LOADING

Type to search

கனடா அரசியல்

இலங்கை வாழ் ‘கலாசூரி’ திவ்யா கஜேன் அவர்களுக்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் வழங்கப்பெற்ற ‘பரத லய ஞான பாரதி’ என்னும் பட்டம்

Share

கலை மலிந்த பூமியாக போர்ச்சூழலுக்கு முன்புவரை மிளிர்ந்து வந்த குரும்பசிட்டி மண்ணின் மகளான ” கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்கள் கனடா வந்துள்ளார். பரத, மிருதங்க கலாவித்தகரான இவரை 14.06.2026 ஞாயிறு மாலை குரும்பசிட்டி நலன்புரி சபை – கனடா வரவேற்று, குறுகிய கால அறிவிப்புடனான ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்தியது. மன்றத்தலைவர் திருமதி. கணேஷ் குகநேசன் தலைமையில் நடந்த இவ்விழாவில் மண்டபம் நிறைந்த உறவுகளோடும் ஊர் மக்களோடும் திவ்யா அவர்களுக்கு ” பரத லய ஞான பாரதி” பட்டம் சூட்டி கௌரவம் செய்யப்பட்டது. அன்றைய நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டு பட்டம் பெற்ற ” கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்களை வாழ்த்திச் சென்றார்கள்.

” கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்களின் கனடா விஜயம் முக்கியமாக தனது மாணவியின் அரங்கேற்றத்தை அழகுற இங்கு நடத்தி அதன் வாயிலாக இங்குள்ள நுண்கலைத்துறை விற்பன்னர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோரின் வாழ்த்துக்கள் தனது மாணவிக்கு கிட்ட வேண்டும் என்பதே. அதனுடன் இணைத்து தனது பிறந்த ஊரான குரும்பசிட்டி பதியைச் சேர்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து செல்வதுமாக அமைந்தது.

” கலாசூரி ” ” விஷவாபிநந்தன ” திவ்யா சுஜேன் அவர்களின் மாணவி நிஷ்கிதா கோகுலராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் இம்மாதம் 26 ஆம் திகதி (26.06.2026) அன்று மாலை 5.30 மணிக்கு கனடா ரிச்மண்ட்ஹில் நகரத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த அரங்கேற்றம் ” அன்பின் வழியது உயிர்நிலை ” என்ற தலைப்பின் கீழ் கருப்பொருளுடன் கூடிய மார்க்கமாக அமைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் “ஞானபாநு ” கலாநிதி ராஜ்குமார் பாரதி அவர்கள் கலந்து இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிப்பதுடன் இசை அமைப்பினையும் வழங்கியுள்ளார்.

அன்றைய அரங்கேற்ற நிகழ்விற்கு திரு அருண் கோபிநாத் , திரு இராமநாதன் கார்த்திகேயன் , திரு மயூரன் கிரிதரன், திரு விஷ்ணு கண்டன்சாதா ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஆய்வு, ஆடலமைப்பு, நட்டுவாங்கம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குநர் ” கலாசூரி ” திவ்யா சுஜேன் அவர்கள் வழங்குகிறார்கள்.

பரதநாட்டிய சுவைஞர்கள் 26-06-2026 அன்று நடைபெறவுள்ள அரங்கேற்ற வைபவத்திற்கும் வருகை தந்து வாழ்த்திச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பெறுகின்றனர். அதற்கான அழைப்பிதழ் இங்கு காணப்பெறுகின்றது.

சத்தியன்- கனடா உதயன்