எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது அமெரிக்கா தடை – சீனா எதிர்ப்பு
Share
சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான டாலியனில் ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், ஈரானின் எண்ணெயை வாங்கும் பல சீன நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மீது தடை விதிப்பதாக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் அந்த நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்கள் அமெரிக்க நிதி அமைப்பை அணுகுவதைத் தடுக்கிறது. இந்த நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தடையை எதிர்ப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்:- “சர்வதேச சட்டத்தில் அடிப்படை இல்லாத சட்டவிரோத ஒருதலைப்பட்சத் தடைகளை சீனா எப்போதும் எதிர்க்கிறது. மேலும், தடைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நீண்டகால அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் போன்ற அதன் தவறான நடைமுறைகளை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்துகிறோம். சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.















