கைதிகள்.

களுத்துறை சிறைச்சாலை படுகொலை

ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்க ஆட்சியில் 12- 12- 1997 இல் களுத்துறை நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் இடம்பெற்ற வேளை இச்சிறைச்சாலையில் மொத்தம் 137 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இப்படுகொலை நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் ங்களக்கைதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களே தமிழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த வார்ட் D சிறையின் கதவை சிங்களக்கைதிகளுக்கு திறந்து விட்டு உதவினர்.சிறை அதிகாரிகள் முன்பாகவே தமிழர்கள் மூவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களும் தமிழ் அரசியல் கைதிகள்.

பிந்துனுவெவ தடுப்பு முகாம் படுகொலை

ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்க ஆட்சியில் 25-10 – 2000 அன்று மத்திய மாகாணத்தில் பண்டாரவளையில் இருந்த பிந்துனுவெவ என்ற இடத்தில் இருந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 27 பேர் சிங்களக் காடையர் கும்பலினால் வெட்டியும் குத்தியும் அடித்தும் எரித்தும் படு கொலைசெய்யப்பட்டனர். அன்று அதிகாலையில் தடுப்பு முகாமின் சுற்றுப் புறத்தில் இருந்த சிங்களக் கிராம காடையர்கள் நூற்றுக்கணக்கானோர் கத்திகள், வாள், பொல்லுகள் எடுத்துக்கொண்டு தடுப்பு முகாமிற்குள் நுழைந்து அங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் இளைஞர்களை வெட்டிக் கொன்றனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர் .இக் கொடூர சம்பவத்திற்கு முதல் நாளே அம்முகாமில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 09-11-2012வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் சோதனையின் போது கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும்இடையே ஏற்பட்ட மோதலில் . கைதிகள் 27 பேர் கொல்லப்பட்டனர்..இதில் பெரும்பான்மையானோர் சிங்களக் கைதிகள்.

மகர சிறைச்சாலை படுகொலை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில்29-11- 2020 மற்றும் 30-11-2020 ஆகியதினங்களில் மகர சிறைச்சாலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், கைதிகள் தங்களுக்கு PCR பரிசோதனை மற்றும் பாதுகாப்பு கோரி நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தீவைப்பால் 11 கைதிகள் பேர் கொல்லப்பட்டனர். அனைவரும் சிங்களக் கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை படுகொலை

இவ்வாறு தொடராக சிறைச்சாலைகளில் வன்முறைகள் , படுகொலைகள் இடம்பெற்று வந்த நிலையில்தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் கடந்த 05-07-2026 மற்றும் 06-07-2026 ஆகிய இரு தினங்கள் சிறைச்சாலைக்குள் இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் பெரும் சிறைக்கலவரமாகவெடித்ததில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி, வாள் வெட்டுக்களினால் 8 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் என 30பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் அதிகளவானோர் சிங்களக்கைதிகள், சிறை அதிகாரிகள்.

இதுவரை இலங்கைச் சிறைகளில் படுகொலைகளுக்குள்ளான
83 தமிழரும் 68 சிங்களவரும்

1983 ஆம் ஆண்டிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப்படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை மற்றும் தமிழ் கைதிகளை இலக்கு வைத்தவை. இந்த இனரீதியிலான தாக்குதல்களில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, 2020 மற்றும் சமீபத்திய 2026 சம்பவங்கள் சிறை நிர்வாகக் குறைபாடுகள், போதைப்பொருள் கும்பல் மோதல்கள் மற்றும் கைதிகளின் கிளர்ச்சிகள் காரணமாக ஏற்பட்டவை . இதில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர் . இவர்களில் 8 பேர் சிறை அதிகாரிகள். பலியானவர்களில் அதிகளவானோர் சிங்களவர்கள்.

