LOADING

Type to search

கனடா அரசியல்

தமிழ்க் கனடியர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்த மார்க்கம் வாகன விபத்து வழக்கின் தீர்ப்பு!

Share

*மூன்று உயிர்களை அநியாயமாகப் பலியெடுத்த கவனயீனம் கொண்ட சாரதியை எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்த நியுமார்க்கட் நீதிமன்ற நீதிபதி!

* மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த குடும்பத் தலைவர் புவனேந்திரன் பூபாலசிங்கம். நீதி மன்ற வளாகத்தினுள் கண்ணீர் விட்டுக் கதறியதால்
திரண்டிருந்த தமிழ்க் கனடியர்கள் ஏக்கம் நிறைந்த இதயங்களோடு நீதி கேட்டு நின்ற காட்சி!

நியூமார்க்கட் நீதி மன்றத்திலிருந்து கனடா உதயன் செய்தியாளர்

கனடாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய். மகள் மற்றும் மகன் ஆகிய இலங்கைத் தமிழர்கள் மூன்று பேர் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்ட வழக்கில், சாரதி மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்து அநீதியான முறையில் தீர்ப்பை வழங்கியண விடயம் கனடாவில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பைக் கேட்ட பதீரன், நிலுஷ்சனா ஆகியோரின் தந்தையும், ஸ்ரீரதியின் கணவருமான புவனேந்திரன் பூபாலசிங்கம், கடவுளே, என் வாழ்க்கையே போய்விட்டது, மூன்று உயிர்கள், இரண்டு சின்னப் பிள்ளைகள், இன்று எனக்கு நேரிட்டது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம் என கண்ணீர் விட்டுக் கதற, நீதிமன்றம் முன் கூடியிருந்தவர்கள், “நீதி வேண்டும்” என முழக்கமிட்டுள்ளார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மார்க்கம் நகரில், இலங்கைத் தமிழர்களான ஸ்ரீரதி சண்முகநாதன் (வயது 52), அவரது பிள்ளைகளான பதீரன் புவனேந்திரன் (வயது 21), நிலுஷ்சனா புவனேந்திரன் (வயது23) ஆகியோர் கார் ஒன்றில் ஒரு நான்கு சந்தியைத் தாண்டிச் செல்ல முயன்ற போது தனது பக்கத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டிய சிவப்பு விளக்கு இருந்தும் கனரக வாகனம் ஒன்றை செலுத்தி வந்த கொலையாளியான அந்தச் சாரதி சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததையும் புறக்கணித்து மேற்படி மூவர் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது தனது கனரக வாகத்தை மோதி இந்த விபத்து ஏற்பட்டது. அன்றைய தினம் ஸ்தலத்திலே மகனும் மகளும் வாகனத்தினும் அகப்பட்டுக் கொல்ல்பபட தாயார் ஶ்ரீரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பெற்று சில வாரங்களில் மரணத்தை தழுவினார் என்பது இந்த விபத்து பற்றிய கதையாகும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலியான துயரத்திலிருந்து விடுபட அவர்களுடைய குடும்பம் போராடிக்கொண்டிருந்த நிலையில், அந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அக்குடும்பத்துக்கும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பைக் கேட்ட பதீரன், நிலுஷ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீரதியின் கணவருமான புவனேந்திரன் பூபாலசிங்கம், விபத்து நடந்த நாள் தொடக்கம் தன் குடும்பத்தையே பறிகொடுத்த பாதிப்போடு நீதிமன்றம் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தகுந்த தீர்ப்பைவழங்கும் என என எதிர்பார்த்து அந்த நாளுக்காக காத்திருந்த நிலையில் இந்த அபத்தமான தீர்ப்பைக் கேள்வியுற்றதும் நீதி மன்றத்திற்கு உள்ளேயே கதறி அழத் தொடங்கினார். ” கடவுளே, என் வாழ்க்கையே போய்விட்டது, மூன்று உயிர்கள், இரண்டு சின்னப் பிள்ளைகள் ஆகியோரை நான் இழந்து நீதித் தேவதை எங்கள் குடும்பத்தை திரும்பிப் பார்க்கவில்லையே? என்று புலம்பினார், அத்துடன் “இன்று எனக்கு நேரிட்டது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம் என கண்ணீர் விட்டுக் கதற, நீதிமன்றம் முன் கூடியிருந்தவர்கள், “நீதி வேண்டும்” “இது அராஜகம்” என கோசங்களை எழுப்பி சத்தமிட்டார்கள்.
சுமார் மூன்று வருடங்களாக நடைபெற் இந்த வாகன விபத்து வழக்கின் தீர்ப்பு கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமையன்று கனடாவின் நியூமார்க்கட் நகர நீதி மன்றத்தில் வழங்கப்பெற்ற போது நீதி மன்றில் கூடியிருந்து 500க்கும் மேற்பட்ட தமிழ்க் கனடியர்கள் வியப்புடனும் கவலையுடனும் நீதிமன்ற அறையை விட்ட வெளியேறினர்.

