கண்ணகி கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Share
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கண்ணகி கோயிலுக்கு செல்லும் தமிழக பாதையை சீரமைக்க,அமைய உள்ள அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல். சிலப்பதிகாரத்தின்படி கிபி 2ம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினார் என நம்பப்படுகிறது. இக்கோவில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் புளியங்குடி அருகே மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டம் இணையும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 5000 அடி உயரத்தில் தமிழக எல்லையில் உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் திறக்கப்படும் இக்கோவிலுக்கு சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இக்கோவில் தமிழக எல்லையில் இருந்தாலும், கேரள தொல்லியல் துறை பராமரிப்பு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2022ம் ஆண்டு தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டது. இக்கோவிலின் பராமரிப்பு நிர்வாகம் தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குமுளி அருகே செல்லும் பாதையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் ஜீப் மூலம், கேரளாவின் காப்புக்காடு வழியாக பெரியாறு புலிகள் காப்பகத்தையொட்டி செல்வது எளிதாகும். பெரும்பாலான பக்தர்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். 1976ம் ஆண்டு முதல் தமிழக எல்லையான புளியங்குடி வழியாக பாதை அமைப்பில் தடைகள் உள்ளது. கோவில் தமிழக எல்லையில் அமைந்து இருந்தாலும், செல்லும் பாதையில் சில இடங்கள் கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இரு மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஆனாலும் பக்தர்கள் மத்தியில் எல்லை உணர்வு வலுவாக உள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதியில் கேரள காவல்துறையினர் பூட்ஸ் காலுடன் செல்வதாகவும், கோவிலில், கோவில் அருகே உள்ள பகுதிகளில் காவல்துறையினர் பக்தர்களை கட்டுப்படுத்துவது, அனுமதிக்க மறுப்பது மற்றும் தேவையற்ற கெடுபிடி செய்கின்றனர் என நீண்ட காலமாகவே தமிழக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே போல கண்ணகி கோவில் தமிழகத்திற்கு சொந்தமானது என பல ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டு இருந்தாலும், கேரள மாநிலம் டிஜிட்டல் சர்வே செய்ததன் அடிப்படையில் கண்ணகி கோவில் தங்களுடையது என சொல்லிவருகிறார்கள். கடந்த 2025ம் ஆண்டு கொடி ஏற்றுவதில் உரிமை தகராறு காரணமாக விழா நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வனத்துறை, காவல்துறையினர் வருவாய்த் துறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதில், மீண்டும் விழா நடைபெற்றது. காப்புக்காடு பகுதியான கண்ணகி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்லும் கேரள அரசு, அதே காப்புக்காட்டில் உள்ள சபரிமலைக்கு எக்கட்டுப்பாடுகளும் விதிக்காததுதான் கேரள அரசின் இரட்டைவேடமாகும். இதனை தமிழக அரசு சுட்டிக்காட்டி கண்ணகி கோவிலை மீட்டு, தமிழக பாதையான புளியங்குடி மற்றும் லோயர் கேம்ப் வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் பாதை அமைத்து, கண்ணகி கோவிலை தனதாக்கி கொள்ள, அமைய உள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















