டில்லியில் பிரதமர் மோடியை கேரள முதல் – அமைச்சர் சதீசன் சந்தித்தார்
Share
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாக சதீசன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளம் மாநில முதல் அமைச்சராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வி.டி.சதீசன் டில்லி சென்றார். டில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லி சென்றடைந்த வி.டி.சதீசன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டசபைத் தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தநிலையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் முதல்-அமைச்சர் சதீசன். கேரளம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாகவும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் சதீசன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
















