LOADING

Type to search

இலங்கை அரசியல்

சிறுமி துஷ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரர் குறித்து உத்தரவிட மறுத்த நீதிபதி!

Share

சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, புனித நகரமான அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்த உத்தரவை பிறப்பிக்க தவறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் தமக்கு முன்பாக முன்னிலைப்படுத்தவிலை் என்பதாலும், இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தமக்கு முறையான உத்தியோகபூர்வ அறிக்கையை அளிக்காமையாலும், சந்தேகத்திற்குரிய தேரரை மேலும் காவலில் வைக்க தமக்கு அதிகாரம் இல்லை என அனுராதபுரம் பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவத்தில் சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்னவை உடனடியாகக் கைது செய்து, மே 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டார்.

மே 8ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் முன்வைக்கப்பட்ட நகர்த்தற்பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிகார சபையால் முன்வைக்கப்படட விளக்கத்தின் அடிப்டையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பல்லேகம ஹேமரத்ன தேரர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டமைக்கு அமைய, கொழும்பு நவலோக வைத்தியசாலைக்குச் சென்ற கொழும்பு இல. 08 நீதிபதி, அனுராதபுரம் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய தேரரை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 12ஆம் திகதி தேரரை அனுராதபுரம் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், 12ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பல்லேகம ஹேமரத்ன தேரர் பல சிறப்பு வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருப்பதால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இயலாது என வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறி, அனுராதபுரம் சிறை கண்காணிப்பாளர் பிரசாத் பிரேமதிலக்க நீதிபதியிடம் ஒரு வைத்திய அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதற்குப் பின்னரே, அனுராதபுரத் நீதிபதி சசிந்து விக்ரமரத்ன, சந்தேகநபரை விளக்கமறியலில் ‘வைக்க மறுத்து’ ஓர் உத்தரவைப் பிறப்பித்தார்.

எனினும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவத்தில் பல்லேகம ஹேமரத்ன தேரரை ஒரு முக்கிய சந்தேகநபராகக் குறிப்பிட்டு, அவரை உடனடியாகக் கைது செய்யும் ஆரம்ப உத்தரவை அனுராதபுரம் பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்னவே பிறப்பித்தார்.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை அல்லது அவர் சார்பில் விளக்கங்களை முன்வைக்க அவருக்கு எந்த சட்ட உதவியும் வழங்கப்படவில்லை என்பதோடு, பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தவில்லை என இதற்கு முன்னர் பலமுறை கூறியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

எனினும், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், அனுராதபுரம் நீதிபதி நீதிமன்றத்தின் பெரும்பான்மையான சட்டத்தரணிகள் குழுவும், சந்தேகநபரான தேரருக்கா தாமாக முன்வந்து முன்னிலையாகியிருந்தனர்.

“இந்தச் சம்பவம் ஒரு கடுமையான சிறுவர் துஷ்பிரயோக வழக்கு என்பதாலும், குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் நாட்டில் உள்ள ஒரு சக்திவாய்ந்த பௌத்த துறவி என்பதாலும், குறைந்தபட்சம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்கள் தரப்பை வாதத்தை முன்வைத்திருந்தால், நிலைமை இன்னும் சாதகமாக இருந்திருக்கும்,” என இந்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த முறை, அந்த அதிகார சபையே ஒரு மனுவைத் தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு அழைத்தது. அதன் பிறகு, அந்தத் தேரரை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது என்ன நடக்கக்கூடும் என்பதை சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் தயாராக நீதிமன்றத்திற்கு வந்து, இந்த சிறுமியைப் பற்றி நீதிபதியிடம் தெரிவித்திருக்க வேண்டும். இப்போது, நாம் பார்ப்பது போல், இந்த சிறுமி தனியாக இருக்கின்றாள்,” என தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த சட்டத்தரணி கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா பால் ராஜ், சில நாட்களுக்கு முன்பு, தான் நிபந்தனையின்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கமே இருப்பதாகவும், சந்தேகிக்கப்படும் தேரரின் பக்கம் இல்லை எனவும் கூறியிருந்தபோதிலும், சந்தேகநபரான தேரரின் நிரபராதித்தன்மைக்கு ஆதரவாக பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒரு அதிகாரி கூட ஏன் முன்னிலையாகவில்லை என்பதை விளக்குவது அதிகாரிகளின் பொறுப்பு என அதிகார சபைக்குள் உள்ள சிலரே கூறுகின்றனர்.