சமாதானத்துக்காக நடப்பது?
Share
“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள். ஏப்ரல் மாசம் 21 ஆம் திகதியில் இருந்து மே மாசம் முதலாம் திகதி வரையிலுமான அவர்களுடைய இந்த நடைப்பயணத்தின் போது அவர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வரவில்லை.தென்னிலங்கையில் பௌத்தர்களாக உள்ள சிங்கள மக்கள் அவர்களை காலில் விழுந்து வரவேற்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியெல்லாம் மலர்களை தூவி அவர்களுக்காக காத்திருந்து ஆசிர்வாதங்களை பெறுகிறார்கள்.உடல் வழங்காதவர்களையும் நோயில் இருப்பவர்களையும் சக்கர நாற்காலிகளில் இருத்தி அந்த பிக்குகள் நடந்து வரும் வழியில் கொண்டு வந்து நிறுத்தி ஆசிர்வாதங்களைப் பெறுகிறார்கள். நடந்து வரும் பிக்குகளை சிங்கள பௌத்த மக்கள் வரவேற்கும் விதம் ஒரு வழிபாடுதான். அதேசமயம் அரசாங்கம் அதை ஒரு கவர்ச்சியான பக்தி அரசியல் நாடகமாக ஒழுங்கமைத்தது என்ற விமர்சனங்களும் உண்டு.

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.அவர்கள் இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள். ஏப்ரல் மாசம் 21 ஆம் திகதியில் இருந்து மே மாசம் முதலாம் திகதி வரையிலுமான அவர்களுடைய இந்த நடைப்பயணத்தின் போது அவர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வரவில்லை.
தென்னிலங்கையில் பௌத்தர்களாக உள்ள சிங்கள மக்கள் அவர்களை காலில் விழுந்து வரவேற்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியெல்லாம் மலர்களை தூவி அவர்களுக்காக காத்திருந்து ஆசிர்வாதங்களை பெறுகிறார்கள்.உடல் வழங்காதவர்களையும் நோயில் இருப்பவர்களையும் சக்கர நாற்காலிகளில் இருத்தி அந்த பிக்குகள் நடந்து வரும் வழியில் கொண்டு வந்து நிறுத்தி ஆசிர்வாதங்களைப் பெறுகிறார்கள். நடந்து வரும் பிக்குகளை சிங்கள பௌத்த மக்கள் வரவேற்கும் விதம் ஒரு வழிபாடுதான். அதேசமயம் அரசாங்கம் அதை ஒரு கவர்ச்சியான பக்தி அரசியல் நாடகமாக ஒழுங்கமைத்தது என்ற விமர்சனங்களும் உண்டு.
அந்த பிக்குகளுக்கு தலைமை தாங்குபவர் பண்ணகார தேரோ. வியட்நாமில் பிறந்து பின் அமெரிக்காவில் குடியேறியவர்.மோட்டோரோலா நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக இருந்தவர்.பின்னர் சன்னியாசம் பூண்டு பிக்குவானவர்.இலங்கையில் ஒரு பெண் அவரிடம் கேட்கிறார் “புத்த பகவானின் போதனைகளின் சாராம்சம் என்ன?”வென்று. அவர் மிகத்தெளிவாகச் சொல்கிறார், “பௌத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை” என்று.
உண்மை.அது அமெரிக்காவிலிருந்து நடைபயணத்தை முன்னெடுத்த அந்த பிக்குகளுக்குப் பொருந்தலாம்.இலங்கைத் தீவின் எல்லாச் சிங்கள பௌத்தர்களுக்கும் பொருந்துமா?
உலகில் தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடமாகக் கொண்டாடப்படும் இலங்கைத் தீவில் பல நூற்றாண்டுகளாக பௌத்தம் ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறதா? அல்லது அரச மதமாக இருக்கிறதா?
புத்த பகவான் இளம் வயதிலேயே அரச போகங்களையும் இல்லறச் சுகங்களையும் துறந்து சன்னியாசி ஆகியவர். அவ்வாறு அரச போகங்களைத் துறந்த அகிம்சா மூர்த்தியின் வாழ்க்கையைப் பின்பற்றுகிறவர்கள் எப்படி பௌத்தத்தை அரச மதமாகப் பயில முடியும்?
இலங்கைத் தீவின் பௌத்த மகா பீடங்களைச் சேர்ந்த முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பிக்குகள் எத்தனை பேர் இப்படி சமாதான நடை நடந்திருக்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் சொகுசு வாகனம்;அவர்கள் அமர்ந்திருக்கும் சிம்மாசனம்; அவர்களுடைய வாழ்க்கை முறை; அவர்களுடைய அரசியல்.. என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதில் எங்கே சன்னியாசம் இருக்கிறது?
