தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் செய்துள்ளது
Share
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அமைப்பின் தலைவராகத் திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது புஷ்பவனம் குப்புசாமி தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காக 1955 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்” என்ற பெயரில் இது தொடங்கப்பட்டது. பின்னர், 1973 ஆம் ஆண்டில் முத்தமிழைக் குறிக்கும் வகையில் “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழ்ப் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புறக் கலைவடிவங்கள் மற்றும் கலைஞர்களைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு முக்கிய கலாச்சார அமைப்பாகும். இந்த நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தின் பிரபல நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர், திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான நாட்டுப்புறப் பாட்டிற்குப் புத்துயீர் அளித்து அதை மக்களிடம் கொண்டு சேர்த்த்தில் முக்கியமானவர். இவர் இளையராஜா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் போன்ற முன்னனி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல பிரபலமான தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். கலைத்துறையில் இவருடைய பங்களிப்பைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்கு மதிப்புமிக்க கலைமாமணி விருதை வழங்கியுள்ளது















