LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்

Share

பாலியல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டவர்களே அதிகமாக உள்ளார்கள் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

ந.லோகதயாளன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல அத்துடன் இந்த பொருத்தமற்ற கூட்டணியில் பாலியல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்படடவர்களே அதிகம் காணப்படுகின்றார்கள் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

“இந்தக் கூட்டணி இலஞ்ச, ஊழல்களை ஒழிப்பதற்கோ அல்லது நாட்டுக்கு நன்மைகளைச் செய்வதற்கோ உருவானது அல்ல. மாறாக, திருடர்களையும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் பாதுகாப்பதற்கே இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களில் பலர், கடந்த காலங்களில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது பிணையில் இருப்பவர்களாவர். சிறைத்தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான தரப்பினர் அரசை வீழ்த்தத் திட்டமிடுகின்றனர்.” – என்றார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், “எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசை யாராலும் அசைக்க முடியாது. அவர்கள் கூட்டணிகளை அமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்து, மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.” – என்று தெரிவித்தார்.