ஆனால் கொலையாளியான கனரக வாகனச் சாரதியா என்னும் கொடியவன் மற்றும் அவனது குடும்பத்தினரை நீதி மன்ற அனுமதியோடும் ரகசிய வழிகள் ஊடாக வெளியேற்றி பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதாகவும் அங்கு வந்திருந்த அன்பர்கள் சிலர் எமக்குத் தெரிவித்தனர்.
இத இவ்வாறிருக்க, வாகனம் ஓட்டும்போது விபத்தை ஏற்படுத்தி மூன்று உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த ட்ரக்கின் சாரதியான அந்தோனி பக்லியேரி (Anthony Baglieri) மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக மெளமனமாக நீதி மன்ற அறையை விட்டு நீங்கி வெளியே வந்து ஒன்று திரண்டனர்.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியான மார்க் எட்வர்ட்ஸ் ( Mark Edwards), அந்த விபத்து துயரத்தை உருவாக்கியது உண்மைதான் என்றாலும், சாரதியின் செயல்கள் குற்றச்செயல்கள் அல்ல என்று பொலிசார் மற்றும் எதிரியின் வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்வைத்த ஆதாரங்கள் மற்றும் தான் நடத்திய குறுக்கு விசாரணைகள் போன்றவற்றிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்து மேற்படி எதிரிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியமை கனடிய நீதித்துறை வரலாற்றில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் பதிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.. இனிவரும் நாட்களில் இவ்வாறு கவனயீனத்துடன் வீதிகளில் அப்பாவிகளைக் கொல்லும் சாரதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை சாதகமாக வைத்து தண்டனைகளின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் சாத்தியம் இன்று எழுதப்பட்டுள்ளது என்று நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தமிழ்பேசும் சட்ட ஆலோசகர் ஒருவர் கனடா உதயனுக்குத் தெரிவித்தார்.

ட்ரக் சாரதியான அந்தோனி வாகனம் ஓட்டும்போது மது அருந்தியிருக்கவில்லை என்றும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டவில்லை என்றும் கூறியுள்ள நீதிபதி, வாகனம் ஓட்டும்போது முகத்தில் சூரிய ஒளியின் தாக்கம் இருந்ததால் , ட்ரக்கில் சாரதி அமர்ந்திருந்த இடம் அவரால் மற்ற வாகனங்களை சரியாக பார்க்கும் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை எனவும் மற்றும் எதிரே அவசர உதவி வாகனங்கள் வந்ததால் அந்த வாகனங்களில் எரிந்துகொண்டிருந்த பளீர் ஒளி விளக்குகள் ஆகியவை அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டதாக நீதிபதி பொறுப்பற்ற முறையில் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். எனினும் மேற்படி விபத்து நடந்த சந்தியில் கொல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனத்திற்கு அப்போது பச்சை விளக்கும் எதிரியான சாரதி செலுத்திய கனரக வாகனத்திற்கு சிவப்பு விளக்கும் எரிந்து கொண்டிருந்ததை பொலிசார் அங்கு பெறப்பெற்ற ஒளிப்பதிவு கமராக்களில் இருந்து அறிந்து கொண்டாலும் அவற்றுக்கு மாறாகவும் எதிரிக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை அங்கு கூடிய 500க்கும் அதிகமான தமிழ்க் கனடியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது அன்றைய தினம் தமிழ்க் கனடியர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்த மார்க்கம் வாகன விபத்து வழக்கின் தீர்ப்பாக அமைந்தமை எதிர்பார்த்திராத ஒன்று என்றே கருதப்படுகின்றது

மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த சாரதி தனது 12 ஆண்டுகால பணியில் ஒருமுறை கூட விபத்தை ஏற்படுத்தியதில்லை என்றும், தான் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது என நினைத்ததாகவும் , அவரது கவனத்தை திசை திருப்ப காரணமாக இருந்த விடயங்கள் அவரது தரப்பு வாதத்தை விளக்குவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நீதிபதி அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கினார்

இந்த தீர்ப்பு, உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இது நியாயமல்ல” என அவர்களுடைய குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தாங்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் குடும்பத் தலைவியான தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு 17ம் திகதி அன்றைய தினம் வழங்கப்படவுள்ளமை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இது இவ்வாறிருக்க, தனது குடும்ப அங்கத்தவர்கள் சகலரையும் இழந்த புவனேந்திரன் அன்றைய வழக்குக் குறித்தும் உயிரிழந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக தன்னுடன் இணையுமாறும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளுக்காகத் தனித்தே நீதிமன்றம் சென்று வந்தமையையும் தாயகம் சார் நலன்களுக்காக தான் செயற்பட்ட விடயங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார்.

ஏப்ரல் 17ம் திகதி அன்றைய தினம் (17) விபத்தில் பலியாகிய தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் எனவும் தன்னோடு வந்து இணையுமாறும் அழைத்த அவரின் அழைப்புக்காகவே பெருந்திரளானோர் நீதிமன்றில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான கொலையாளி வாகன சாரதிக்கு 15 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற விதத்திலேயே மேற்படி வழக்கு தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் மக்கள் மத்தியிலும் சட்டத்துறை சார்ந்தவர்கள் மத்தியிலும் கலந்துரையாடப்பெற்று வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.