இலங்கை வரலாற்றில் சிறைச்சாலைகளுக்குள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வன்முறைகள் படுகொலைகள் இடம்பெற்றபோது பொலிஸார், சிறைக்காவலர்கள் மற்றும் ஆயுதப்படையினர் உயிரிழந்த ,காயமடைந்த சம்பவங்கள் இல்லை. ஏனெனில் இவர்களின் ஆதரவுடனேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதான வன்முறைகள் , படுகொலைகள் இடம்பெற்றன. ஆனால் வெலிக்கடை, மகர ,நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்குள் சிங்களக் கைதிகளுக்கிடையிலான வன்முறைகளின்போது அவற்றை கட்டுப்படுத்த முயன்ற 7 சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

சிறைகளும் கைதிகளும்

இலங்கையில் சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைகள், திறந்தவெளி முகாம்கள் மற்றும் தற்காலிக தடுப்புக்காவல் நிலையங்கள் என மொத்தம் 60 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளை வைத்திருக்கவே இடமுள்ள போதும், தற்போது இங்குள்ள சிறைச்சாலைகளிலுள்ள மொத்தக் கைதிகள் எண்ணிக்கை சுமார் 42,034 பேர்.இதில் விளக்கமறியல் கைதிகள் சுமார் 31,031 பேர் (இது மொத்த எண்ணிக்கையில் 73.8% ஆகும். அதாவது தண்டனை பெற்றவர்களை விட வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்களே சிறைகளில் அதிகம்).தண்டனை பெற்ற கைதிகள் சுமார் 11,003 பேர் உள்ளனர் .இந்த சிறைச்சாலைகளில் ஆண் கைதிகள்: சுமார் 39,789 பேர் (94.7%)பெண் கைதிகள்: சுமார் 2,245 பேர் (5.3%) என்ற வகையில் உள்ளனர் .

இதேவேளை இலங்கையில் 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு மரணதண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், நீதிமன்றங்களால் தொடர்ந்து மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவை பிற்காலத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவது வழக்கம். இவ்வாறான நிலையில் இலங்கை சிறைச்சாலைகளில் மரணதண்டனைக் கைதிகளாக ஆண் கைதிகள் சுமார் 1,150 பேரும் பெண்கைதிகள் சுமார் 50 பேருமாக மொத்தம் 1,200 கைதிகள் மரணதண்டனைத் தீர்ப்புக்குள்ளாகி சிறையிலுள்ளனர்.இதேவேளை ஆயுள்தண்டனைக் கைதிகளாக ஆண் கைதிகள் சுமார் 500 பேரும் பெண் கைதிகள் : சுமார் 20 பேருமாக 520 வரையிலான கைதிகள் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கை சிறைச்சாலைகளின் கடந்த 43 ஆண்டுகால (1983-2026) வரலாறு என்பது, தண்டனை பெற்ற அல்லது விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட மனிதர்களின் கதைகளைத் தாண்டி, நாட்டின் கட்டமைப்புச் சிதைவின் ஒரு வடிவமாகவே திகழ்கிறது. 1983 வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் போன்ற இன ரீதியிலான வன்முறைகள், நாட்டின் இனமுரண்பாடுகள் எத்தகைய உச்சகட்டப் பகையைச் சிறைச் சுவர்களுக்குள்ளும் விதைத்திருந்தன என்பதை நிரூபித்தன. மறுபுறம், அண்மைக்கால பத்தாண்டுகளில் உருவெடுத்துள்ள போதைப்பொருள் கடத்தல் குழுக்களின் வன்முறைகளும், படுகொலைகளும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் இடங்கள் அல்ல.மாறாக, அவை பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாட்டு அறைகளாகவும் அதிகாரப் போட்டி நடக்கும் களங்களாகவும் மாறியுள்ள கசப்பான உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சிறைகளுக்குள் நிகழும் இத்தகைய தொடர் வன்முறைகளும் படுகொலைகளும் வெறும் பாதுகாப்புக் குறைபாடுகள் மட்டுமல்ல. அவை நீதித்துறை, சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் அரசியல் பின்னணிகளுக்கு இடையே உள்ள ஆழமான முறைகேட்டுப் பிணைப்பின் வெளிப்பாடாகும்.எனவே, வெறுமனே சுவர்களையும் பாதுகாப்புக் கெமராக்களையும் பலப்படுத்துவது மட்டும் இதற்கான தீர்வாக அமையாது. கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், இன ரீதியிலான வெறுப்புணர்வுகளைக் கடந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், சிறை நிர்வாகத்தில் ஊழலை ஒழித்து போதைப்பொருள் மாபியாக்களின் பிடியிலிருந்து சிறைகளை மீட்பது போன்ற தீவிரமான சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை .