LOADING

Type to search

கனடா அரசியல்

“ஒன்றாரியோ மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் எமது அரசாங்கம் செயற்படுகின்றது”

Share

ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட வைபவத்தின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவிப்பு!

கடந்த 21-04-2026 செவ்வாய்க்கிழமையன்று மாலை கனடா மார்க்கம் நகரில் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட வைபவம் ஒன்றிற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய முதல்வர் டக் போர்ட் அவர்கள் “ஒன்றாரியோ மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் எமது அரசாங்கம் செயற்படுகின்றது. அத்துடன் அமெரிக்க அதிபரின் வரவிதிப்பு எமது மாகாணத்தையும் அதிகளவு பாதிக்கின்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என்றவகையில் நான் அடிக்கடி பயணங்களை அமெரிக்காவிற்கு மேற்கொள்கின்றோம். அங்குள்ள முதலீட்டாளர்களை ஒன்றாரியோ மாகாணத்தில் உற்பத்திகளை ஆரம்பிக்கும் படி கேட்டுக்கொண்டு அதில் பல பயன்களைப் பெற்றுள்ளோம். எமது மாகாணத்தில் மின்சார உற்பத்தியைப் பெருக்கி அதனை அமெரிக்காவிற்கும் விற்பனை செய்வதற்கும் நாம் எடுத்த முயற்சிகள் அதிக பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அதே போன்று இன்று இந்த வைபவத்தை ஏற்பாடு செய்த மாகாண அரசாங்கத்தின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ஒரு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளராக பணியாற்றி எமது மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர் தனது பணிகளைச் சரியாகவே ஆற்றிவருகின்றார் என்றும் புகழாரம் சூட்டினார் டக் போர்ட் அவர்கள்

மேற்படி வைபவத்தில் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் சோமசுந்தரம் அவர்களும் கலந்து கொள்ள அவரையும் முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் கனடாவில் பல்லினப் பத்திரிகைகள் சந்திக்கும் சவால்களை உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவர் என்ற வகையில் அவரது உரையாடலை கவனத்துடன் செவிமடுத்த ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களும் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் தமது அரசாங்கம் பொறுப்பான அமைச்சர்களுடன் உரையாடி விரைவில் மாகாணத்தில் பல மொழிப் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்கள்.

Uthayan LJI Journalsit