“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை வெளியீட்டில் இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேச்சு
Share
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இந்நிகழ்வில் நடிகர் பலராம் ஜெ பாலாஜி பேசும்போது, “கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை வியாபாரம் எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன காணொளிகள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே கதாநாயகனாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் பேரரசு, “பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக ‘சிவகாசி’ படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். ‘கோடம்பாக்கம் ஏரியா…’ பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர். நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்” என்றார்.
















