“தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது”
Share
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி அனா லொரெனா டெல்காடியோ யாழ்ப்பாண மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
“தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது”
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளை எங்கே, என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஒருவர் வடக்கில் வலியுறுத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது முதல், தமது கணவன்மார்கள், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களைத் தேடி 2017ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களை ஆரம்பித்த தமிழ் பெற்றோர்களில் குறைந்தது 400 பேர் இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளனர் என்பது பிராந்திய மனித உரிமை செயற்பாட்டாளர்களின் தகவல்களுக்கு அமைய தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் தொடர்ந்து பதில்களைத் தேடும் வரையில், காணாமல் ஆக்கப்படும் குற்றம் தொடர்ந்துகொண்டே இருப்பதாக பலவந்தமாக அல்லது விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்படுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் பிரதிநிதி அனா லொரெனா டெல்காடியோ (Ana Lorena Delgadillo) சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தண்டனையின்மை நிலை தொடர்ந்து காணப்படுவது குறித்தும் அவர் இதன்போது, தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
“தண்டனையின்மை நிலையானது, மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும். ஒரு சமூகத்தின் மீது பாரிய அளவில் தண்டனை விலக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது, அதிகாரிகளால் அனுப்பப்படும் செய்தி என்னவென்றால், பலவந்தமாக காணாமல் ஆக்குவதற்கு அனுமதி உள்ளது என்பதாகும். அதனால்தான் தண்டனை விலக்கீடு தொடர்பில் எமது தீவிர கவனம் செலுத்தப்படுகிறது”
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட நீதிக்கான நடை பயண கண்காட்சியைத் திறந்து வைப்பதற்கு, பலவந்தமாக அல்லது விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்படுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் பிரதிநிதியுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் இணைந்திருந்தார். இதன்போது உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் கடந்தகால நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கேற்ப காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி கிடைப்பதற்காக உண்மையை வெளிக்கொணரும் விடயத்தில் OMP அலுவலகம் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர்.
“தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து மீண்டும் மீண்டும் பேசி வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் அறிக்கைகளுக்கும் அதன் உறுதியான நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது” ஸ்மிருதி சிங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
நம்பகமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கும், சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், சாத்தியமான சந்தர்ப்பங்களில் உலகளாவிய நீதித்துறை அதிகார வரம்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவிலான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு, சர்வதேச சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது என அவர் நினைவூட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டின் நடவடிக்கைகள், நான்காவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளில் 1974ஆம் ஆண்டு பொலிஸ் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது பேரை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின்னர் அவர்கள் தந்தை செல்வா மண்டபத்திற்கு, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை வேன் ஒன்றை முன்னிலைப்படுத்தி, எதிர்ப்பு பேரணியாகச் சென்றனர்.
வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தையும், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சனி விளக்கியுள்ளார்.
“சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான கேள்வியாக உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நாம் ஏன் முழுமையான ஒரு பொறிமுறையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும். இது ஒரு நிறுவனத்தை எதிர்ப்பதாக முன்வைக்கப்படும் கேள்வி அல்ல. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை உருவாக்கியதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் கோரும் நீதி கிடைக்காது என்பதே எமது குடும்பங்களின் அனுபவமாக உள்ளது.”
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என்பது போரினால் பாதிக்கப்பட்டவர்கள் கோரும் நீதியை வழங்கக்கூடிய இடம் அல்ல என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒரு குடும்பம் தமது உறவினர்களின் பெயர்களை ஒரு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக பல ஆண்டுகளாகப் போராடவில்லை. அவர்கள் கேட்பது எமது ஆழமான கேள்விகளுக்கான பதில்களையே. எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை யார் அழைத்துச் சென்றார்கள்? அவர்களை எங்கே அழைத்துச் சென்றார்கள்? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இல்லையென்றால், அவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு வழக்கை மூடுவது நீதியானது அல்ல. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஒரு முக்கியமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் அது குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான மாற்று நிறுவனமாக இருக்க முடியாது.”
பல ஆண்டுகளாக தமிழ் தாய்மார்கள் கோரி வரும் நீதியை வழங்குவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சனி இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளார்.
“உண்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டுமெனில் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரச மற்றும் இராணுவ ஆவணங்களைப் பெற வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். தடுப்புக்காவல் மற்றும் ஒப்படைப்பு தொடர்பான தொடர்ச்சியான பதிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மனித எச்சங்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.”
இருபத்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான காணாமல் ஆக்கப்பட்ட முறைப்பாடுகளை எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்ததில், உயிருடன் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 31 பேரை கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவராக ஐந்தாவது ஆண்டிலும் பணியாற்றி வரும் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஒகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது, சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த உயிருடன் இருப்பதாகக் கூறிய 31 பேர் தொடர்பான தகவல்களை கோரி நடத்தப்பட்ட, குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட தாய்மார்கள் மீது பொலிஸார் மேற்கொண்டஅத்துமீறிய செயற்பாடுகளின் காட்சிகளை பிராந்திய ஊடகவியலாளர்கள் காணொளியாக பதிவு செய்திருந்தனர்.