இலங்கைத் தீவின் சிங்கள பௌத்தர்கள் புத்தரின் போதனைகளை ஒரு வாழ்க்கைமுறையாகப் பின்பற்றி இருந்திருந்தால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை தோன்றியிருக்காது.தமிழின அழிப்பு நடந்திருக்காது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டிருந்திருக்காது. இலங்கைத் தீவில் மிகப் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட விடயங்களில் ஒன்று பௌத்தம்.
இவ்வாறு அரச மதமாக அரச போகங்களை அனுபவிக்கும் ஒரு மதப் பிரிவாக, அரசியலமைப்பில் ஏனைய மதங்களை விடவும் விசேஷமான முன்னுரிமைகளை அனுபவிக்கும் ஒரு மதமாகக் காணப்படும் இலங்கைத் தீவின் தேரவாத பௌத்தமானது, ஒரு வாழ்க்கை முறையாக இல்லை என்பதற்கு இதுவரையிலும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையே ஓர் உதாரணமாகும்.
சமாதானத்துக்கான நடை பயிலும் அந்த பிக்குகளை சாதாரண சிங்கள மக்கள் வழிபடுகிறார்கள்.உயர்வாகப் போற்றுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். அந்த பிக்குகளின் கால்களை பிடித்துக் கொண்டு அழுகிறார்கள்..உண்மையான சன்னியாசிகள் சாந்த சொரூபிகளாக நடை பயிலும் போது அவர்களை சிங்கள பௌத்தர்கள் மதிப்பார்கள் என்பதை அது காட்டுகிறதா? உண்மையான சன்னியாசிகள் உபதேசித்தால், உண்மையான சிங்கள பௌத்தர்களின் மனதில் மாற்றங்களை விதைக்கலாம் என்பதை அது காட்டுகிறதா?
13 பிக்குகளோடு ஒரு நாயும் சேர்ந்து வருகிறது. அது இந்தியாவில் ஒரு தெரு நாயாக இருந்தது. இந்த பிக்குகளோடு அதுவும் சேர்ந்து நடக்கத் தொடங்கியது. அது ஒரு வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்ற பின்னரும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு அலோக்கா என்று பெயர். அலோக்கா என்றால் ஒளி என்று பொருள்.
சமாதானத்துக்காக ஏன் நடக்க வேண்டி வருகிறது? ஏனென்றால் சமாதானம் இல்லாத போது, அல்லது மோதல்கள் முரண்பாடுகள் உள்ளபோது, அல்லது மோதல்களுக்கான காரணங்கள் தொடர்ந்தும் பேணப்படும் போது, அங்கே சமாதானத்துக்காக நடக்க வேண்டி வருகிறது.
பிக்குகள் சமாதானத்துக்காக நடப்பது என்பது பௌத்த பண்பாட்டில் புதியது அல்ல. அது அவர்களுடைய தவத்தின் ஒரு பகுதி;தியானத்தின் ஒரு பகுதி. கம்பூச்சியாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே யுத்த பிரதேசத்துக்குள்ளேயே புத்த பிக்குகள் உயிரைத் துச்சமாக மதித்து நடந்து சென்றிருக்கிறார்கள்.அதுபோலவே இலங்கைத் தீவிலும் முதலாம்கட்ட ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பாணத்தின் தெருக்களில் சில யப்பானிய பிக்குகள் நடந்து திரிந்தார்கள்.யாரோடும் உரையாடாமல்,கைகளில் வைத்திருந்த ரபானை மெல்லத் தட்டியபடி யாழ்ப்பாணத்தின் உள் ஒழுங்கைகள் தோறும் நடந்து திரிந்தார்கள். அவர்களில் ஒருவர் 1984,மார்ச் மாதம் யாழ்ப்பாணம்,மத்தியூஸ் வீதிச் சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் அவர் கொல்லப்பட்ட இடத்தில் 41 ஆண்டுகளின் பின் அவரை நினைவு கூர்ந்தார்கள்.
1980 களின் முற்பகுதியில் சமாதானத்துக்காக யப்பானிய பிக்குகள் நடக்கத் தொடங்கியதில் இருந்து 2006லும் அதாவது கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின்னரும் அவ்வாறு நடக்க வேண்டியிருக்கிறது. தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று வர்ணிக்கப்படும் ஒரு தீவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பௌத்த பிக்குகள் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமாதானம் அவர்கள் நடந்து சென்றடையும் தூரத்தில் இல்லை என்பதைத்தான் தையிட்டி விகாரை விவகாரம் உணர்த்துகின்றதா?
இந்த சமாதானத்துக்கான நடை வடக்கு கிழக்கிற்கு வரவில்லை. பெருமளவுக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்த ஆலயங்களை நோக்கித்தான் அந்த நடை நடந்திருக்கிறது. ஏன் அவர்கள் வடக்குக் கிழக்குக்கு வரவில்லை?
இலங்கைத் தீவில் சமாதானத்துக்காக நடக்க ஒரு நாடு, நடக்காமல் விட ஒரு நாடு என்று இரண்டு நாடுகள் உண்டா? அல்லது அதற்கு வேறு காரணங்கள் உண்டா?
சமாதானத்துக்கான கூட்டு உளவியலைத் தயார்படுத்தும் வேலைகளை தெற்கிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று பிக்குகள் சரியாகவே கணித்திருக்கிறார்களா?
2014ஆம் ஆண்டு நான் நோர்வேக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு குறிப்பிட்ட புரொடஸ்தாந்து கிறிஸ்தவப் பிரிவின் முக்கியஸ்தரைச் சந்தித்தேன். அவருடைய ஆலயம் தமிழ் தஞ்சம் கோரிகளில் ஒரு பகுதியினருக்கு புகலிடமாக இருந்தது என்று கூறப்பட்டது. அவருடனான உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் கேட்டார், “ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியோடு இலங்கையில் சமாதானத்தை ஸ்தாபிப்பதற்கான முன்னெடுப்புகளை எந்த மதப்பிரிவின் ஆலயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்?” என்று. அவருக்கு நான் சொன்னேன் “அதை பௌத்த ஆலயங்களில் இருந்து தொடங்குவது பயன்பொருத்தமாக, நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும்” என்று.ஏனென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பௌத்த ஆலயங்களில் பிரசங்கம் செய்யும் பிக்குகள் நினைத்தால் சமாதானத்துக்கான கூட்டு உளவியலை தயார்படுத்தி இருந்திருக்கலாம்.மாறாக ஒரு இனத்தினுடையதும் மதத்தினுடையதும் மேலாண்மையை ஆதரிக்கும் பிரசங்கங்கள்தான் அங்கே அதிகமாக நடக்கின்றன என்று கூறப்படுகிறது.
எனவே எங்கிருந்து இன,மத,மொழிப் பல்வகைமைக்கு எதிரான கருத்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனவோ, அங்கிருந்துதான் சமாதானத்துக்கான பெரு விருப்பையும் திடசங்கற்பத்தையும் உற்பத்திசெய்ய வேண்டும்.எனவே தெற்கில் சமாதான நடை நடந்ததில் ஒரு பொருத்தம் உண்டு.
அதேசமயம் அவர்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு குறிப்பாக தையிட்டிக்கு ஒரு நடை நடந்து வந்திருந்திருந்தால் இலங்கைத் தீவில் ஏன் சமாதானம் ஏற்படவில்லை என்பதற்கான ஆகப்பிந்திய காரணத்தை கண்கூடாகக் கண்டிருப்பார்கள்.
ஒருபுறம் தெற்கில் சமாதானத்துக்கான நடை. இன்னொரு புறம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில்,ஒரு தொகுதிபிக்குகள் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் வடக்கில் தையிட்டியில் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்போவதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.அதற்காக காணிகளை அளவிடப் போவதாகவும் நாட் குறித்திருந்தது. ஆனால் அரசாங்கம் காலத்தை கடத்தி தங்களை ஏமாற்றுகிறது என்று காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.கடந்த செவ்வாய்க்கிழமையும்கூட காணி உரிமையாளர்கள் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் காணி அளவிடப்படவில்லை.
ஒருபுறம் சமாதானத்துக்கான நடை. அங்கே அன்பும் கருணையும் பக்தியும் பெருகியோடுவதாக சிங்கள ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது.இன்னொரு புறம்,வடக்கில் உயர் பாதுகாப்பு வலையத்தின் பாதுகாப்பு நிழலில் கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரை அமைந்திருக்கும் காணிகளின் சொந்தக்காரர்கள் நீதி கிடைக்காமல் தொடந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.சமாதானம் நடந்து வந்த நாடும், நடந்து வராத நாடும்?















